தலையங்கம்

வளர்ச்சித் திட்டங்கள் இயற்கை வளங்களைப் பாதிக்கக் கூடாது!

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி அருகே மூன்று இடங்களில் எண்ணெய், இயற்கை எரிவாயு ஆய்வு மேற்கொள்வதற்கான ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியம் - இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டிருப்பதற்கு, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தைக் கைவிடும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதமே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஏல அறிவிப்பு, அந்தப் பகுதி மீனவர்கள் குறித்தும் சூழல் பாதிப்பு குறித்தும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் தெற்கே கடலில் 27,154.80 சதுர கி.மீ. பரப்பளவில் ஆய்வுக்காகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் பகுதி, சிறந்த மீன்பிடிப் பகுதி என்பதால், கன்னியாகுமரி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பிற மாவட்ட மீனவர்களையும் இந்தத் திட்டம் பாதிக்கக்கூடும் எனக் குரல்கள் எழுந்திருக்கின்றன.

சிறு படகுகளை மட்டும் பயன்படுத்தும் மீனவர்களையும் இது பாதிக்கும். இவர்கள் மீன் பிடிப்பதற்காகக் கடலில் நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மன்னார் வளைகுடாவின் பாக் நீரிணை, வாட்ஜ் பேங்க் போன்றவையும் ஹைட்ரோகார்பன் திட்டப் பரப்புக்குள் வருகின்றன. கடலோரப் பகுதிகளை இயற்கைச் சீற்றங்களில் இருந்து காக்கும் பகுதியாக வாட்ஜ் பேங்க் இருப்பதால், கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

கடலுக்குள் எண்ணெய், இயற்கை எரிவாயு ஆய்வுக்காகத் துளையிடுவது பெரும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகப் பகுதி, மன்னார் வளைகுடா தேசியக் கடல் பூங்காவையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்தப் பகுதியில் பவளத்திட்டுகள், கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், தீவுகள், காடுகள் போன்றவை இருக்கின்றன.

இந்தப் பகுதி பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் இருக்கிறது. தவிர, அழிந்துவரும் கடல்வாழ் உயிரினமான ஆவுளியா (டியூகாங்) பாதுகாக்கப்பட, பாக் நீரிணையில் இந்தியாவின் முதல் காப்பகத்தைத் தமிழக அரசு நிறுவியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஹைட்ரோகார்பன் ஆய்வின்போது கடலுக்குள் படியும் வண்டல் மண், நச்சு வெளியேற்றம் போன்றவற்றால் அந்தப் பகுதியின் சூழல் அமைப்பு கெடுவதோடு, கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் அழியும் பேரபாயமும் உண்டு. உயிர்ப்பன்மையில் ஏற்படுத்தப்படும் இதுபோன்ற பாதிப்புகள் மறுசீரமைக்க முடியாதவை என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

இந்தத் திட்டம் குறித்தோ, ஏல அறிவிப்பு குறித்தோ தங்களுக்கு இதுவரை உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்படவில்லை என மாநில அரசுத் தரப்பில் சொல்லப்பட்டிருக்கும் நிலையில், இந்தத் திட்டம் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தப்படாததும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்கள் காலத்தின் தேவை என்கிறபோதும், இயற்கைக்கும் மனிதர்களின் வாழ்வாதாரத்துக்கும் பெருமளவு சேதத்தை விளைவிக்கும் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இந்தத் திட்டத்தால் ஏற்படுகிற நன்மைகளைவிடச் சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்படுகிற இழப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் திட்டத்தைத் திரும்பப் பெறவும் தயங்கக் கூடாது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததும், விவசாயிகளின் தொடர் எதிர்ப்புக் காரணமாகத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கவை. வளர்ச்சியின் பெயரால் இயற்கையை முறையற்றுச் சூறையாடுவது பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் என்பதை மனதில்கொண்டு, இந்தத் திட்டம் குறித்துத் திட்டவட்டமான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT