உயிரிழந்த ஆதரவற்றோர் சடலங்களைக் கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்கிற முதியவர், உறவினர் யாருமில்லாததால் இரந்துண்டு வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். மார்ச், 2018இல் ராஜாராம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு யாரும் உரிமை கோராததால், காவல் துறையினர் அவரை ஆதரவற்றவர் எனக் குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்தனர். அவரது சடலம் அடக்கம் செய்யப்படுவதற்காக சோளிங்கர் பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜாராமின் சடலம் அரசு மருத்துவமனையிலிருந்து சுடுகாட்டுக்குக் குப்பைவண்டி ஒன்றில் கொண்டுசெல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்தது.
6.5.25 அன்று இவ்வழக்கின் விசாரணை முடிவில் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், “இறந்தவரின் சடலம் குப்பைவண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது மிகத் தீவிரமான மனித உரிமை மீறல். மனித உரிமை என்பது உயிருடன் இருப்போருக்கு மட்டும் உரியதல்ல; இறந்தவர்களுக்கு நாகரிகமான இறுதி மரியாதை அளிப்பதன் மூலம் அவர்களுக்கான உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் மாநகராட்சியிலிருந்து கிராம ஊராட்சி வரைக்கும் இத்தகைய இறுதி அடக்கங்களை மேற்கொள்வதற்கு உரிய வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும்” எனப் பரிந்துரைத்துள்ளார்.
இறந்தவரின் சடலம் குப்பைவண்டியில் எடுத்துச் செல்லப்பட்டதற்குக் காவல் துறையின் கவனக்குறைவே காரணம் எனவும் மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. ஆதரவற்றோரின் சடலங்களை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதோ, யாரும் உரிமை கோராத நிலையில் அவற்றை அடக்கம் செய்வதோ காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதிலிருந்தே தொடங்குகிறது.
கடுமையான பணிச்சுமையை எதிர்கொண்டுள்ள காவல் துறை, இந்தப் பணியைப் பெரும்பாலும் உரிய முக்கியத்துவத்தோடுதான் மேற்கொள்கிறது. எனினும், போதுமான பணியாளர் எண்ணிக்கை, நிதி ஒதுக்கீடு, வாகன வசதி போன்றவற்றில் காவல் துறை முழு உத்தரவாதமற்று இருப்பதே, இதுபோன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது.
அதேபோல, ஆதரவற்ற மனிதர்களோ, விலங்குகளோ இறக்கும்போது சடலங்களை அகற்ற வேண்டிய சூழலில், அதற்கு உரிய ஏற்பாடுகள், சாதனங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் சிரமப்படுவதையும் மறுக்க முடியாது. அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மட்டுமல்லாமல், தேவையான வசதிகளும் கருவிகளும் வழங்கப்படுவது மிகவும் அவசியம். இத்தகைய பணிகளால் அவர்கள் தொற்றுப் பரவலுக்கு உள்ளாகாதவாறு பாதுகாக்கப்படவும் வேண்டும்.
பல பேரூராட்சிகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்பதையும் இந்த நிகழ்வு உணர்த்தியது. சோளிங்கர் நிகழ்வையடுத்து, ஆம்புலன்ஸ் இல்லாத பேரூராட்சிகள், பொது நிதியிலிருந்து ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்துகொள்ளலாம் எனப் பேரூராட்சி இயக்குநர் கடிதம் அனுப்பினார்.
இந்த அறிவுறுத்தல் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். பின்னாளில் யாராவது உரிமை கோரக்கூடும் என்கிற சாத்தியத்தையும் கருத்தில்கொண்டு, மீண்டும் எடுக்க முடிகிற வகையில் இத்தகைய சடலங்கள் புதைக்கப்படும் நடைமுறையும் உள்ளது. வழக்கமான மயானங்களில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், இத்தகைய அடக்கங்களுக்குப் பிரத்யேக மயானம் வேண்டும் என்கிற கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்.
பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பால்தான், ஆதரவற்றோரின் சடலங்களுக்குக் கண்ணியமாக இறுதி மரியாதை கிட்டுகிறது. அவர்கள் இல்லையெனில், இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்கிற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. பல அடிப்படைத் தேவைகளுக்காகத் தனிக்கொள்கை வகுத்துவரும் தமிழக அரசு, இந்தப் பிரச்சினைக்கும் கொள்கை வகுக்க வேண்டியிருப்பதை மனித உரிமை ஆணையம் உணர்த்தியுள்ளது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.