தலையங்கம்

புதிய ரயில் பாதைகள்: காத்திருப்பு முடிவுக்கு வரட்டும்

செய்திப்பிரிவு

தமிழக ரயில்வே பணிகளுக்குத் தொடர்ந்து குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மத்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு வலியுறுத்திவந்த நிலையில், 2025-26 நிதியாண்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இது கடந்த நிதியாண்டைவிட (ரூ.6,320 கோடி) அதிகம். திண்டிவனம் - நகரி, தருமபுரி - மொரப்பூர், மதுரை - தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழி), சென்னை - கடலூர் உள்ளிட்ட எட்டு புதிய வழித்தடங்களுக்காக ரூ.621.8 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சில திட்டங்கள் 2007இல் அறிவிக்கப்பட்டவை. புதிய வழித்தடங்களுக்கான நீண்ட காலக் காத்திருப்பு நிறைவுபெறும் என்கிற நம்பிக்கையை இந்த நிதி ஒதுக்கீடு அளித்திருக்கிறது.

கிராமப்புறப் பகுதிகளைச் சிறு நகரங்களோடு இணைக்கும் நகரி - திண்டிவனம் ரயில் பாதைத் திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்ட மக்களும் பலனடைவர்.

நீண்ட நாள்கள் கிடப்பில் இருந்த இந்தத் திட்டமும் செயலாக்கம் பெறும் என்கிற நம்பிக்கை மக்களிடையே எழுந்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ரயில் சேவை சீரான வளர்ச்சிபெற்று வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். 1,303 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழகத்தில் 94% ரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ‘அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டம்’ மூலம் 77 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிதியாண்டில் ‘வந்தே மெட்ரோ’ திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை - விழுப்புரம், சென்னை - ஜோலார்பேட்டை, சென்னை - கூடூர் ஆகிய வழித்தடங்களில் வந்தே மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

புதிய வழித்தடங்கள், வந்தே மெட்ரோ, இருவழி இருப்புப் பாதைகள் எனத் தற்போது செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்கள் நம்பிக்கை அளிப்பவையாக இருந்தாலும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவதும் கவனத்துக்குரியது.

ரயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கே பெருமளவு நிதி செலவிடப்படும் நிலையில், மீதமிருக்கும் குறைவான தொகையில் திட்டங்களைக் குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. அறிவிக்கப்பட்டும் ஆண்டுக்கணக்கில் முடிவடையாமல் இருக்கும் புதிய ரயில் பாதை, மற்றும் விரிவாக்கத் திட்டங்களே அதற்குச் சான்று.

ரயில் பாதை பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மிகவும் பின்தங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ள நிலையில், நிலம் கொடுத்த மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நிதியை அளிப்பதில் ரிசர்வ் வங்கி தாமதப்படுத்துகிறது எனத் தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநன்மைக்காகத் தங்கள் நிலத்தை அரசுக்குத் தரும் மக்களுக்கு இழப்பீடு அளிப்பது அரசின் கடமை. அதில் மெத்தனம் காட்டுவது மக்கள் நலனை மையப்படுத்திய திட்டங்களைத் தாமதப்படுத்தும் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். தவிர, இதுபோன்ற விஷயங்களில் மத்திய – மாநில அரசுகள் மோதல்போக்கைக் கைவிட்டு, பொதுமக்கள் நலனை முன்னிறுத்திப் பணியாற்ற வேண்டும்.

மத்தியில் ஆளும் அரசு, தங்கள் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்குக் குறைவாக நிதியளிப்பதும் மாநில அரசைக் குற்றம்சாட்டுவதும் மத்திய அரசின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும். கிராம – நகர இணைப்பின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நேரடியாகப் பங்கு வகிக்கும் ரயில் பாதைத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இனியும் தாமதம் கூடாது.

SCROLL FOR NEXT