தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதத்துக்கும், பேருந்துகள் பராமரிக்கப்படும் விதத்துக்கும் எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் பயணிகளுக்கும் பாதகம் விளைவிக்கும் அம்சங்களைக் களைவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட எட்டு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டுவருகின்றன. தமிழ்நாடு முழுவதும் 23 பகுதிகளை மையமாகக் கொண்டு 21,000 பேருந்துகள், 19,500 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இந்தச் சூழலில், பேருந்துகளைப் பராமரிக்கப் போதுமான எண்ணிக்கையில் ஊழியர்களை நியமிக்காதது, தேவையான உதிரி பாகங்கள் / கருவிகளை இருப்பில் வைத்திராதது, பேருந்தில் வசூல் குறைந்தால் ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைக் கண்டித்து, ஊழியர் சங்கத்தினர் அண்மையில் ஆர்ப்பாட்டமும் ஒரு வாரத்துக்குக் கையெழுத்து இயக்கமும் நடத்தியுள்ளனர்.
1986ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விரைவுப் பேருந்துகள் 3 ஆண்டுகளுக்கு அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் வரை இயங்கலாம்; பிற அரசுப் பேருந்துகள் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் பயணிக்கலாம். இந்த நடைமுறை இருந்தவரையில், பேருந்துப் பராமரிப்பு ஓரளவுக்காவது சரியாக இருந்தது. 2021 ஜூலை 10இல் அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலம் அதிகரிக்கப்பட்டது.
விரைவுப் பேருந்துகள் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் பயணிக்கலாம் எனவும், மற்ற அரசுப் பேருந்துகள் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் பயணிக்கலாம் எனவும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால், நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகள் பழுதடைந்த நிலையிலும் பயணிகளைச் சுமந்துசெல்கின்றன.
கடந்த ஆண்டு, திருச்சி ஸ்ரீரங்கம் - கே.கே.நகர் இடையிலான மாநகரப் பேருந்து, ஒரு வளைவில் திரும்பியபோது அதில் அமர்ந்திருந்த நடத்துநர், இருக்கையுடன் சாலையில் விழுந்தார். அப்போதே, பேருந்துகளில் ஏற்பட்டிருக்கும் பழுதுகள் பயணிகளுக்கு மட்டுமல்லாமல் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனக் குரல்கள் எழுந்தன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் பேருந்து சம்பந்தப்பட்ட விபத்துகள் முதன்மையாக இடம்பிடிக்கின்றன. 2022 – 23 காலக்கட்டத்தில், சென்னையில் மொத்தம் 117 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான விபத்துகள் மாநகரப் பேருந்துகளால் ஏற்பட்டவை. இது முந்தைய இரண்டு ஆண்டுகளை ஒப்பிட்டால் 30% அதிகம்.
போதிய எண்ணிக்கையில் தொழிலாளர்கள் நியமிக்கப்படாததால், பேருந்துப் பராமரிப்புப் பணிகளும் சுணக்கம் அடைகின்றன. உரிய எண்ணிக்கையில் உதிரி பாகங்கள் இல்லாதது, பழுது பார்க்கும் பணிகளில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. இந்தப் பற்றாக்குறைகள் சரிசெய்யப்படுவதில்லை.
ஆனால், ஏதேனும் தவறு நடந்தால் அதற்குத் தொழிலாளர்களே பொறுப்பேற்க நேர்கிறது. அதேபோல், வசூல் குறைந்தால் ஊதிய உயர்வு நிறுத்திவைக்கப்படுவது, பேருந்து வழித்தடப் பழுதுக்குத் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட அழுத்தம் தரப்படுவது எனப் பல்வேறு சவால்களைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்கொள்கிறார்கள்.
சென்னை அண்ணா மேம்பாலத்தில், 2012இல் அரசு மாநகரப் பேருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளான வழக்கில், அந்தப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநரை விடுதலை செய்து சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் இருக்கை திடீரெனக் கழன்று ஸ்டியரிங் லாக் ஆகி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஓர் உதாரணம்தான். போக்குவரத்து நிர்வாகத்தின் அலட்சிய மனப்பான்மைக்குத் தொழிலாளர்கள் பலிகடா ஆக்கப்படுவது இனியும் தொடரக் கூடாது!