‘சமக்ர சிக் ஷா அபியான்’ (எஸ்.எஸ்.ஏ.) என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை 6% வட்டியுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. மத்திய அரசின் நிதியைப் பெறுவதில் நீதிமன்றத்தை நாடும் நிலை மாநில அரசுக்கு ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
ஏற்கெனவே அமலில் இருந்த ‘அனைவருக்கும் கல்வி’ திட்டம், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக் ஷா அபியான் போன்றவற்றை உள்ளடக்கி 2018-19இல் ‘சமக்ர சிக் ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்குத் தேவைப்படும் நிதியில் 60% மத்திய அரசும், 40% மாநில அரசும் வழங்க வேண்டும். இத்திட்டத்துக்கு நடப்புக் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை.
புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அமலாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 2022இல் தொடங்கப்பட்ட ‘பி.எம். பள்ளிகள்’ என்கிற திட்டத்தில் இணைந்தால்தான் எஸ்.எஸ்.ஏ. திட்டத்துக்கு நிதி வழங்க முடியும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தது விமர்சனத்துக்கு வழிவகுத்தது. மும்மொழிக் கொள்கை, 3, 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு போன்ற காரணங்களை முன்வைத்து தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழ்நாடு அரசு, அதன் நீட்சியாக பி.எம். பள்ளிகள் திட்டத்தில் இணையவும் விருப்பம் காட்டவில்லை.
இந்தச் சூழலில்தான் எஸ்.எஸ்.ஏ. திட்டத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. ‘எஸ்.எஸ்.ஏ., புதிய தேசியக் கல்விக் கொள்கை இரண்டும் வெவ்வேறானவை. மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டத்தையும், தேசியக் கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பி.எம். திட்டத்தையும் இணைப்பது அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாதது. எஸ்.எஸ்.ஏ. நிதியைப் பெறுவதற்கான தமிழ்நாட்டின் உரிமையை மத்திய அரசு தடுத்து நிறுத்துவது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது’ என்று மனுவில் தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கெனவே எஸ்.எஸ்.ஏ. அமல்படுத்தப்பட்டு, மாநிலங்களுக்கு நிதி உதவி தொடர்ந்து வழங்கப்பட்டுவரும் நிலையில், அத்திட்டத்துக்கு நிதியைப் பெறுவதில் பி.எம். திட்டத்தில் சேருவதை முன்நிபந்தனையாக எப்படி விதிக்க முடியும் என்கிற கேள்வி அழுத்தமாகவே எழுகிறது. அதிகாரங்களின் பட்டியலைப் பொறுத்தவரை கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது.
எனவே, கல்வி சார்ந்து சட்டம் இயற்றவும், விரும்பிய கல்விக் கொள்கையைப் பின்பற்றவும் இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கும் அதிகாரம் வழங்கியிருக்கிறது. மேலும், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும்படி மாநிலங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது
நினைவுகூரத்தக்கது. எஸ்.எஸ்.ஏ. திட்டத்துக்குத் தொடர்ந்து நிதியைப் பெறுவதில் தேசியக் கல்விக் கொள்கையோ, பி.எம். திட்டமோ ஒரு மாநில அரசுக்குத் தடையாக இருக்க முடியாது. மேலும், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு திட்டத்துக்கு நிதியைப் பெறுவதில் இன்னொரு திட்டத்தில் மாநில அரசு இணையாததைக் காரணமாகக் கூறுவதும் ஏற்புடையது அல்ல.
தான் தொடங்கிய திட்டத்துக்கே மத்திய அரசு நிதி அளிக்க மறுப்பது, அத்திட்டத்தைக் கொண்டுவந்ததன் நோக்கத்தையே சீர்குலைப்பதாக அமைந்துவிடும். கல்வி உரிமைச் சட்டம் 2009 அமலாக்கத்தையும் சேர்த்தே பாதிக்கும். எனவே, நிலுவையில் உள்ள எஸ்.எஸ்.ஏ. நிதியைத் தமிழ்நாட்டுக்கு உடனடியாக விடுவிக்க முன்நிபந்தனையின்றி மத்திய அரசு முன்வர வேண்டும். அதுவே கூட்டுறவுக் கூட்டாட்சிக்கு வலுசேர்க்கும்.