மருத்துவக் கட்டமைப்பில் தேசிய அளவில் ஒரு முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கும் நிலையில், அதற்கு அடித்தளம் அமைப்பவர்களான செவிலியர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக அடிக்கடி வீதிகளில் இறங்கிப் போராட வேண்டியுள்ளது.
இந்நிலையில், கணிசமான எண்ணிக்கையில் உள்ள ஒப்பந்தச் செவிலியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்கிற கோரிக்கையை நிறைவேற்றும்படி சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏறக்குறைய 10,000 ஒப்பந்தச் செவிலியர்களும் 18,000 நிரந்தரச் செவிலியர்களும் பணி புரிகின்றனர். இவர்கள் மருத்துவப் பணியாளர் வாரியம் (எம்.ஆர்.பி.) நடத்தும் தேர்வு மூலம் முதலில் ஒப்பந்த ஊழியர்களாகவும் பின்னர் அனுபவம் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் நிரந்தர ஊழியர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர்.
எம்.ஆர்.பி. செவிலியர்கள், தொகுப்பூதியச் செவிலியர்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் ஒப்பந்தச் செவிலியர்கள் தொகுப்பூதியமாக மாதம் ரூ.14,000 பெறுகின்றனர். நிரந்தரச் செவிலியர்களின் சராசரி ஊதியம் ரூ.28,000. விதிமுறைகளின்படி, இரண்டு ஆண்டுப் பணிக்குப் பின்னர் அரசு தங்களை நிரந்தரம் செய்வதில்லை என்பது ஒப்பந்தச் செவிலியர்களின் நீண்ட நாள் புகாராக உள்ளது.
நிரந்தரச் செவிலியர்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு காலப் பலன்களையும் இவர்கள் பெற முடிவதில்லை. நிரந்தரச் செவிலியர்கள் போலவே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும் தங்களுக்கு ஒரே விதமான ஊதியமும் பிற பலன்களும் கிடைக்கும்வகையில் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என முந்தைய அதிமுக ஆட்சியிலிருந்தே ஒப்பந்தச் செவிலியர்கள் போராடி வருகின்றனர்.
2018இல் தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டுச் சங்கத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதில் அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த பிறகும், அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
2023இல் ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ கேட்டு இவர்கள் தொடுத்த வழக்கை அடுத்து, ஒரு தனிக் குழு அமைத்து, ஒப்பந்தச் செவிலியர், நிரந்தரச் செவிலியர் ஆகிய இரு தரப்பின் வேலைகளையும் ஒப்பிட்டு ஆய்வறிக்கை தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய குழு, மாவட்ட வாரியாக ஆய்வுசெய்து மார்ச், 2024இல் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் இரு தரப்பினரும் ஒரே விதமான பணியையே மேற்கொள்வதாகவும் ஒப்பந்தச் செவிலியர்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு அரசு நடத்துவதாகவும் கூறப்பட்டது. மேலும், ஒப்பந்தச் செவிலியர் என்கிற சொல்லே பொருத்தமற்றது என அவர்கள் குறிப்பிட்டதும் கவனிக்கத்தக்கது.
எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த மகப்பேறு காலப் பலன் தொடர்பான வழக்கில், ஒப்பந்த விதிமுறைகள் இத்தகைய பலன்களை வழங்காவிட்டாலும், எம்.ஆர்.பி. செவிலியர்கள் ‘மகப்பேறு பலன் சட்ட’த்துக்கு உட்பட்டவர்களே என அக்டோபர், 2024இல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் பாராமுகம் தொடர்வது வேதனைக்குரியது.
இந்நிலையில்தான், 2018ஆம் ஆண்டுத் தீர்ப்பை முன்வைத்து 2019இல் செவிலியர் சங்கத்தினர் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கான தீர்ப்பு ஏப்ரல் 21இல் வெளிவந்துள்ளது. அதில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, எம்.ஆர்.பி. செவிலியருக்கு நிரந்தரப் பணிக்கான ஊதியமும் மகப்பேறு காலப் பலன்களும் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இனியும் இவர்களின் கோரிக்கையை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. இல்லையெனில், மாவட்டம்தோறும் புதிய மருத்துவமனை கட்டி, மருத்துவச் சேவையைப் பரவலாக்கும் அரசின் சாதனைகளுக்கு இடையே அது ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படும்.