கச்சத்தீவை மீட்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக இருக்கும் கச்சத்தீவு விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கையை நோக்கி நகர்வது அவசியமாகிறது.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை 1974இல் இலங்கைக்கு மத்திய அரசு வழங்கிய பிறகு, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையின் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்கிறது. எல்லை தாண்டி வந்ததாகத் துப்பாக்கிச்சூடு நடத்துவது, கைது நடவடிக்கை, சிறையில் அடைப்பது, படகுகளைப் பறிமுதல் செய்வது, லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பது என இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிவருகின்றனர்.
தற்போது இலங்கைச் சிறைகளில் 97 இந்திய மீனவர்கள் வாடுகின்றனர். இவர்களில் 83 பேர் தண்டனைக் கைதிகள்; 3 பேர் மீது விசாரணை நடைபெற்றுவருகிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
சில தினங்களுக்கு முன், தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இலங்கையின் வவுனியாவுக்குச் சென்று அங்குள்ள மீனவப் பிரதிநிதிகளுடன் நட்புரீதியில் பேச்சுவார்த்தை நடத்தியது நம்பிக்கை அளித்தது. ஆனால், அதன் பின்னரும், இலங்கைக் கடற்படையால் 11 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் தங்களைக் கட்டுப்படுத்தாது என்கிற எண்ணமே இலங்கைக் கடற்படையிடம் மேலோங்கியிருக்கிறது.
இந்தச் சூழலில்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கச்சத்தீவை மீட்பது தொடர்பாகத் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பது பாராட்டத்தக்க நடவடிக்கை. ஆனால், கச்சத்தீவு விவகாரத்தை வைத்து திமுக அரசு நாடகமாடுவதாக அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் விமர்சித்திருப்பதும் புறந்தள்ளத்தக்கது அல்ல.
மத்தியில் 16 ஆண்டுகள் ஆட்சியில் அங்கம் வகித்தபோது கச்சத்தீவை மீட்க திமுக எடுத்த நடவடிக்கை என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அதேநேரத்தில், 1974க்குப் பிறகு தமிழகத்திலிருந்து மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் இது பொருந்தும். கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் காலத்தில் பாஜக இந்த விவகாரத்தைத் தேசிய அளவில் பேசுபொருளாக்கியதும் நினைவுகூரத்தக்கது.
தமிழக மீனவர்களின் இன்றைய பிரச்சினைக்கு 1974, 1976ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே காரணம் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிபோக இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக அமைந்தன என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில், தூதரகரீதியில் இந்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இந்திய மீனவர்கள் மீது இலங்கை அரசின் நடவடிக்கைகள் தொடரவே செய்கின்றன.
எனவே, மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய கச்சத்தீவு விவகாரத்தில் தீர்க்கமான முடிவை எட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. கச்சத்தீவு விவகாரத்தை அரசியல்ரீதியாக அணுகாமல், ஆக்கபூர்வமான நடவடிக்கை நோக்கி நகர்த்துவது அவசியம்.
பழைய தவறைச் சரிசெய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. இலங்கை செல்லும் பிரதமர் மோடி மீனவர்களின் பிரச்சினை பற்றிப் பேசுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினைக்குக் கச்சத்தீவை மீட்பதே வழி என்று மீனவர்களும் வலியுறுத்துகின்றனர். எனவே, அதை நோக்கியே இந்திய அரசின் நடவடிக்கையும் அமைய வேண்டும்.