குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள் வெவ்வேறு வடிவங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் வேளையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல் நம்பிக்கை அளிக்கிறது.
புகுந்த வீட்டினரால் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், ‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005’இன் கீழ் சட்ட உதவி பெறுவதிலும், புகுந்த வீட்டைவிட்டுத் துரத்தப்பட நேர்ந்தால் அவர்கள் தங்குவதற்கான மையங்களை அமைப்பதிலும் உள்ள குறைகளை நிவர்த்திசெய்ய வலியுறுத்தி ஓர் அரசு சாராத் தொண்டு நிறுவனம் (We the women of India) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அதன் மீதான விசாரணையில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திரா சர்மா அடங்கிய அமர்வு, பெண்களைக் குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் மாநில சமூக நலத் துறை சார்பில் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மே 20 அன்று தெரிவித்தது.
இந்தச் சட்டம் குறித்து மக்களிடையே பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சட்ட உதவி, தங்கும் இடம் போன்றவை கிடைப்பதை உறுதிசெய்வதும் இவர்களது முதன்மைப் பணி என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தீர்ப்பு வெளியான நாளில் இருந்து ஆறு வாரங்களுக்குள் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு அதிகாரிகளை மாநில அரசுகள் நியமித்துக்கொள்ளலாம் எனக் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005இன் பிரிவு 8 அறிவுறுத்துகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2013 நிலவரப்படி மகாராஷ்டிர அரசு 3,730 பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.
இவர்களில் 3,484 பேர் ஆண்கள். தமிழ்நாடு, கேரளா, பிஹார், ஒடிஷா உள்ளிட்ட மிகச் சில மாநிலங்கள் மட்டுமே பெண்களைப் பாதுகாப்பு அதிகாரிகளாக நியமித்திருந்தன. பல மாநிலங்களில் ஏற்கெனவே பணியில் இருந்தவர்களுக்குக் கூடுதல் பொறுப்பாக இந்தப் பணி வழங்கப்பட்டது. பெண்கள் பாதுகாப்பில் காட்டப்படும் அலட்சியத்தின் வெளிப்பாடு இது. இதற்கிடையே, பெண்கள் - குழந்தைகள் மேம்பாடு, பாதுகாப்புக்கான மத்திய – மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவரும் நோக்கில் ‘மிஷன் சக்தி’ திட்டத்தை மத்திய அரசு 2022இல் அறிவித்தது.
குடும்ப வன்முறையாலோ பிற துன்புறுத்தல்களாலோ பாதிக்கப்பட்ட பெண்கள் சட்ட உதவி, மருத்துவ உதவி, தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்துவிதமான சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் நோக்கில் நாடு முழுவதும் 802 ‘ஒருங்கிணைந்த சேவை மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள் ‘மிஷன் சக்தி’ திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இந்தக் கண்காணிப்பு போதிய அளவுக்கு இல்லை என்பதைத்தான் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் உணர்த்துகிறது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பான புள்ளிவிவரங்கள் 2022 வரை மட்டுமே தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. குற்றங்களைப் பதிவுசெய்வதில் தொடங்கி, பெண்களை வன்முறைகளிலிருந்து பாதுகாப்பதுவரை மத்திய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் மெத்தனமாகச் செயல்பட்டுவருவது ஏற்புடையது அல்ல. சமூகத்தின் சரிபாதி அங்கமான பெண்களைப் பாதுகாப்பதில் நிகழும் சிறு பிசகுகூடப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை அரசு உணர வேண்டும். ஏனெனில், பெண்களின் பாதுகாப்பு என்பது நாட்டின் பாதுகாப்புக்கு நிகரானது!