வழக்குகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கிய க.பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து பதவி விலகியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், இயல்பாக நடைபெற்றிருக்க வேண்டிய இந்தப் பதவி விலகல்கள், நீதிமன்றத்தின் அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றிருப்பது திமுக தலைமையிலான தமிழக அரசுக்குப் பின்னடைவாக அமைந்திருக்கிறது.
எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்கிவந்த மூத்த அமைச்சர் க.பொன்முடி, ஆன்மிக உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஆபாசமான கருத்தை அண்மையில் தெரிவித்தது பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழ வழிவகுத்தது. இதையடுத்து அவருக்கு அரசியல்ரீதியாக நெருக்கடிகள் அதிகரித்தன. பொன்முடி மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக்காட்டிய சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, தாமாகவே முன்வந்து விசாரிக்கத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்தார்.
இதன் தொடர்ச்சியாகப் பொன்முடியும் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பொன்முடி பேசியது தவறுதான் என்பதை உணர்ந்ததால்தான் திமுக தலைமை, அவருடைய கட்சிப் பதவியைப் பறித்தது. அப்போதே அவருடைய அமைச்சர் பதவி குறித்தும் முதல்வர் முடிவு செய்திருந்தால், சர்ச்சைப் பேச்சுகளை அரசு சகித்துக்கொள்ளாது என்கிற சமிக்ஞையை மக்களுக்குக் கொடுத்திருக்கும். அது பிற அமைச்சர்களுக்குக் கடிவாளமாகவும் இருந்திருக்கும்.
என்றாலும் பொன்முடி இப்போதாவது பதவி விலகியிருப்பது மற்ற அமைச்சர்களுக்குப் பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 2011 - 2015 காலத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்டதாக, அவர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் 2023 ஜூன் 14இல் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள்களுக்குப் பிறகு 2024 செப்டம்பர் 27 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த நிபந்தனை பிணையால் வெளியே வந்தார்.
சிறையிலிருந்து வெளியே வந்த ஒரு நாள் இடைவெளியில் அவர் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். எனவே, அவருடைய பிணையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா, பிணை வேண்டுமா என்று நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியது. இதில் தனக்குப் பிணைதான் தேவை என்பதை உணர்ந்த செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
செந்தில் பாலாஜி பிணையில் வெளியே வந்தவுடனே அவர் உடனடியாக அமைச்சராக்கப்பட்டது அப்போதே விவாதத்துக்குள்ளானது. ஊழல் வழக்குகளை எதிர்கொண்டபடி பல்வேறு மாநிலங்களிலும் முதல்வர், அமைச்சர்கள் பதவியில் இருக்கவே செய்கின்றனர். ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுபவர்களைச் சகித்துக்கொள்வதில் சமரசம் செய்துகொள்ளப்படுகிறது என்பதையே இது உணர்த்துகிறது. இந்த விஷயத்தில் ஒரு முன்மாதிரியை உருவாக்கும் வாய்ப்பு திமுக அரசுக்கு இருந்தும், அதைத் தட்டிக் கழித்துவிட்டது.
இப்போது அதற்கான பலனை அனுபவிக்கிறது. முதல்வராகவோ அமைச்சராகவோ இருந்துகொண்டு ஒருவர் வழக்கை எதிர்கொள்வது சந்தேக நிழலோடு பார்க்கப்படவே வழிவகுக்கும். இது ஊழல் வழக்குகளில் ஆளுங்கட்சிகள் சமரசம் செய்துகொள்கின்றன என்கிற தவறான அர்த்தத்தை மக்களுக்குக் கொடுத்துவிடும். அந்த வகையில், நீதிமன்றத்தின் அழுத்தத்தின் காரணமாக செந்தில் பாலாஜி பதவி விலகியிருப்பது, தாமதமான நடவடிக்கையாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டு வழக்குகளை எதிர்கொள்வோரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வது பற்றி ஆளுங்கட்சிகள் தீவிரமாகச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.