தலையங்கம்

உக்ரைன் - ரஷ்யா: உண்மையான பேச்சுவார்த்தை எப்போது?

செய்திப்பிரிவு

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையே முதன்முறையாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. துருக்கியில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ரஷ்ய அதிபர் புதின் நேரடியாகப் பங்கேற்காதது பின்னடைவாகக் கருதப்படுகிறது.

நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முயற்சி செய்ததைத் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எனப் பிரகடனம் செய்து, அந்நாட்டின் மீது 2022 பிப்ரவரி 24இல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது.

இதுவரை உக்ரைனில் 70,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். லட்சக்கணக்கானோர் அகதிகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர். உக்ரைனின் 20% நிலப்பகுதி தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மறுபுறம், ரஷ்யத் தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்னும் குரல்கள் தொடர்ந்து ஒலித்துவருகின்றன. போர் நிறுத்தத்துக்கு ஒத்துழைக்க மறுத்து ரஷ்ய அதிபர் புதின் காட்டிவந்த பிடிவாதம், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்ற டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நடத்திய விதம், இதுவரை செய்த ராணுவ உதவிகளுக்குப் பதிலீடாக உக்ரைன் கனிம வளங்களைப் பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தை - கடும் அழுத்தம் கொடுத்து - நிறைவேற்றியது எனப் பல காரணிகள், போர் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லையோ என்கிற எண்ணத்தையே தோற்றுவித்திருந்தன.

இந்நிலையில், மே 16 அன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உக்ரைன் சார்பில் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியே நேரடியாகச் சென்றிருந்தார். புதினைச் சந்தித்துப் பேசுவதற்கான தனது ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், புதின் தனது சார்பில் பிரதிநிதிகளை - அதுவும் இரண்டாம் நிலை அதிகாரிகளை - மட்டுமே அனுப்பியிருந்தார்.

இது தொடர்பாக ஏற்கெனவே புதின் அறிவித்திருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இதில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டார். அமைதியை நிலைநாட்டுவதில் ரஷ்யாவுக்கு அக்கறை இல்லை என்பதையே புதினின் இந்தப் போக்கு காட்டுவதாக ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார். ரஷ்ய – உக்ரைன் அதிபர்கள் சந்தித்துப் பேசாமல் இந்தப் போர் முடிவுக்கு வராது என்று டிரம்ப்பும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

உக்ரைன் குழுவுக்கு அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரஸ்தம் உமெரோவ் தலைமை ஏற்றிருந்தார். அமைதிப் பேச்சுவார்த்தை என்றே ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டாலும், பேச்சுவார்த்தை அதை நோக்கி நகரவில்லை. இரு தரப்பும் போர்க் கைதிகளைப் பரஸ்பரம் விடுவிப்பது தொடர்பாகத்தான் பேசியிருக்கின்றன.

பேச்சுவார்த்தை நடைபெற்ற சில மணி நேரத்திலேயே, உக்ரைனின் சுமி பிராந்தியத்தில் ஒரு பேருந்து மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம், ரஷ்யாவின் பொறுப்பற்ற மனநிலையை வெளிப்படுத்துவதாகக் கண்டனம் எழுந்துள்ளது.

லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியிருக்கும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, இத்தகைய அரைகுறை முயற்சிகள் முழுப் பலனை அளிக்குமா என்கிற கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன. புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் போப் ராபர்ட் பிரான்சிஸ் பங்கேற்ற முதல் பிரார்த்தனைக் கூட்டத்தில், ஜெலன்ஸ்கியை அமெரிக்கத் துணை அதிபர் ஜே டி வான்ஸ் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஐரோப்பியத் தலைவர்களும் அமைதிக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

உண்மையில், பல்வேறு விதங்களில் உலக அளவில் தாக்கம் செலுத்திவரும் உக்ரைன் போரை, அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலமோ, பிற நாடுகளின் முயற்சிகள் மூலமாகவோ மட்டும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது. சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்பது அவசியம்.

SCROLL FOR NEXT