கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கிறது தமிழ்நாடு. 2024-25இல், ‘உண்மையான பொருளாதார வளர்ச்சி’யில் 9.69 சதவீதத்தைத் தொட்டு, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. 2032-33இல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை அடையத் திட்டமிட்டுவரும் தமிழ்நாடு அரசு, அதை நோக்கிய பயணத்தில் உறுதியாக நடைபோடுவதை இந்தச் சாதனை உறுதிசெய்கிறது.
பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் உண்மையான பொருளாதார வளர்ச்சியானது ஒரு மாநிலம் அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சி மீதான துலக்கமான பார்வையை அளிக்கக்கூடியது. அந்த வகையில், மத்திய புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளின்படி 2023-24இல் ரூ.15.71 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) கடந்த 2024-25இல் ரூ.17.24 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 2011-12ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நிலையான விலைமதிப்பின்படி இது 9.69% வளர்ச்சி ஆகும். சேவைகள் துறை (12.7%), இரண்டாம் நிலைத் துறை (9%) ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி இதற்கு முக்கியப் பங்களித்திருக்கிறது.
இதற்கு முன்னர் 2017-18இல் 8.59% என்கிற உயரத்தைத் தொட்டிருந்த தமிழ்நாடு, பெருந்தொற்றுக் காலத்தில் (2020-21) நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் எதிர்மறை வளர்ச்சியைக் கண்ட நிலையிலும், 0.07% என நம்பிக்கையூட்டும் வகையில் ஸ்திரத்தன்மை காட்டியது.
நிதிநிலை அறிக்கையை ஒட்டி, கடந்த மாதம் தமிழ்நாடு அரசு முதன்முதலாக வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை, கடந்த ஆண்டு சென்னை பொருளியல் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த கணிப்பு ஆகியவற்றை விடவும் அதிக வளர்ச்சியைத் தமிழ்நாடு அரசு கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் பெயரளவு வளர்ச்சி விகிதம் என்னும் அடிப்படையிலும் தமிழ்நாடு 14.02 சதவீத வளர்ச்சி பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பிலும் (ஜிஎஸ்விஏ) தமிழ்நாடு 12.7 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. ஜிஎஸ்விஏ தேசிய சராசரி 7.3% மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்கது. 2025-26 நிதி ஆண்டில், அனைத்துத் துறைகளிலும் 0.5% கூடுதல் வளர்ச்சி இருந்தால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.7 சதவீதத்தை எட்டும் எனப் பொருளாதார அறிஞர்கள் கணித்திருக்கிறார்கள்.
“அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றைக் கொண்டு நமது மாநிலம், மக்களின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்னும் பேரிலக்கை நோக்கி வலிமை, உறுதியோடு விரைந்துகொண்டிருக்கிறோம்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு காட்டும் பாரபட்சத்துக்கு நடுவே, நம் முதல்வர் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு இந்தப் புள்ளிவிவரமே சாட்சி எனத் துணை முதல்வர் குறிப்பிட்டிருப்பதன் பின்னணியில் அரசியல் இருந்தாலும், அரசியல் மோதல்களைக் காரணமாகக் காட்டி, வளர்ச்சியில் கோட்டைவிடாமல் செயல்படுவதற்காகத் தமிழ்நாடு அரசு பாராட்டைப் பெறுகிறது. பல நாடுகள் பொருளாதாரத்தில் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் ஒரு மாநிலமாகத் தமிழ்நாடு முன்னெடுக்கும் பொருளாதாரச் செயல்பாடுகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன.
பாலினச் சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, இந்தச் சாதனையை எட்டியிருப்பதாக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். இதை அலங்கார வார்த்தைகளாக மட்டும் அல்லாமல் உளப்பூர்வமாக முன்னெடுத்துச் சென்றால் தமிழகம் மேலும் தலைநிமிரும்!