தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்குத் தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை. காலி இடங்களுக்கான வார்டு மறுவரையறை, இடஒதுக்கீட்டை இறுதிசெய்தல் போன்ற பணிகளை முடிக்காமல் தேர்தல் நடத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகளுக்கு ஏதேனும் ஒரு வடிவத்தில் அவ்வப்போது முட்டுக்கட்டைகள் எழுவது வருத்தத்துக்குரியது; அதேவேளையில், இத்தகைய தேக்கங்கள் நிகழாத வகையில் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்த உத்தரவு உணர்த்துகிறது.
தமிழகத்தில் 2019இல் அரியலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்பட 27 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் மூலம், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்-தலைவர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 91,975 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டியிருந்ததால், தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் நடந்த மாவட்டங்களில் பொறுப்பேற்ற உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜனவரி 5, 2025இல் முடிவடைந்தது. அடுத்த தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் உரிய காலத்தில் அறிவிக்கவில்லை; வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து, விடுபட்டிருந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சி நிர்வாகத்தைத் தனி அலுவலர்களே கவனித்துக்கொள்ளும் சூழல் உருவானது.
இது தொடர்பாக ஆதங்கக் குரல்கள் ஒலித்த நிலையில், தேர்தலுக்காக நிர்ணயிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. எனினும், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் ஒளிப்படங்கள் இல்லை என்றும் சில இடங்களில் பட்டியல் சாதியினர் / பழங்குடியினர், பெண்களுக்கான இடஒதுக்கீடு இறுதி செய்யப்படவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இது தொடர்பாக, திருநெல்வேலியைச் சேர்ந்த கே.சண்முகநாதன் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மதி, ஆர்.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, காலி இடங்களுக்கான வார்டு மறுவரையறை, இடஒதுக்கீட்டை இறுதிசெய்தல் போன்ற பணிகளை முடிக்காமல், தேர்தல் நடத்தக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை ஒரு மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு வழக்கில், தொகுதி மறுவரையறை, வார்டு இடஒதுக்கீடு ஆகியவற்றை இறுதி செய்யாமல் தேர்தல் நடத்த மாட்டோம் என்று அரசு உறுதிமொழி அளித்திருந்தது. ஆனால், அதிகாரிகள் அதைக் கருத்தில் கொள்ளாமல் தேர்தல் செயல்முறையைத் தொடங்கியிருப்பதாகவும், பல வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் ஒளிப்படங்கள் இல்லாதது ஆள்மாறாட்டத்துக்கு வழிவகுக்கும் என்றும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். சில காலியிடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்படாததன் பின்னணி குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொகுதி மறுவரையறைப் பணிகளைக் காரணம் காட்டி, உள்ளாட்சித் தேர்தல்களைத் தாமதப்படுத்தக் கூடாது என ஏற்கெனவே ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், உரிய ஏற்பாடுகளைச் செய்யாமல் அவசரகதியில் தேர்தல் அறிவிக்கப்படுவது ஏமாற்றம் அளிக்கிறது. அரசியல் பின்புலம் கொண்டவர்களுக்கு இணையாகச் சாமானியர்களும் போட்டியிட்டு வெல்லும் வாய்ப்பு அதிகம் என்பதால், உள்ளாட்சித் தேர்தல்கள் கூடுதல் முக்கியத்துவம் கொண்டவை.
ஒட்டுமொத்த மனிதவளக் குறியீட்டு அளவில் தமிழகம் முன்னிலை வகிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு கணிசமானது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் எந்தக் குழப்பமும் இன்றி நடத்தப்பட, சம்பந்தப்பட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.