தலையங்கம்

அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கட்டும் மாணவர் சேர்க்கை!

செய்திப்பிரிவு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பரப்புரையை அண்மையில் தொடங்கி வைத்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கல்வி ஆண்டு முடியும் முன்பே, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான பணிகளில் தமிழக அரசு ஈடுபடுவது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் உள்ள 37,554 பள்ளிகளில் 52,75,203 மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

ஒருகாலத்தில், ஆங்காங்கே தனியார் பள்ளிகள் செயல்பட்டு வந்தபோதும், மிக வலுவாக இருந்த அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, 1990களில் பலவீனம் அடையத் தொடங்கியது. தனியார் பள்ளிகளின் அதிக அளவிலான பரவல், அவை வழங்கிய ஆங்கிலவழிக் கல்வி போன்றவையே காரணம். அரசுப் பள்ளியில் சேர்பவர்கள் தற்போதும்கூடப் பெரும்பாலும் ஏழை, கிராமப்புற மாணவர்கள்தான்.

அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க அவ்வப்போதைய அரசுகள் நடவடிக்கைகள் எடுக்கின்றன. முந்தைய அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு அரசு வழங்கும் மதிய உணவு கூடுதல் ஊட்டச்சத்துகள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டதும் அவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டதும் மாணவர்களை மகிழவைத்தன.

ஆங்கிலவழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதும், அரசுப் பள்ளி மாணவர் களுக்கென மாநில மருத்துவக் கல்லூரிகளில் 7.5% உள் ஒதுக்கீடு தரப்பட்டதும் பெற்றோருக்குப் புதிய நம்பிக்கையை அளித்தன. திமுக அரசு 2022இல் தொடங்கிய ‘காலை உணவுத் திட்டம்’, இந்திய அளவில் ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் போன்றவை அமைப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. அரசுப் பள்ளியில் பயின்றோருக்கு உயர்கல்வித் தொழில்நுட்பப் படிப்புகளில் வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளையும் சேர்த்தே உயிர்ப்பிக்கும் எனலாம்.

மாணவர் சேர்க்கைக்கான பரப்புரைகளின்போது ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகக் குழுவினரும், மக்களை நேரடியாகச் சந்திக்கும் முயற்சிகளுக்குப் பலன் கிடைப்பதைக் காண முடிகிறது. கடந்த ஆண்டு அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் ஐந்து லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்தனர் என்பதே மனநிறைவை அளிக்கக்கூடியதுதான்.

உள்கட்டமைப்பு வசதி சார்ந்த குறைகளைச் சரிசெய்ய வேண்டிய சவாலும் அரசின் முன் உள்ளது. 5,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பெரும்பாலானவை போதுமான நிதி இன்றித் தவிக்கின்றன. அவற்றில் சில பள்ளிகள், தனித்துவமான தொழில்நுட்பப் படிப்புகளை நிறுத்தும் நிலையில் உள்ளன. அரசுப் பள்ளிகளில் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை என்கிற விமர்சனமும் தொடர்ந்து ஒலிக்கிறது.

தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி மத்திய அரசு, தமிழக அரசுக்கு அளிக்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி வைத்துள்ளது. அரசியல் லாப நஷ்டக் கணக்குகளுக்கு அப்பால், இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுவதில் தமிழக அரசுக்கு முதல் பொறுப்பு உள்ளது. பரஸ்பர ஒத்துழைப்பே கூட்டாட்சியின் அடிப்படை என்பதை மத்திய அரசும் உணர வேண்டும். தடைகளைக் கடந்து, தமிழக அரசுப் பள்ளிகள் நிறைவான மாணவர் சேர்க்கையோடு பொலிவு பெற வேண்டும்.

SCROLL FOR NEXT