தலையங்கம்

வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு: தவிர்க்க முடியாதது!

செய்திப்பிரிவு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து பேசிவரும் வேளையில், தேர்தல் ஆணையத்தின் முடிவு வரவேற்கத்தக்கது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இல் குறிப்பிட்டுள்ளபடி சட்டக் கட்டமைப்புக்குள் செயல்படத் தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது. அதன்படி உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவது மட்டும் தேர்தல் ஆணையத்தின் கடமை அல்ல; தேர்தல் முன்னேற்பாடாகத் தகுதிவாய்ந்த வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பது, எந்த ஒரு வாக்காளரும் விடுபடாமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்ட பணிகளும் முக்கியமானவை.

ஆனால், அண்மைக் காலமாக வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன. ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அடையாள அட்டை, போலி வாக்காளர் அட்டைகள் புழக்கம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவற்றில் முக்கியமானவை.

இந்தச் சூழலில்தான் வாக்காளர் ஒளிப்பட அடையாள அட்டையுடன் (இபிஐசி) ஆதாரை இணைப்பது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையர், யுஐடிஏஐ-யின் சிஇஓ, உள்துறைச் செயலர், சட்டச் செயலர் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் மார்ச் 18இல் நடைபெற்றது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 326, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கையை மேற்கொள்வது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு என்பது தன்னார்வ நடவடிக்கையாகவே இருந்துவருகிறது; 65 கோடி பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆனால், இவற்றை இணைப்பதற்கு இதுவரை தரவுத் தளங்கள் முறையாக இல்லை. இனி, இந்தப் பணியைத் தேர்தல் ஆணையமும் யுஐடிஏஐ-யும் விரைவில் மேற்கொள்ள உள்ளன.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படாது என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. அதே நேரத்தில் இவற்றை இணைக்க விரும்பாத வாக்காளர்கள், அதற்கான காரணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் விளக்க வேண்டியிருக்கும் என்கிற தகவல்களும் வெளியாகி வருகின்றன.

வாக்காளர் அடையாள அட்டை இந்தியக் குடியுரிமையின் அடிப்படையில் 18 வயது நிரம்பிய வாக்காளருக்கு வழங்கப்படுகிறது. ஆதார் எண் என்பது தனி மனிதரின் அடையாளங்கள், வசிக்கும் பகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. மாறுபட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இவற்றை இணைப்பதிலும் பயன்படுத்துவதிலும் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும்.

குறிப்பாக, தனி மனிதரின் விவரங்கள் உரிய வகையில் பாதுகாக்கப்பட வேண்டும். ஆதார் எண்ணைக் கட்டாயப்படுத்திப் பெறக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் பல வகைகளில் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆக, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மட்டும் நீண்ட காலத்துக்குத் தள்ளிப்போடவும் முடியாது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு என்பது உறுதியாகும். வெவ்வேறு ஊர்களுக்கு வாக்காளர் இடம் மாறும்போது, ஆதாரில் முகவரியை மாற்றும்போது, வாக்கு செலுத்தும் தொகுதியும் மாறும் நிலை உருவாகும்.

உள்ளாட்சி நிர்வாகங்களில் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்போது ஆதார் எண்ணும் கேட்கப்படுகிறது. எனவே, அதன் வழியாக இறந்தவர்களின் பெயரையும் நீக்க முடியும். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளை நிகழ்த்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்பதால், வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் எண் இணைப்பு காலத்தின் கட்டாயம்.

SCROLL FOR NEXT