இந்தியாவில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் தொடங்கிவிட்டது. மகாராஷ்டிரம், கோவா மாநிலங்களில் பிப்ரவரி மாதத்திலேயே கடுமையான வெப்பநிலை நிலவியது. 124 ஆண்டுகளில் மிக அதிக வெப்பநிலை நிலவிய பிப்ரவரி இது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திருப்பூரில் 100 டிகிரி செல்சியஸைத் தாண்டிவிட்ட நிலையில் வேலூர், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது.
உலகம் முழுவதுமே 2024ஆம் ஆண்டில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு கோடைக்கு முன்னதாகவே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸையும் கடற்கரையோரப் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸையும் மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸையும் தாண்டினால் அதை வெப்ப அலையாக வானிலை ஆய்வு மையம் அறிவிக்கிறது.
வெப்பநிலை அதிகரிப்பதால், பகலில் அதிக வெப்பமும் ஈரப்பதமும் இரவில் அதிக வெப்பமும் மக்களைப் பாதிக்கின்றன. வெப்ப அலைகளும் அதிக வெப்ப நிலையும் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் உடல்நலத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
கோடைக்காலத்தில் நிலவும் அதிக வெப்பத்தால் பச்சிளங்குழந்தைகள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள், இணைநோய் பாதிப்பு உள்ளவர்கள், மனநலப் பிரச்சினை உள்ளவர்கள் போன்றோர் பாதிக்கப்படக்கூடும். இவர்கள் தங்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சிலர் வெப்ப மயக்கம் நோயால் பாதிக்கப்பட்டு மயக்கடையும் நிலைக்குச் சென்றுவிடுவர். இதைத் தவிர்க்க அடிக்கடி நீர், மோர், இளநீர் போன்றவற்றை அருந்த வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வெப்பநிலையை மக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழக அரசும் பல்வேறு ஆலோசனைகளைப் பரிந்துரைத்திருக்கிறது; அடிக்கடி நீர் அருந்துவதில் தொடங்கி நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை வெளியே செல்லக் கூடாது என்பது வரை பலவற்றையும் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இது சாத்தியமில்லாத நிலையிலும் காலநிலை மாற்றத்தால் இனி ஆண்டுதோறும் வெப்பநிலை அதிகரிக்கும் என்கிற நிலையிலும் அரசு கொள்கைரீதியான முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது. கட்டிடம் கட்டும் தொழிலில் ஈடுபடுவோர், சாலையோர வியாபாரிகள், உணவுப்பொருள் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்வோர் போன்ற பலரும் வெயிலில் அலைந்தபடிதான் பணிசெய்கின்றனர்.
இவர்களுக்குக் குறிப்பிட்ட சில மணிநேரமாவது பணியிலிருந்து விலக்கு அளித்து ஓய்வெடுக்கவைக்கலாம். அரசு மருத்துவமனைகளில் வெப்ப மயக்கம் உள்ளிட்ட கோடைக்காலப் பாதிப்புகளுக்கென்று தனிப்பிரிவை அமைக்க வேண்டும். சாலையோரங்களில் குடிநீர் மையங்களை அமைப்பதோடு அவற்றில் எந்நேரமும் குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வெப்பத்தால் பாதிக்கப்படுவோரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில் அவசர ஊர்திகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அவசர ஊர்திகளில் வெப்ப மயக்க பாதிப்பு சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளைக் கோடைக்காலம் முடிகிற வரைக்கும் பராமரிக்க வேண்டும். வெப்பத்தால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வைப் பரவலாக்குவதும் அரசின் கடமை. காலநிலை மாற்றமும் வெப்பநிலை உயர்வுக்குக் காரணம் என்பதால் அதைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகளை விரிவுபடுத்துவது நீண்டகால நோக்கில் பலனளிக்கும்.
எனவே, அரசு இதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். கனமழை, பெருவெள்ளத்தைப் போலவே அதிக வெப்பமும் இயற்கைச் சீற்றம்தான் என்கிற அடிப்படையில் அதிலிருந்து மக்களைக் காப்பதற்கான பணிகளில் அரசு முழுமூச்சுடன் இறங்கி உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.