தலையங்கம்

சாம்சங் தொழிலாளர் விவகாரம்: சமரசம் நிரந்தரமாகட்டும்!

செய்திப்பிரிவு

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு தொழிலாளர் துறை முறையாக நடந்துகொள்ளவில்லை என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை சாம்சங் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் நடைபெற்ற சமரச முயற்சியால் தொழிலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என நம்பப்பட்ட நிலையில், கொடுத்த வாக்குறுதிகளை சாம்சங் நிறுவனம் நிறைவேற்றவில்லை என்றும் தொழிலாளர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து, இப்பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கப்படாதது ஏன் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 2007ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலையில் 1,800 தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். குறைந்த ஊதியம், வரையறுக்கப்பட்டதைவிடக் கூடுதல் வேலை நேரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்துப் பல ஆண்டுகளாகவே தொழிலாளர்கள் முறையிட்டு வருகின்றனர்.

சிஐடியுவின் வழிகாட்டலில் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி வந்த தொழிலாளர்கள், ‘சாம்சங் இந்தியத் தொழிலாளர் சங்கம்’ என்னும் பெயரிலான தங்கள் அமைப்பைத் தமிழக அரசு பதிவுசெய்ய வேண்டும் என்கிற உரிமையையும், ஊதிய உயர்வு உள்பட 20 கோரிக்கைகளையும் முன்வைத்து 2024 செப்டம்பர் 9இல் போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற சாம்சங் நிறுவனம் மறுத்துவிட்ட நிலையில், தமிழக அரசின் தொழிற்சங்கங்களின் பதிவாளரே, தங்களது சங்கத்தைப் பதிவுசெய்ய மறுப்பதாகத் தொழிலாளர் தரப்பில் கூறப்பட்டது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர் தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது. பல கட்ட நகர்வுகளுக்குப் பின்னர், 2024 அக்டோபர் 15 அன்று தமிழக அமைச்சர்கள், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.

அதன்படி, தொழிலாளர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பினர். 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், ‘சாம்சங் இந்தியத் தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமை எட்டப்படாமலேயே இருந்தது. 1926 தொழிற்சங்கம் அமைப்பதற்கான சட்ட உரிமையின் அடிப்படையில், அதே பெயரில் தொழிற்சங்கத்தை அமைப்பதற்கான உரிமையையும் தொழிலாளர்கள் வென்றெடுத்தனர்.

இதையடுத்து, பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. தொழில் தகராறு சட்டத்துக்கு விரோதமாக சாம்சங் நிறுவனம் நடந்துகொள்வதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.

ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக 23 தொழிலாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்துப் போராட்டம் நடந்தது. எனினும், தொழிலாளர்களிடமிருந்து விளக்கக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. ஊதிய உயர்வு கோரியும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். நிர்வாகத்துக்கு ஆதரவாகச் செயல்படும் தொழிலாளர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

இந்த அம்சங்களை முன்வைத்து சாம்சங் நிர்வாகத்துக்கும், சாம்சங் இந்தியத் தொழிலாளர் சங்கத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையும் பலன் அளிக்கவில்லை. மே 12இல் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தகவல்கள் வெளியான நிலையில், மே 13 அன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும், வெவ்வேறு வகைகளில் போராட்டம் தொடரும் என்றும் சாம்சங் இந்தியத் தொழிலாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு தொழிலாளர் துறையின் செயல்பாடுகளையும் தொழிலாளர்கள் விமர்சித்திருக்கின்றனர்.
தமிழக முன்னேற்றத்துக்குத் தொழில் அமைதி மட்டுமே அடித்தளமாக அமையும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கருத்தை, சாம்சங் விவகாரத்துடனும் பொருத்திப் பார்க்க முடியும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு முன்வர வேண்டும். நடைமுறை சார்ந்த கோரிக்கைகளை மட்டும் முன்வைக்கும் போக்கைத் தொழிலாளர்களும் கைக்கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT