தலையங்கம்

காஸாவில் அமைதி திரும்ப சர்வதேசச் சமூகம் ஒன்றிணையட்டும்!

செய்திப்பிரிவு

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது மிகக் கொடூரமாகத் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலின் செயல், உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இவ்விவகாரத்தில், சர்வதேசச் சமூகம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது. 2023 அக்டோபர் 7இல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல், பல தசாப்தங்களாகத் தொடரும் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் இன்னும் மோசமான நிலையை அடையக் காரணமாகிவிட்டது.

பதிலடி என்கிற பெயரில் ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை 61,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 70%க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்திருக்கின்றன.

காஸா விவகாரம் மேலும் மேலும் மோசமடைந்துகொண்டிருந்த சூழலில், டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்பதற்கு முன்னதாக, முந்தைய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசும் கத்தார், எகிப்து ஆகிய நாடுகளும் மேற்கொண்ட முயற்சியால், இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையே தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் 2025 ஜனவரி 19இல் கையெழுத்தானது.

இரு தரப்பும் தங்கள் வசம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் இருந்தன. நிரந்தரப் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் ஈடுபட வேண்டும்; எகிப்துடனான காஸா எல்லையிலிருந்து இஸ்ரேல் படையினரை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பவை இவற்றில் முக்கியமானவை.

இந்தச் சூழலில், போர் நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த பரிந்துரையை ஹமாஸ் ஏற்கவில்லை என்று இஸ்ரேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறையாகக் கடைப்பிடிக்க இஸ்ரேல் தவறிவிட்டதாக ஹமாஸும் பரஸ்பரம் குற்றம்சாட்டிவருகின்றன. பொதுவாக, எதிர்பார்த்தது போலவே மார்ச் 18 முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது இஸ்ரேல். இதில் 896 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 1,984 பேர் காயமடைந்திருப்பதாகவும் காஸா சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

ஜோ பைடன் அரசின் முயற்சியால் ஜனவரி 19இல் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் விரும்பவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தற்போதைய அதிபர் டிரம்ப்பின் அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளையே இஸ்ரேல் விரும்புகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தத்தின்படி, போர்நிறுத்தத்தின் 16ஆவது நாளில், நிரந்தரப் போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் ஈடுபட வேண்டும். ஆனால், ஹமாஸ் கட்டுப்பாட்டில் காஸா இருக்கும் வரை, அந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்த விரும்பவில்லை என இஸ்ரேல் மறுத்துவிட்டது.

ஹமாஸின் 18 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில், தாக்குதல்கள், போர்ப் பதற்றம் என மக்கள் அவதியுற்றதாகக் கூறி, அந்த அமைப்புக்கு எதிராக காஸாவில் போராட்டங்களும் நடந்திருக்கின்றன. காஸா ஆட்சிப் பொறுப்பில் இருந்து ஹமாஸ் விலகினால் பிரச்சினை முடிவுக்கு வரும் என்றால், ஹமாஸ் அதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்திவருகிறார்கள்.

இதற்கிடையே காஸாவை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்றும், அங்கு இருக்கும் மக்கள் எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர வேண்டும் என்றும் டிரம்ப் பேசியது குழப்பத்தை அதிகரித்தது. இப்படியான ஏற்பாட்டை அந்நாடுகள் ரசிக்கவில்லை.

இதனால், தங்கள் எதிர்காலம் என்ன என்று தெரியாமல் காஸா மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘இஸ்ரேலின் செயல்பாடுகள் அக்கிரமமான குற்றங்கள்’ என்று ஐநா கண்டனம் தெரிவித்திருந்தாலும், அதைத் தாண்டி உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான். சர்வதேசச் சமூகம் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.

SCROLL FOR NEXT