தலையங்கம்

அரசுப் பணியில் தமிழ் உறுதிசெய்யப்படுமா?

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழ் தெரியாமலேயே பணிபுரியும் சூழல் நிலவுவது குறித்து உயர் நீதிமன்றம் அண்மையில் கவலை தெரிவித்திருக்கிறது. நியாயமான இந்தக் கவலை குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறுவது அவசியம். தேனியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக 2018இல் பணியில் சேர்ந்த எம்.ஜெயக்குமார், தமிழ் மொழியில் படிக்கவும் எழுதவும் தெரியவில்லை என்கிற காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

தன்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடும்படி 2022இல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜெயக்குமார் தமிழர் என்பதால் அவரைப் பணியில் சேர்க்கும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து மின்சார வாரியம் மேல்முறையீடு செய்தது. அதற்கான வழக்கை மார்ச் 10 அன்று ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தன் தந்தையின் பணி காரணமாக ஜெயக்குமார் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்ததால், அவருக்குத் தமிழ் ஒரு பாடமாக இல்லை எனவும் தற்போது தமிழக அரசின் மொழித்தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றுவிட்டதால், பணியில் சேரத் தகுதி உள்ளது எனவும் ஜெயக்குமாரின் வழக்கறிஞர் வாதாடினார். எனினும் அரசு விதித்த இரண்டு ஆண்டு காலக்கெடு முடிவதற்குள் மொழித்தேர்வில் ஜெயக்குமார் தேர்ச்சி பெறவில்லை என்பதால், பணியை நிறுத்திவைக்க வேண்டும் என மின்சார வாரியம் தரப்பில் கூறப்பட்டது.

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘தமிழ் தெரியாத ஒருவரால் எப்படித் தமிழகத்தில் அரசுப் பணிகளைச் செய்ய முடியும்? தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்குத் திறம்படப் பணிபுரியத் தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மாநில அரசின் அலுவலக மொழி தெரியாமல் ஏன் அரசு வேலைக்கு வருகிறீர்கள்?’ என அதிருப்தி தெரிவித்தனர். ‘எந்த மாநிலத்தில் பணிபுரிந்தாலும், அதன் அலுவல் மொழி தெரிந்திருக்க வேண்டும்’ எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை அடுத்த ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

‘தமிழகத்தில் தமிழில் தேர்ச்சி இல்லாமல் அரசுப் பணியில் நியமிக்கப்படுவது ஒரு பிரச்சினையாகத் தொடர்ந்து இருந்துவருகிறது; தமிழில் போதிய அறிவு இல்லையெனில் அரசுப் பணியை இழக்க நேரிடுமா என அரசு பரிசீலிக்க வேண்டும்’ என நீதிபதிகள் கூறியிருப்பது கவனிக்கத்தகுந்தது. தமிழக அரசு அலுவலகங்களில் தகவல் பரிமாற்றங்கள் பெரும்பாலும் தமிழில்தான் நடைபெறுகின்றன.

சில குறிப்பிட்ட தொழில்நுட்பச் சொற்களுக்கும் வெளி மாநில அரசுகளுடன் தொடர்புகொள்ளும்போதும் மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஓர் அரசு ஊழியர் தமிழ் மொழியில் எழுதவோ படிக்கவோ தெரியாமல் இருப்பது, மக்களுடனான தகவல் தொடர்பிலும் சேவையிலும் நிச்சயம் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தனிநபர் ஒருவரின் வேலையைப் பறிப்பதாக இது தொடர்பான விவாதம் மாறிவிடக் கூடாது. ஆங்கிலவழிக் கல்வி காரணமாகத் தமிழில் எழுதத் தெரியாமல் பல தமிழ் இளைஞர்கள் இருக்கின்றனர் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு சான்று. இவர்கள் தமிழக அரசுப் பணிக்கு வருகையில், தமிழ்வழியில் பயின்றவர்கள் தங்களது வாய்ப்பை இழக்கின்றனர் என்பது கவலைக்குரியது.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் தமிழ் மொழி குறித்த தேர்வை இரண்டு ஆண்டுகளுக்குள் எழுதி முடிப்பது கடினமான செயல் அல்ல. தமிழில் எழுதத் தெரியாவிட்டாலும்கூட அரசு அலுவலகங்களில் பணிபுரிய முடியும் என்கிற மனநிலை மாற வேண்டும். இத்தகைய ஊழியர்களுக்குச் சரியாக வழிகாட்டுவது, தமிழ் மொழியில் தேர்ச்சி பெற வைப்பது, பிழையற்ற மொழிப் பயன்பாட்டை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றை அரசு மிகுந்த அக்கறையுடன் முன்னெடுக்க வேண்டும்!

SCROLL FOR NEXT