தலையங்கம்

வெறிநோய்ப் பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும்!

செய்திப்பிரிவு

தேசிய அளவிலும் தமிழக அளவிலும் வெறிநோயால் (ரேபிஸ்) உயிரிழப்போரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துவருவது மிகுந்த கவலை அளிக்கிறது. நாய், பூனை, குரங்கு உள்ளிட்ட சில விலங்குகளிடமிருந்து பரவும் வைரஸ் மனிதர்களின் நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் வெறிநோய் ஏற்படுகிறது. தொற்றுக்குள்ளான நாய் கடிப்பது அல்லது அதன் எச்சில் படுவதுதான் வெறி நோய்க்கான முதன்மைக் காரணமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுத் தற்காத்துக்கொள்ள முடியும்.

எனினும், பல்வேறு காரணங்களால் இந்நோயின் தாக்கம் மரணத்தில் முடிவதே நடைமுறைக் காட்சியாக இருக்கிறது. 2024இல் தமிழகத்தில் 47 பேர் வெறிநோயால் இறந்துள்ளனர். இது முந்தைய ஐந்து ஆண்டுகளைவிட மிக அதிகம். ஏறக்குறைய 4.80 லட்சம் பேர் நாய்க்கடிக்கு உள்ளாகினர். சிகிச்சையைத் தவிர்ப்பவர்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டவர்கள் ஆகியோரைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

தெரு நாய்களின் மிகையான பெருக்கம் பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகிறது. நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதையும் அவற்றுக்குத் தடுப்பூசி போடுவதையும் விலங்கு நல ஆர்வலர்கள் முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளாக முன்வைக்கின்றனர். இவற்றையே முதன்மைத் தீர்வாக அரசு பெரும்பாலும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவது நடைமுறையில் மிகவும் சிக்கலானது என்பதால், அதில் பெரும் சுணக்கம் இருப்பதில் வியப்பில்லை.

ஓர் ஆண்டுக்கு ஒரு நாய் குறைந்தபட்சம் பத்து குட்டிகளை ஈனும் சூழலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இருப்பதில்லை. தமிழகத்தில் 100 இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு மையங்கள் தேவைப்படும் நிலையில், ஜனவரி நிலவரப்படி 18 மையங்கள் மட்டும் செயல்படும் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

நாயைப் பிடிப்பதும் இனப்பெருக்கத் தடுப்பு மையத்துக்குக் கொண்டுவந்து கருத்தடை செய்வதும் சிறிது காலம் பராமரித்துவிட்டு மீண்டும் தெருவிலேயே விடுவதும் மிகப் பெரிய கட்டமைப்பையும் ஊழியர் திறனையும் கோரும் வேலைகளாக உள்ளன. தெரு நாய்களைவிட, அதிக எண்ணிக்கையில் வளர்ப்பு நாய்களுக்கே அரசு மையங்களில் கருத்தடைச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வெறிநோய் வகை-2க்குத் தடுப்பூசிவழி மருந்தும் வகை-3க்குத் தடுப்பூசியோடு ‘இம்யுனோக்ளோபுலின்’ மருந்தும் அளிக்கப்பட வேண்டும். ஆரம்ப சுகாதார மையங்களிலும் பொது மருத்துவமனைகளிலும் இவை எப்போதும் போதுமான அளவுக்கு இருப்பில் உள்ளனவா என்பதும் கேள்விக்கு உரியது. நாய்க்கடி குறித்து அலட்சியம் காட்டும் மனநிலை மக்களிடையே இன்னும் தொடர்கிறது. தெரு நாய், வளர்ப்பு நாய் ஆகியவற்றை அணுகுவது குறித்து அரசால் மக்களுக்குக் கற்பிக்கப்படுவது அவசியம்.

நாய்களுக்குக் கருத்தடை, அதற்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவற்றை 100 கால்நடைப் பராமரிப்பு மருத்துவமனைகளில் மேற்கொள்ள ரூ.20 கோடியும் தெரு நாய்களின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காகத் தமிழ்நாடு விலங்கு நல வாரியத்துக்கு ரூ.20 கோடியும் 2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாயால் ஏற்படும் வெறிநோய் ஒழிப்புக்கான மாநிலச் செயல் திட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளாட்சி அமைப்புகளும் கால்நடைப் பராமரிப்புத் துறையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் இணைந்து நாய்களைக் கணக்கெடுப்பது, அவற்றுக்குத் தடுப்பூசி போடுவது, கருத்தடை செய்வது ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளன.

இந்த முன்னெடுப்புகள் விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிடக் கூடாது. தேவையான எண்ணிக்கையில் கால்நடை மருத்துவர்களும் உள்ளாட்சி ஊழியர்களும் மக்களுக்காகச் செவிலியர் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களும் நியமிக்கப்பட்டால்தான் வெறிநோய் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு கிடைக்கும். அரசு இதை நிச்சயம் பரிசீலிக்க வேண்டும்!

SCROLL FOR NEXT