கொச்சி அருகே சரக்குக் கப்பல் கவிழ்ந்த விபத்தும், கப்பலில் இருந்து ஆபத்தை விளைவிக்கக்கூடிய வேதிப்பொருள்கள் கடலில் கலந்துவரும் அபாயச் சூழலும் மிகுந்த கவலை அளிக்கின்றன. கேரளத்தில் உள்ள விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட எம்எஸ்சி எலிசா 3 என்கிற வெளிநாட்டுச் சரக்குக் கப்பல், மே 24 அன்று கொச்சி அருகே அரபிக் கடலில் கவிழ்ந்தது.
பலத்த காற்றும் கனமழையுமான வானிலை, இன்ஜின் செயலிழப்பு, சமநிலை தவறிய சரக்கு ஏற்றம் போன்ற காரணங்களால் கப்பல் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கப்பலில் பணிபுரிந்த 24 பேரைக் கடலோரக் காவல் படையின் துணையுடன் இந்தியக் கடற்படை மீட்டது.
இதிலிருந்த 600க்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டிகளில் ஏறக்குறைய 12 பெட்டிகளில் கால்சியம் கார்பைடு என்கிற வேதிப்பொருளும் ஒரு பெட்டியில் ரப்பர் கரைசலும் சிலவற்றில் டீசலும் 300க்கும் மேற்பட்ட பெட்டிகளில் எரிபொருளுக்கான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் கிடைக்கும் துணைப்பொருளான ஹெச்.எப்.சி. எண்ணெயும் இருக்கின்றன. மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டிய இவற்றில் சில பொருள்கள், கடல்நீருடன் கலந்துகொண்டிருப்பது பேராபத்தாகக் கருதப்படுகிறது.
கடல் நீரோட்டம், காற்றின் வேகம், அலையின் வேகம் போன்றவை கடலில் எண்ணெய்ப் பரவலை இன்னும் அதிகரிக்கச் செய்யக்கூடும். கேரளத்தில் உள்ள கொல்லம், ஆலப்புழை, திருவனந்தபுரம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள குளச்சல் வரையிலும் கப்பலின் சரக்குப் பெட்டிகள் கரை ஒதுங்கி வருகின்றன. முன்னதாக, கன்னியாகுமரி மேற்குக் கடற்கரை அருகே கடல்நீரில் ஞெகிழி உருண்டைகளைக் கொண்ட ஏராளமான பைகள் மிதந்து வந்தன.
எண்ணெயும் கடல்நீரும் சேர்ந்து ‘எமல்ஷன்’ என்கிற நிலையை அடைந்துவிட்டால், அதை அகற்றுவது மிகவும் கடினம் எனச் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், கப்பலுடனேயே சேர்ந்து மூழ்கிவிட்ட சரக்குப் பெட்டிகளும் உள்ளன. அவற்றில் அடைக்கப்பட்டுள்ள வேதிப்பொருள் கடலின் உயிர்ச்சூழலை மெல்லமெல்ல அழிக்கும் என்பதோடு, காலிச் சரக்குப் பெட்டிகள் மீது மீன்பிடி படகுகள் மோதும் ஆபத்தும் உண்டு. இந்த நிகழ்வு கேரளத்தைத் தாண்டி, தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
கேரள அரசு இந்த நிகழ்வை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது. 2017இல் சென்னை அருகே இரண்டு கப்பல்கள் மோதியதால் கடலில் டன் கணக்கில் எண்ணெய் கலந்த நிகழ்வு பலருக்கு நினைவுக்கு வரக்கூடும். அப்போது எண்ணெயை அகற்றச் சரியான கருவிகள் இல்லாமல் வாளிகளில் அள்ளியதும் முறையான பயிற்சி அற்றவர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டதும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தன. 2023இல் எண்ணூரில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கசிவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தும் அப்பகுதி மீனவர்கள் மீண்டெழப் பல நாள்கள் ஆகின. துறைமுகங்களால் மத்திய, மாநில அரசுகளின் வருவாய் பெருகுகிறது. ஆனால் சுற்றுச்சூழல், சமூகம் சார்ந்த இழப்புகளை நிவாரண உதவிகளால் ஈடுகட்டிவிட முடியாது.
நம் நாடு கப்பல் தயாரிப்பிலும் போக்குவரத்திலும் தொழில்நுட்ப நோக்கில் முன்னேற்றம் அடைந்துள்ள அளவுக்கு, அவை சார்ந்த பேரிடர்களை எதிர்கொள்வதில் முன்னேறவில்லை என்பதையே இதுபோன்ற அசம்பாவிதங்கள் உணர்த்துகின்றன. நடுக்கடலில் ஏற்படும் ஒரு சுற்றுச்சூழல் பாதிப்பு, கடல்வாழ் உயிரினங்களும் மீனவச் சமூகமும் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்தச் சமூகமும் வெவ்வேறு வகைகளில் அதன் விளைவை எதிர்கொண்டாக வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.