ரயில்களில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது, இந்தியாவில் பெரும் பிரச்சினையாக நீடித்து வருகிறது. இந்நிலையில், அத்தகைய துயர நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்துவந்த பாலக்காடு - போத்தனூர் வழித்தடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கவில்லை எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ள செய்தி நிம்மதி அளிக்கிறது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
மின்சார வேலியால் தாக்கப்படுதல், விஷமூட்டப்படுதல், வேட்டையாடப்படுதல் போன்ற காரணங்களால் இந்தியாவில் யானைகள் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றன. ஏராளமான ரயில்வே தண்டவாளங்கள் காடுகளின் வழியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
காட்டு விலங்குகள் தண்டவாளங்களைக் கடக்கும்போது அடிபட்டு இறக்க நேர்கிறது. குறிப்பாக, யானைகளின் வழித்தடமாக இருந்துவரும் பகுதிகளை ரயில் தண்டவாளங்கள் மறித்துச் செல்வதால், அவை ரயில்களில் அடிபட்டு இறப்பது தொடர்கதையாகவே உள்ளது.
2021-24 காலக்கட்டத்தில் இந்தியாவில் 47 யானைகள் ரயில்களால் மோதப்பட்டு இறந்ததாக மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் மாநிலங்களவையில் அண்மையில் தெரிவித்தது. தமிழக, கேரள காட்டுப்பகுதியில் யானைகள் இவ்வாறு உயிரிழப்பதைத் தடுக்கத் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
மார்ச், 31 அன்று இந்த வழக்கை நீதிபதிகள் சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். கடந்த 27 மாதங்களாக ஒரு யானைகூட இந்த வழித்தடத்தில் ரயிலில் அடிபட்டு இறக்கவில்லை எனத் தெற்கு ரயில்வே சார்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் வனத் துறைகளோடு இணைந்து ரயில்வே ஆய்வில் ஈடுபட்டது. யானைகள் தண்டவாளத்தைக் கடக்கும் 11 இடங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் 9 இடங்களில் யானைகள் கடப்பதற்காகச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணம்.
போத்தனூர், மதுக்கரை ஆகிய பகுதிகளில் தண்டவாளங்களில் ‘சென்சார்’ கம்பிவடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிநவீன ஒளிப்படக் கருவிகளோடு கூடிய 12 உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தண்டவாளத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் யானைகள் நடமாடினால்கூட, உயர்கோபுரங்கள் மூலம் ரயில் நிலைய மேலாளருக்கும் ஓட்டுநருக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ரயில்கள் அந்தப் பகுதியைக் கடக்கும்போது குறைவான வேகத்தில் செல்வதால், யானைகள் அடிபடுவது தவிர்க்கப்படுகிறது. தெற்கு ரயில்வேயின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
ஆண்டுக்கு ஒரு யானையாவது ரயில் மோதி இறந்த இந்த வழித்தடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அத்தகைய ஒரு நிகழ்வுகூட இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. இந்த நிலை தொடர வேண்டும். யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்டவாளங்களில் நடமாடுவதைத் தெரிவிக்கும் ‘டிஸ்டிரிபியூடட் அகோஸ்டிக் சென்சார்’ (டிஏஎஸ்) அடங்கிய ஐடிஎஸ் (இன்ட்ரூஷன் டிடெக் ஷன் சிஸ்டம்) என்கிற அமைப்பு இந்தியா முழுவதும் தேவையான வழித்தடங்களில் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் அண்மையில் தெரிவித்திருப்பதும் நம்பிக்கை அளிக்கிறது.
போக்குவரத்து வளர்ச்சிப் பணிகள் அற மதிப்பீடுகளுடனும் நீடித்த தன்மையுடனும் இருக்க வேண்டும் எனில், இத்தகைய புத்தாக்கத்துடன் கூடிய தேடல்களில் ரயில்வே துறை தொடர்ந்து ஈடுபட வேண்டும். நீதிமன்றங்களின் தலையீடுகள் இன்றி இயல்பாகவே இவை நடந்தால் நல்லது. காடுகள், மலைகள், கடற்கரை ஓரங்களில் ஒரு கட்டுமானத்தை நிறுவுவது மட்டுமே வெற்றி அல்ல; அவற்றை வாழ்விடமாகக் கொண்ட உயிரினங்களையும் தொடர்ந்து பேணும்போதுதான் அதை முழு வெற்றியாக நாம் கருத முடியும்.