ஹரியாணா மாநிலத்தில் உள்ள 481 கிராமங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 1,000 ஆண்களுக்கு 700 என்கிற நிலையில் மிகக் குறைவாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இதே நிலை அந்தக் கிராமங்களில் நீடித்துவருவது, மருத்துவக் கட்டமைப்பில் உள்ள போதாமையையும் அரசின் அக்கறையின்மையையும் வெளிப்படுத்துகிறது.
குழந்தை பிறப்புப் பாலின விகிதம் என்பது 0 – 6 வயதுக்கு உள்பட்ட ஆண் - பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை மையமாக வைத்துக் கணக்கிடப்படுகிறது. 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 927ஆக இருந்த நிலையில், 2011இல் 918ஆகக் குறைந்தது. தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு 5இன்படி 2017-2019இல் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 904ஆகக் குறைந்துள்ளது.
ஹரியாணா, குஜராத், பிஹார், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் தேசிய சராசரியைவிடக் குறைவான பெண் குழந்தை பிறப்பு விகிதத்தைக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. ஆண் - பெண் பாலினச் சமத்துவத்தில் உலக அளவில், 236 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 214ஆவது இடத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
இந்தியச் சமூகத்தில் ஆண் குழந்தைகள் பிறந்தால் வரவாக நினைப்பதும் பெண் குழந்தையைச் செலவாக நினைப்பதுமான பிற்போக்குச் சிந்தனை மிக ஆழமாக வேரோடிப் போயிருக்கிறது. பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் ஆணே குடும்பத் தலைவராக அங்கீகரிக்கப்படுகிறார். கல்வி, உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களில்கூடப் பெண் குழந்தைகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர்.
வறுமை நிறைந்த குடும்பங்களில் பெண் குழந்தைகளின் திருமணச் செலவு என்பது பெரும் சுமையாக இருக்கிறது. பழமைவாதங்களுடன் வறுமையும் சேர்ந்துகொள்கிறபோது, பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதைக் குடும்பங்கள் விரும்புவதில்லை.
பலர் கருவிலேயே குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து அழித்துவிடுகின்றனர். வசதி குறைந்தவர்கள் குழந்தை பிறந்த பிறகு சிசுக்கொலை செய்துவிடுகின்றனர். இன்னும் சிலர் பெண் குழந்தைக்குப் போதிய பராமரிப்பு அளிக்காமல் விடுவதால், ஓராண்டுக்கு உள்ளேயே குழந்தைகள் இறந்துவிடுவதும் உண்டு. மக்களின் இந்த மனநிலையை மாற்றுவதற்காகவும் பெண் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கவும் அரசு சார்பில் பல்வேறு சட்டங்களும் திட்டங்களும் இயற்றப்பட்டன.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதைத் தடைசெய்யும் சட்டம் 1994இல் இயற்றப்பட்டது. அதேபோல் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு அவர்களின் கல்வியை ஊக்குவிக்க மத்திய அரசு சார்பில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வளவுக்குப் பிறகும் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவது அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. இவை பெயரளவுக்கான திட்டங்கள் மட்டும்தானா என்கிற கேள்வியும் எழுகிறது. சட்டம் இயற்றுவதால் மட்டுமே குற்றங்களைத் தடுத்துவிட முடியாது என்பதற்குக் குறைந்துவரும் பெண் குழந்தை பிறப்பு விகிதமே சான்று.
பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிற பின்தங்கிய மாநிலங்களில் அரசு முனைப்புடன் செயல்பட்டு, பெண் குழந்தைகள் கருவிலும் பிறந்த பிறகும் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு பாலினத்தை மட்டும் அழிப்பது என்பது மனித குலத்துக்கே எதிரான செயல் என்பதால், அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும்.
பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதும், பாலினச் சமத்துவம் சார்ந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், பெண் குழந்தைகளுக்குச் சமூக அங்கீகாரம் கிடைக்கும் வகையில் வாரிசுரிமையை உறுதி செய்வதும் காலத்தின் தேவை. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு அரசு செயல்பட்டு, பெண் குழந்தைகளின் பிறப்பை ஊக்குவிக்க வேண்டும்.