தலையங்கம்

சிலிண்டர் விலை உயர்வு: ஏழை, எளிய மக்களுக்குச் சுமை

செய்திப்பிரிவு

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. ஆனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு ஏற்படும் இழப்பை ஆட்சியாளர்கள் உணராதது ஏன் என்கிற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.

சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தல் நேரத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் 8 அன்று வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் ரூ.100ஐ மத்திய அரசு குறைத்தது. இதனால் சிலிண்டர் விலை ரூ. 918.50லிருந்து ரூ.818.50ஆகக் குறைந்தது. கடந்த ஓராண்டாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை.

தற்போது அனைத்துத் தரப்பினருக்கும் சிலிண்டருக்கு ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. ‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.503ஆக இருந்தது. அதன் விலை தற்போது ரூ.553ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் தற்போது சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.868.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ரூ.853ஆகவும், கொல்கத்தாவில் ரூ.879ஆகவும் அதிகரித்துள்ளது. சிலிண்டர் விலை ஒவ்வொரு நகரத்துக்கும் ஏற்ப மாறுபடும் என்பதால், இந்த விலை உயர்வில் வித்தியாசம் இருக்கிறது.

சர்வதேசச் சந்தையில் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துகொண்டே இருப்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.43 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய பெட்ரோலியம் - இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வுக்கு இதையே காரணமாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் ரூ.2 உயர்த்தப்பட்டபோதும், அந்தச் சுமையை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

பொதுவாக, சர்வதேசச் சந்தையில் விலை குறையும்போது, அதனால் அரசுக்குக் கிடைக்கும் அனுகூலம் நுகர்வோருக்கு வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு மத்திய அரசு மீது உண்டு. விலை உயரும்போது மட்டும் இழப்பை ஈடுகட்டுவதற்கு மக்கள் தலையில் சுமையை ஏற்றுவது ஏற்கத்தக்கது அல்ல.

மேலும் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதாக அரசு அறிவித்தாலும், நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையைப் புறக்கணிக்க முடியாது. இந்தச் சூழலில் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியிருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குப் பெரும் சுமையாகவே இருக்கும். மக்களின் வாங்கும் சக்தியில் இது சிக்கலை ஏற்படுத்தும்.

மேலும் தேர்தல் காலங்களில் சிலிண்டர் விலையை அரசு குறைக்க முன்வருவதும், தேர்தல் அல்லாத காலங்களில் விலையை உயர்த்துவதும் விமர்சனங்களுக்கு வழிவகுக்கிறது. 2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தலின்போது சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும் விமர்சிக்கப்படுகிறது. எனவே, சிலிண்டர் விலை உயர்வில் அரசியல் செய்யாமல் மாநில அரசும் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெறுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT