தமிழகக் காவல் நிலையக் கழிப்பறைகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளனவா என்கிற கேள்வியை சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. இக்கேள்வி, விசாரணைக் கைதிகளுக்கு மாவுக்கட்டு போடும் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்கிற பார்வையை உணர்த்தியிருக்கிறது. வழக்கு ஒன்றில் கைதான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவருக்குக் கை, கால் முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கக் கோரி அவருடைய தந்தை இப்ராஹிம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கில், “ஜாகீர் உசேனுக்கு எப்படிக் காயம் ஏற்பட்டது?” என்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியது. அதற்கு அரசு வழக்கறிஞர், “கழிப்பறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டது; உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். அப்போது ‘குற்றம்சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்?’ என்கிற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், “அந்தக் கழிப்பறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துவதில்லையா? அவர்களுக்கு எதுவும் ஆவதில்லையே, ஏன்? இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுவாக, காவல் நிலையங்களில் காவலர்களின் விசாரணை முறைகள் எல்லாரும் அறிந்தவைதான். உண்மையை வெளிக்கொணர்வதில் காவலர்கள் அனுமதிக்கப்பட்ட முறைகளைத் தாண்டி விசாரணையை மேற்கொள்கிறார்கள். காவல் நிலையங்களில் ‘லாக்-அப்’ மரணங்கள் நிகழ்வதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு. அந்த வகையில், காவல் நிலையங்களில் விசாரணையின்போது மனித உரிமை மீறல்கள் நடப்பதாக எழும் குற்றச்சாட்டுகள் புதிதல்ல.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களால் தந்தை - மகன் அடித்துக் கொல்லப்பட்டது, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் கைதிகளின் பற்களைக் காவல் அதிகாரி பிடுங்கியது போன்ற சில சம்பவங்கள் மட்டுமே வெளியே தெரியவந்து, பொதுச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கின. ஆனால், காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகளுக்கு மாவுக்கட்டு போடும் விவகாரம் கடந்த சில ஆண்டுகளாகவே நாளிதழ்களில் வெளிவரும் அன்றாடச் செய்திபோல ஆகிவிட்டது. காவலர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தண்டனை தர முடியாது. அதற்காகத்தான் நீதிமன்றங்கள் உள்ளன.
கைதிகளுக்கு மாவுக்கட்டு போடுவது என்பது கைதிகளுக்குத் தரப்படுகிற உடல், உளவியல்ரீதியிலான தண்டனை. இப்படிப்பட்ட தண்டனையைக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கோ விசாரணைக் கைதிகளுக்கோ காவலர்கள் வழங்குவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. இன்னொருபுறம், மாவுக்கட்டு விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறுவதால், இதுபோன்ற மனித உரிமை மீறல் நிகழ்த்தப்படுவது காவலர்களை ஊக்கப்படுத்துவதாகவும் அமைந்துவிடுகிறது. இந்த அத்துமீறலுக்கு எதிராகப் பொதுப்புத்தியிலும் அவசியம் மாற்றம் வந்தாக வேண்டும்.
மாவுக்கட்டு போடுவது தொடர்ந்து நடைபெற்றால், சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. எனவே, இனிமேலாவது காவல் நிலையங்களில் கைதிகளுக்கு மாவுக்கட்டு போடும் கலாச்சாரத்துக்குக் காவலர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் காவல் உயரதிகாரிகள் தொடங்கி, கடைநிலைக் காவலர்வரை அனைவருக்கும் உரிய அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் கண்டிப்பான உத்தரவுகளையும் அரசு வழங்க வேண்டும். கைதிகளுக்கு மாவுக்கட்டு போடுவது நாகரிகச் சமூக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.