கடந்த ஆண்டு வெப்ப அலையால் இந்தியாவில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தாக்கல் செய்யும்படி மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
கோடைக்காலங்களில் நிலவும் சராசரி அதிகபட்ச அளவைவிட, அசாதாரணமான அளவுக்கு வெப்பநிலை அதிகரித்து - தொடர்ந்து நீடிப்பது ‘வெப்ப அலை’ எனப்படுகிறது. இதன் தாக்கம் இந்தியாவின் மத்தியப் பகுதி, வடக்கு, மேற்குப் பகுதிகளில் அதிகம் இருப்பினும், மற்ற பகுதிகளும் இதிலிருந்து தப்ப முடிவதில்லை.
உயிரிழப்புகள் இந்த ஆண்டிலும் தொடராதவாறு, வெப்ப அலையைக் கையாள்வதற்கான செயல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கூறிச் சுற்றுச்சூழல் ஆர்வலர் விக்ராந்த் டோங்கட் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். வெப்ப அலையைத் தவிர்த்தல், கையாளுதல் என்கிற செயல் திட்டத்தை 2019இல் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியிருந்தது. அதிலுள்ள வழிகாட்டல்களைப் பல மாநிலங்களும் மத்திய ஆட்சிப்பகுதிகளும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதே மனுதாரரின் முறையீடு.
மே 21 அன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதற்கு மத்திய அரசின் பதிலைத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் உள்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல், காடுகள் - காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இதுவரை தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வெப்ப அலையால் அதிகரிக்கும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளும் வேலை இழப்புகளும் கோடையின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்போது மட்டும் பேசி மறக்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல என்பதை உச்ச நீதிமன்றம் இதன்மூலம் உணர்த்தியுள்ளது.
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும் இந்திய வானிலை ஆய்வு மையமும் 23 மாநிலங்களுடன் இணைந்து அவற்றுக்கான செயல் திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பம் - புவி அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்பு தெரிவித்தார். அரசின் எந்த ஒரு திட்டமும் செயலாக்கத்தை நோக்கி விரைவாக நகர்வதும் பரவலாக்கம் செய்யப்படுவதும் மிக அவசியம். வெப்ப அலைக்கான தீர்வுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை என்கிற பிரச்சினையும் முடிவுக்கு வர வேண்டும்.
வெப்ப அலையால் பாதிக்கப்படும் முதன்மைப் பிரிவினரான அமைப்புசாராத் தொழிலாளர்கள், திறந்தவெளியில் வசிப்போர், மூத்த குடிமக்கள், வறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், இதயக் கோளாறு உள்ளவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நிழலுடன் கூடிய தற்காலிகத் தங்கும் விடுதிகள் திறக்கப்படுவது, வெயிலுக்குத் தகுந்தபடி வேலை நேரத்தை மாற்றியமைக்க வழிவகுப்பது, வெப்ப அலையால் வேலை இழப்போருக்கு நிவாரண உதவி அளிப்பது போன்றவை அரசுகளின் பொறுப்புகளாக உலக அளவில் வலியுறுத்தப்படுவதை ஆட்சியாளர்கள் மறக்கக் கூடாது.
தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் தங்களுக்கென வெப்ப அலை செயல் திட்டத்தை வகுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்தியா அதிக வெப்பநிலை கொண்ட நாள்களை இனி அதிகம் எதிர்கொள்ளும் என்கிற கணிப்புகளைப் புறந்தள்ளக் கூடாது.
ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் போன்றவை தற்போது வெப்ப அலையை எதிர்கொண்டு வருகையில், கேரளம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் அளவுகடந்த மழை பெய்கிறது. இயற்கையின் போக்கைப் புரிந்துகொண்டு மக்களின் பாதுகாப்பைத் தக்கவைக்கும் பொறுப்பை மத்திய, மாநில அரசுகள் தட்டிக்கழிக்கக் கூடாது.