தலையங்கம்

அமெரிக்கா - உக்ரைன் கனிம ஒப்பந்தம்: அமைதிக்கு அஸ்திவாரமா?

செய்திப்பிரிவு

உக்ரைன் - ரஷ்யா போர் மூன்றாம் ஆண்டைக் கடக்கும் நிலையில், அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கையெழுத்தாகியிருக்கும் கனிம வள ஒப்பந்தம் கவனம் ஈர்க்கிறது. போர்ச் சூழல்களைத் தங்களுக்குச் சாதமாக்கிக்கொள்ளும் உத்தியை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும் நிலையில், இந்த ஒப்பந்தமும் அமெரிக்காவுக்குச் சாதகமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை செய்த ராணுவ உதவிகளுக்குக் கைமாறாக, உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பிடிவாதம் காட்டியது உக்ரைனை அதிரவைத்தது. எனினும், தொடர் பேச்சுவார்த்தைகளின் விளைவாக கனிம வள ஒப்பந்தத்துக்கு உக்ரைன் இசைந்திருக்கிறது.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், ஏப்ரல் 30இல் கையெழுத்தாகியிருக்கும் இந்த ஒப்பந்தத்தின்படி, உக்ரைனின் கனிம வளங்கள் மட்டுமல்லாமல், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட இயற்கை வளங்களும் அமெரிக்க வணிக வளையத்துக்குள் வரவிருக்கின்றன.

அமெரிக்க நிறுவனங்கள் இந்த இயற்கை வளங்களைக் கையாண்டு லாபம் பார்க்கும் என்றாலும், அதிகாரபூர்வமாக இந்த வளங்கள் உக்ரைனுக்குச் சொந்தமானவை என்றே கருதப்படும். இது எந்த அளவுக்குச் சாத்தியமாகும் என்பது இனிமேல்தான் தெரியவரும். போரின் விளைவாக, பொருளாதார ரீதியிலும் உக்ரைன் தடுமாறிவரும் சூழலில், வெளிநாட்டு முதலீடு கிடைப்பது என்பது ஒரு வகையில் சாதகமான அம்சம்தான்.

முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்க நிறுவனங்களுக்குக் கிடைக்கும் லாபம், உக்ரைனின் மறுகட்டமைப்புப் பணிகளுக்குச் செலவிடப்படும். அதன் பின்னர் கிடைக்கும் லாபம் அமெரிக்காவுக்கே செல்லும். இந்த ஒப்பந்தத்தின்படி நீண்ட காலத்துக்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், உக்ரைனின் இறையாண்மை சவாலுக்குள்ளாகும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஒப்பந்தத்தில், உக்ரைனுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் அமெரிக்கா பங்களிக்க வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி கறாராகக் கேட்டுப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், உக்ரைனில் இயற்கை வளங்களை எடுக்கவிருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் வெற்றிகரமாகச் செயல்பட வேண்டும் என்றால், அங்கு அமைதியான சூழல் அமைய வேண்டியது அவசியம்; எனவே, உக்ரைனில் அமைதி திரும்ப அமெரிக்கா எப்படியேனும் நடவடிக்கை எடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.

அதிபர் டிரம்ப், ரஷ்யாவுக்கு ஆதரவாகவே பேசிவந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. எனினும், உக்ரைன் மீது நீண்ட நாட்களாகத் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான எந்த உத்தரவாதத்தையும் அமெரிக்கா அளிக்கவில்லை. சீனா, வட கொரியா, ஈரான் ஆகிய நாடுகளுடனான உறவை மேலும் வலிமைப்படுத்திக்கொண்டிருக்கும் ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை முற்றிலுமாக நிறுத்துவதற்கான சமிக்ஞைகள் வெளிப்படவில்லை.

நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியதை, தங்கள் நாட்டுக்கான அச்சுறுத்தல் நகர்வாகச் சித்தரித்துத்தான் அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. தற்போது இந்த ஒப்பந்தத்தின் மூலம் உக்ரைனில் அமெரிக்க நிறுவனங்கள் கால் பதிக்கவிருப்பதை ரஷ்யா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரும் உக்ரைன் - ரஷ்யா இடையே பரஸ்பரத் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்தச் சூழலில், வல்லரசு நாடான அமெரிக்கா, வணிக லாபத்தையே முதன்மையாகக் கொண்டு இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பது விமர்சனத்துக்குரியது. போர் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. போருக்கு எதிராகச் சர்வதேசச் சமூகம் திரண்டு குரல் கொடுக்கும்போதுதான் உக்ரைன் முதல் காஸா வரை அமைதி திரும்பும்.

SCROLL FOR NEXT