மாநிலங்கள் அதிகபட்ச சுயாட்சி உரிமை பெற்றிடவும், மத்திய - மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராயவும் தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழுவைத் தமிழக அரசு அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், இதுபோன்ற நடவடிக்கைகள் வெறுமனே அரசியல் மோதலாக அல்லாமல், அரசமைப்பின் அடிப்படையிலும் மக்களின் நலன் சார்ந்தும் அமைய வேண்டியது அவசியமாகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்ரல் 15 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110ஆவது விதியின் கீழ் உயர்மட்டக் குழு அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பறித்து வருவதாகவும் மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார். நீட் தேர்வுக்கு எதிராக மாநிலச் சட்டமன்றம் இயற்றிய தீர்மானத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டது, தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசு ஏற்காததால் ‘சமக்ர சிக் ஷா அபியான்’ திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது உள்ளிட்டவை குறித்தும் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற குழுவைத் தமிழ்நாடு அரசு அமைப்பது புதிதல்ல. ‘மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி’ என்பது திமுகவின் முழக்கங்களில் ஒன்று. 1969இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.கருணாநிதி, அதையொட்டித்தான் மத்திய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராயும் வகையில் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தார்.
மாநில அரசு இயற்றும் சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற வேண்டும் என்கிற பிரிவை நீக்க வேண்டும், ஆளுநர் பதவியை நீக்க வேண்டும், மாநில அரசைக் கலைக்கும் அதிகாரங்களை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை அக்குழு அளித்தது. 1971இல் வழங்கப்பட்ட இந்த அறிக்கையில் இடம்பெற்ற முக்கியப் பரிந்துரைகளை 1974 ஏப்ரல் 16இல் சட்டமன்றத்தில் தீர்மானமாக மு.கருணாநிதி நிறைவேற்றினார். ஆனால், எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
ஆனால், இதன் தொடர்ச்சியாகவே மத்திய - மாநில அரசுகளுக்கான உறவுகளை ஆராய மத்திய அரசே 1983இல் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் ஆர்.எஸ்.சர்க்காரியா தலைமையில் குழு அமைத்தது. இக்குழு மாநில அரசுகளைக் கலைக்கப் பயன்படுத்தப்படும் 356ஆவது பிரிவை அரிதாகவே பயன்படுத்த வேண்டும், மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியது.
பின்னர் 2007இல் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் மதன் மோகன் பூஞ்சி தலைமையில் ஒரு குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டது. 2010இல் இக்குழு தனது பரிந்துரைகளை அளித்தாலும், அவையும் செயல்படுத்தப்படவில்லை. அதே நேரத்தில் நாட்டில் இப்படியான ஒரு குழுவை ஒரு மாநில அரசால் ஏற்படுத்த முடியும் என்பதைத் தமிழ்நாடு 1969லேயே உணர்த்தியதை மறுக்க முடியாது.
மாநிலங்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று எண்ணுவதைத் தவறு என்று சொல்லிவிட முடியாது. மாநிலங்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. அந்த வகையில் இதுபோன்ற குழு அமைப்பதைப் பிரிவினையைத் தூண்டுவதாகக் கருத முடியாது. அதே வேளையில் இக்குழுக்களின் பரிந்துரைகள் செயலாக்கம் பெறும்போதுதான் அதற்கான மதிப்பு கிடைக்கும். இந்த விஷயத்தில் அரசியல் கோட்பாடுகளைத் தாண்டி மாநிலம், மக்களின் நலன் கருதி ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் இதை வலியுறுத்தும்போதுதான், சுயாட்சி பெறுவதற்கான தீர்வை நோக்கி நகர முடியும். அதற்கான கருத்தொற்றுமையை உருவாக்குவதை நோக்கிப் பயணிக்க தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.