தலையங்கம்

ஐ.டி. தொழிலாளர் நலனும் காக்கப்பட வேண்டும்

செய்திப்பிரிவு

தங்களது வேலை நேரத்தை உறுதிசெய்வதை வலியுறுத்தியும், தொழிலக வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டத்திலிருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விலக்கு அளித்திருப்பதை கர்நாடக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) ஊழியர்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் 14 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பணிபுரிய நிர்ப்பந்திப்பதால் தங்களது வாழ்க்கை - வேலை சமநிலை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, எல் அண்டு டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் போன்றோர் ஊழியர்கள் வாரத்துக்கு 70, 90 மணி நேரம் வேலைசெய்யலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்ததன் பின்னணியில், கர்நாடக மாநில ஐ.டி. - ஐ.டி.இ.எஸ். ஊழியர் சங்கத்தினரின் போராட்டம் கவனிக்கத்தக்கது.

ஐ.டி. துறையினர் அதிக ஊதியம் பெறுகிறார்கள், உடலுழைப்பு இல்லாத ‘வொயிட் காலர்’ பணியைச் செய்கிறார்கள் என்று பெரும்பான்மைச் சமூகம் நம்புவதை இந்தப் போராட்டம் மாற்றியிருக்கிறது. பெண் ஊழியர்கள் பேறுகாலத்தில் கட்டாயப் பணிநீக்கம் செய்யப்படுவது, கூடுதலான நேரம் பணியாற்றுவதற்கான ஊதியத்தை வழங்காமல் இருப்பது, முன்னறிவிப்பின்றிப் பணிநீக்கம் செய்யப்படுவது எனப் பல்வேறு அவலங்களைச் சந்தித்துவருவதாகக் கூறுகிறார்கள் ஐ.டி. ஊழியர்கள். பெங்களூருவில் ஐ.டி. துறையில் பணியாற்றுவோரில் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தொழிலக வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம் ஐ.டி. ஊழியர்களுக்கும் பொருந்தும் என்கிறபோதும் பல நிறுவனங்கள், அதை முறைப்படி செயல்படுத்துவதில்லை. சிறு நிறுவனங்களில் சேரும் ஊழியர்கள் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பல்வேறு நிபந்தனைகளின்கீழ், ஏறத்தாழக் கொத்தடிமைத் தொழிலாளர்போலப் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

இது தொழிலாளர் நலச் சட்டத்துக்கு எதிரானது. பல ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்கள் 14 மணி நேரத்துக்கும் கூடுதலாகப் பணிபுரியும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். பணி இலக்குகளும் கடினமானவையாக இருக்கின்றன. இதுபோன்ற பணி நெருக்கடி, பணிநீக்க அச்சம், ஊதியமற்ற வேலை நேரம் போன்றவை ஐ.டி. ஊழியர்களின் உடல், மன நலனைப் பாதிக்கின்றன. ஐ.டி. துறையில் பணியாற்றுவோரில் 70 சதவீதத்தினர் மனநலன் சார்ந்த ஏதேனும் ஒரு பாதிப்புக்கு ஆளாவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இள வயது மரணங்களும் தவிர்க்க முடியாதவையாக ஆகிவரும் சூழலில் அரசு இதில் தலையிட வேண்டும். அனைத்து ஐ.டி. நிறுவனங்களிலும் தொழிலக வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டத்தின் அடிப்படையில் ஊழியர்கள் நடத்தப்படுகிறார்களா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். பேறுகாலத்தில் பெண்கள் கட்டாயப் பணிநீக்கம் செய்யப்படுவதையும் ஊழியர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்யப்படுவதையும் அரசு தடுக்க வேண்டும்.

தொழிற்சாலைகளில் ஊழியர்கள் 12 மணி நேரம் வேலை செய்வதை அனுமதிக்கும் வகையிலான மசோதாவைத் தமிழக அரசு நிறைவேற்றியபோது, பல்வேறு ஊழியர் சங்கங்கள் அதை எதிர்த்தன. அதைத் தொடர்ந்து, 2023இல் தனது மே நாள் கொண்டாட்டச் சிறப்புரையின்போது அந்த மசோதாவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வேறு எதையும்விடத் தொழிலாளர் நலனே முக்கியம் எனவும் அவர் கூறினார்.

தொழிலாளர்களில் ஐ.டி. ஊழியர்களும் அடக்கம். அவர்களது நலனும் காக்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்நாடு ஐ.டி. - ஐ.டி.இ.எஸ். ஊழியர் சங்கம் உள்படப் பல்வேறு ஐ.டி. ஊழியர் சங்கங்களின் நெடுநாள் கோரிக்கையான தொழிலாளர் - நிறுவனம் - அரசு ஆகியோரை உள்ளடக்கிய முத்தரப்புக் குழுவை அமைப்பது குறித்தும் அரசு முடிவெடுக்க வேண்டும். தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணிசமாகப் பங்காற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களைக் கைவிடுதல் ஒருபோதும் நியாயமல்ல!

SCROLL FOR NEXT