தலையங்கம்

யுபிஐ சேவையில் தடங்கல் தவிர்க்கப்பட வேண்டும்

செய்திப்பிரிவு

இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 12 அன்று ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனைச் சேவை (யுபிஐ) முடங்கியது. இந்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே யுபிஐ சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். யுபிஐ-யைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், அதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது கவலையளிக்கிறது.

டிஜிட்டல் இந்தியாவின் ஓர் அங்கமாக இணையவழிப் பணப்பரிவர்த்தனை முன்மொழியப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் தேசியப் பணப்பரிவர்த்தனைக் கழகத்தின் கீழ் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனைச் சேவையான யுபிஐ 2016இல் தொடங்கப்பட்டது.

‘ஃபோன் பே’, ‘கூகுள் பே’, ‘பேடிஎம்’ போன்றவை இந்தச் சேவையின் மூலம் வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கின்றன. தொடக்கத்தில் மிகச் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்த இந்தச் சேவை, 2020 கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் மத்தியில் பரவலாகக் கவனம்பெறத் தொடங்கியது. நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் வழியாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடும் என்கிற அச்சமும் இதற்குக் காரணம்.

தெருவோரக் கடைகள் தொடங்கிப் பெருநிறுவனங்கள் வரை இந்தச் சேவை மூலம் பணப்பரிமாற்றம் செய்யலாம் என்பதோடு, இந்தச் சேவை மூலம் பணப்பரிமாற்றம் செய்வதும் மிகவும் எளிது. இதன் காரணமாக, இன்றைக்குப் பெரும்பாலான மக்கள் கையில் பணம் எடுத்துச் செல்வதில்லை. தற்போது இணையவழிப் பணப்பரிவர்த்தனைகளில் 65% யுபிஐ வழியாக நடப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025 மார்ச் மாதத்தில் இந்தச் சேவையின் மூலம் ரூ.24.77 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருக்கிறது.

இப்படியொரு சூழலில் யுபிஐ சேவையில் ஏற்படும் மிகச் சிறு தடங்கல் அல்லது கோளாறுகூட லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும். ஏப்ரல் மாதத்தில் மட்டும் இதுவரை மூன்று நாள்கள் யுபிஐ சேவையில் தடங்கல் ஏற்பட்டதால், நாடு முழுவதும் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். பொருள்கள் வாங்குவதில் தொடங்கி வேறு எந்தச் சேவையையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. விற்பனையிலும் தொழிலிலும் முடக்கம் ஏற்பட்டது.

இது தொடர்பாகப் பலர் புகார் பதிவுசெய்ததைத் தொடர்ந்து, ‘தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பணப்பரிவர்த்தனையில் பகுதியளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம்’ என இந்திய தேசியப் பணப்பரிவர்த்தனைக் கழகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருந்தது.

பணப்பரிவர்த்தனைகளைக் கையாளும் எந்தவொரு சேவையும் 100 சதவீதம் பிழை இல்லாத்தன்மையுடன் செயல்பட வேண்டியது அவசியம். இதில் நேரும் சிறு பிசகுகூடப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்திவிடும். யுபிஐ சேவை கிட்டத்தட்ட துல்லியத்தன்மையுடன் செயல்பட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 21 முறை மட்டுமே இந்தச் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, 0.045% மட்டுமே கோளாறு ஏற்பட்டுள்ளது. இது மிகச் சிறு அளவாகத் தோன்றக்கூடும்.

ஆனால், பணப் பரிவர்த்தனையில் இந்தத் தடங்கலும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமே. குறிப்பாக, யுபிஐ போன்ற ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனைச் சேவை அமைப்பில் தடங்கல் ஏற்பட்டால், பெரும் பொருளாதாரச் சிக்கல் ஏற்படும் என்கிற கவனத்துடன் தேசியப் பணப்பரிவர்த்தனைக் கழகம் செயல்பட வேண்டும்.

இந்தச் சேவையில் இடைத்தரகர்களுக்கு இடமளித்திருப்பதால் தகவல் திருட்டு, பண மோசடி போன்றவையும் நடைபெற்றுவரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளையும் காண வேண்டியது அவசியம். மக்கள் அனைவரையும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு பழக்கிவிட்டு, அதைச் செயல்படுத்தும் அமைப்பில் கோளாறுகள் நிகழ்வதை முற்றிலுமாகத் தடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியையும் எதிர்மறை விளைவையுமே ஏற்படுத்தும். அதனால், பணப்பரிவர்த்தனைச் சேவைகளில் எவ்விதச் சமரசத்துக்கும் இடமின்றித் தடையில்லாச் சேவை வழங்க வேண்டியது அரசின் கடமை.

SCROLL FOR NEXT