தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாநில அரசுப் பொதுத் தேர்வில் 95.03% பேரும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் 98.48% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுக்கான தேர்ச்சி விகிதத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் நான்காம் இடத்தையும் (99.86%) பெற்றுள்ளது.
தேர்ச்சிபெற்ற, குறிப்பிட்ட பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள். அதே வேளையில், தேர்ச்சி பெற இயலாத மாணவர்களின் நலன் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
நம் சமூகத்தில் குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடித்து மதிப்புக்குரிய உயர் கல்வியைப் பெற்றுப் பெரு நிறுவனங்களில் சேர்வதே இலக்காகக் கருதப்படுகிறது. இந்தப் போக்குக்குப் பொருந்தும் வகையில் பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது அனைவராலும் வரவேற்கப்படுகிறது.
தங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்கிற விருப்பம் பெற்றோர்களுக்கு இருப்பது இயல்பானது. பள்ளிப் படிப்பைப் பெற்றிராத, உடலுழைப்பு சார்ந்த வேலையில் ஈடுபடுகிற பெற்றோர்களுக்கு இந்த விருப்பம் கூடுதலாக இருப்பதும் நியாயமானதே. பிள்ளைகளின் படிப்புக்காகத் தங்களை வருத்திக்கொள்ளும் பெற்றோர் குறித்த பகிர்தல்களை எல்லா இடங்களிலும் காண முடியும்.
இதன் ஊடாகக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு மாபெரும் போட்டிக் களமாகச் சமூகம் வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது. மாணவர்களிடையே கௌரவம் சார்ந்த அடையாளமாக மதிப்பெண் முன்னிறுத்தப்படுகிறது. அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் வெற்றியாளராகவும் குறைவான மதிப்பெண் எடுப்பவர்கள் தோல்வியாளராகவும் கருதப்படுகின்றனர்.
தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மாணவர்கள், சக நண்பர்களையும் பக்கத்து வீட்டுக்காரர்களையும் எதிர்கொள்ள வேண்டிய சங்கடத்தைவிட, பெற்றோரை எதிர்கொள்வதில் அதிக மன அழுத்தத்தை உணர்கின்றனர் என்பதை, ஏற்கெனவே இங்கு நிகழ்ந்த பல துயரமான நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. தங்கள் பிள்ளையின் வெற்றியைக் கொண்டாடுவதைப் போலவே, அவர்கள் அதைத் தவறவிடும் தருணங்களிலும் பெற்றோர் மனப்பூர்வமாக உடன் நிற்க வேண்டும்.
தேர்வு என்பது இறுதியான ஒன்று அல்ல; இந்தத் தேக்கநிலை கடந்துவரக் கூடியதுதான் என்பதை உணர்த்தும்வகையிலான உரையாடல்கள் வேண்டும். பிறரோடு ஒப்பிடுவது, ஒரு பாடத்தை உயர்த்தி இன்னொன்றைத் தாழ்த்துவது உள்ளிட்ட தவறுகள் நன்கு படித்தவர்கள் இடையேகூடக் காணப்படுகின்றன. தங்கள் சூழலில் உள்ள மாணவர்களை இந்த நேரத்தில் அறிந்தோ, அறியாமலோ புண்படுத்திவிடக் கூடாது என்கிற பொறுப்புணர்வு அனைவருக்குமே தேவை.
ஓரிரு பாடங்களில் தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள் முழு ஆண்டையும் தவற விடாமல் உடனடியாகத் துணைத் தேர்வுகள் எழுத வாய்ப்பளிக்கப்பட்டது, மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைப் பள்ளி நிர்வாகங்கள் தரவரிசைப்படுத்தத் தடை விதிக்கப்பட்டது போன்றவை ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தின.
அதே திசையில் அரசு மேலும் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகள் ஏற்படுத்தும் மனச்சோர்விலிருந்து வெளியே வரவும் தேர்ச்சி பெற இயலாமல் போனதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளவுமான ஆலோசனைகள் பள்ளிக்கூடங்களில் நிகழ வேண்டும். இதுதொடர்பான பரப்புரைகளுக்கு ஊடகங்களையும் அரசு பயன்படுத்திக்கொள்ளலாம்.
பள்ளிக் கல்வியும் உயர் கல்வியும் துறைரீதியாகப் பல சுய மதிப்பீடுகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டாக வேண்டிய சூழல்தான் நிலவுகிறது. இந்நிலையில், அதில் தற்காலிகமாகப் பொருந்த இயலாமல் போனவர்களை அரவணைப்பதே உண்மையான கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தின் அணுகுமுறையாக இருக்க முடியும்.