தலையங்கம்

வட கிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவுவது அவசியம்!

செய்திப்பிரிவு

வன்முறைச் சம்பவங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் சில பகுதிகளைத் தவிர, மாநிலம் முழுவதும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (ஆஃப்ஸ்பா) ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளிலும் இந்தச் சட்டம் நீட்டிக்கப்படுகிறது.

அவ்வப்போது பதற்றத்துக்கு உள்ளாகும் வட கிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய தேவையை இந்த நடவடிக்கை உணர்த்துகிறது. 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டம், இந்திய தேசிய ராணுவத்துடன் இணைந்து ஜப்பான் படைகள் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்கள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் அவசரச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், நாகாலாந்து உள்ளிட்ட வட கிழக்குப் பகுதிகளில் பதற்றம் நிலவிய சூழலில், 1958இல் ஆஃப்ஸ்பா சட்டம் அமல்படுத்தப்பட்டது; வட கிழக்கு மாநிலங்கள், ஜம்மு - காஷ்மீர் போன்ற பகுதிகளில் உருவாக்கப்பட்டது;. இந்தச் சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் ராணுவத்தினர் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியாது.

ஆயுதமாகப் பயன்படுத்தும் வாய்ப்புள்ள எந்தப் பொருளை ஒருவர் கொண்டுவந்தாலும் அவரைச் சுட்டுக்கொல்ல ராணுவத்தினருக்கு இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது. இந்தச் சட்டத்துக்கு எதிராக அவ்வப்போது எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன.

இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சமூகச் செயல்பாட்டாளர் இரோம் ஷர்மிளா நீண்டகாலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். 2021இல் நாகாலாந்தில் கிளர்ச்சியாளர்கள் என்கிற சந்தேகத்தில் மக்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 14 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்னும் குரல்கள் வட கிழக்கு மாநிலங்களில் வலுவாக ஒலித்தன.

அதேவேளையில், பல்வேறு காரணங்களால் வன்முறைச் சம்பவங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படும் பகுதிகளில் ஆஃப்ஸ்பா சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது சரியானதுதான் என்கிற வாதத்தை ஆட்சியாளர்கள் தொடர்ந்து முன்வைத்துவருகிறார்கள்.

பாதுகாப்பு நிலவரத்தைப் பொறுத்து அவ்வப்போது சில பகுதிகளில் இந்தச் சட்டம் திரும்பப் பெறப்படுவதும் உண்டு. கடந்த 10 ஆண்டுகளில் வட கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் நிலையில், அங்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மணிப்பூரில் பாதுகாப்பு நிலவரம் மேம்பட்டிருந்த நிலையில், 2022 ஏப்ரல் 1 முதல் 2023 ஏப்ரல் 1 வரை, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆஃப்ஸ்பா சட்டம் திரும்பப் பெறப்பட்டிருந்தது. ஆனால், 2023 மே 3இல் மெய்தேய் சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே வெடித்த வன்முறையால் மீண்டும் அப்பகுதிகளில் ஆஃப்ஸ்பா அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் இம்பால், லம்பேல், விஷ்ணுபூர் உள்ளிட்ட 13 காவல் நிலையங்களின் அதிகார வரம்பைத் தவிர, முழு மாநிலத்திலும் ஆஃப்ஸ்பா சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள் துறை அமைச்சகம் 2025 மார்ச் 30இல் அறிவித்திருக்கிறது.

நாகாலாந்தின் எட்டு மாவட்டங்களுக்கும், மற்ற ஐந்து மாவட்டங்களின் 21 காவல் நிலைய வரம்புக்கு உள்பட்ட பகுதிகளுக்கும், அருணாசலப் பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் ஆஃப்ஸ்பா சட்டம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 1 முதல் இது அமலுக்கு வந்திருக்கிறது.

வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த ஆஃப்ஸ்பா போன்ற சட்டங்கள் அவசியம்தான் என்றாலும், வளர்ச்சிப் பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது, இனக் குழுக்களுக்கு இடையில் அமைதியை நிலைநாட்டுவதில் முனைப்புக் காட்டுவது போன்ற முன்னெடுப்புகளே வட கிழக்கு மாநில மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும்!

SCROLL FOR NEXT