தலையங்கம்

குப்பை அகற்றும் பணி: மக்களின் பாதுகாப்பே முக்கியம்!

செய்திப்பிரிவு

சென்னை கொடுங்கையூரிலும் மணலியிலும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஏற்கெனவே நிறுவப்பட்ட இரண்டு எரிஉலைகளால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் முறையிட்டுவரும் சூழலில், கொடுங்கையூரில் இன்னொரு எரிஉலையை சென்னை மாநகராட்சி நிறுவ இருப்பது விமர்சனத்துக்குரியது.

சென்னை மாநகராட்சி ஒரு நாளைக்கு 5,900 டன் குப்பையைக் கையாள்கிறது. நகரத்தின் மொத்த குப்பையும் கொடுங்கையூரிலும் பெருங்குடியிலும் கொட்டப்பட்டு வருகிறது. ஆண்டுக்கணக்கான குப்பைகளால் இந்த இரண்டு பகுதிகளிலுமே காற்று மாசுபாடு, நிலத்தடி நீர் பாதிப்பு, நச்சு உலோகப் படிமங்களின் பரவல் போன்றவற்றால் கடுமையான உடல்நலக் கோளாறுகளுக்கு மக்கள் உள்ளாகின்றனர்.

மறுபுறம், மக்கள்தொகைக்கு ஏற்பப் பெருகிக்கொண்டே போகும் திடக் கழிவை அகற்றுவது சென்னை மாநகராட்சிக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. அதற்காகப் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றும் மாநகராட்சி, ‘குப்பையிலிருந்து ஆற்றலுக்கு’ என்கிற பெயரில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் அரசு - தனியார் பங்களிப்பாகவும் எரிஉலை மூலம் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிப்பதை 2019இல் தொடங்கியது.

மணலி சின்ன மாத்தூரில் நிறுவப்பட்ட ‘உலர் கழிவு எரிஉலை’, ஒரு நாளைக்கு 10 டன் குப்பையையும் கொடுங்கையூர் எரிஉலை 50 டன் குப்பையையும் எரிக்கக்கூடியவை. ஞெகிழி, ரப்பர் போன்றவற்றையும் மறுசுழற்சி செய்ய முடியாத பிற பொருள்களையும் எரிப்பதால் மின்சாரம் மட்டுமல்லாமல், கார்பன் பொடி, சாம்பல் போன்றவையும் கிடைக்கும்.

நடைபாதைக்கான செங்கல் போன்றவை தயாரிக்க இவை பயன்படும். எனினும் நடைமுறையில் எரிஉலையால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எரிஉலையிலிருந்து வெளியாகும் சாம்பல் வீடுகளில் படிவதும் நீர்நிலைகளில் கலப்பதும் சுவாசக் கோளாறுகள் அதிகரிப்பதும் இப்பகுதியின் பெரும் பிரச்சினைகள்.

இந்த நிலையில், கொடுங்கையூரில் கூடுதலாக ஓர் எரிஉலை அமைக்கப்பட இருப்பது மக்களின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஒரு நாளைக்கு 2,100 டன் குப்பையை எரித்து 21 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது இது. குப்பையை விரைவாகவும் பொருளாதார நோக்கில் பயனுள்ள வகையிலும் அழிப்பதற்கு எரிஉலை உதவும் எனினும், இதற்கான விதிமுறை முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குரியதுதான்.

அண்மையில் ‘வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கம்’ உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொண்ட உண்மை கண்டறியும் ஆய்வில், சின்ன மாத்தூர் எரிஉலை, 2020லிருந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணையைப் புதுப்பிக்காமலே இயங்கிவருவது தெரியவந்துள்ளது. இந்தச் சிக்கலைத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தானாகவே முன்வந்து வழக்காக எடுத்துள்ளது.

ஏப்ரல் 16 அன்று நடைபெற்ற விசாரணையில், அரசுத் துறையே அனுமதியின்றி எரிஉலையை இயக்கியது ஏன் எனக் கேள்வி எழுப்பிய பசுமைத் தீர்ப்பாயம், சென்னை மாகராட்சியும் மாசுக்கட்டுப்பட்டு வாரியமும் தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஈரக் கழிவையும் சேர்த்து எரிப்பதால் புகை அதிகளவில் வெளியாவதாக மக்கள் முறையிடுகின்றனர்.

மின்சாரம் தயாரிக்க அதிகச் செலவாவது இன்னொரு குறை. சாதகங்களைவிட, பாதகங்களே அதிகம் என்பதால் உலக அளவில் பல எரிஉலைகள் மூடப்பட்டு வருவதும் கவனிக்கத்தக்கது. ஒரே பகுதியில் குப்பையைக் குவிக்காமல், அதைப் பரவலாகச் சேகரித்துவைப்பது அறிவியல் நோக்கில் வலியுறுத்தப்படுகிறது.

குப்பைகளை 100% தரம் பிரித்து, மறுசுழற்சி செய்து, மறுபயன்பாட்டுக் கொண்டுவருவது சென்னை மாநகராட்சியின் முழக்கமாக முன்பு இருந்தது. தற்போது அதற்கு முரணாக எரிஉலைகளை முன்னிறுத்துவதுதான் ஏமாற்றம் அளிக்கிறது. இம்முடிவை மாநகராட்சி கைவிட வேண்டும்.

SCROLL FOR NEXT