தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நடந்துவரும் அதிகார மோதல், தமிழ்நாடு உடற்கல்வியியல் - விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமன விவகாரம் மூலம் மேலும் வெட்டவெளிச்சமாகி யிருக்கிறது. 2021இல் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்தே ஆளுநர் மாளிகைக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒருவகைப் பனிப்போர் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. சட்டசபை கூட்டத்தொடர் தேசியகீதம் பாடித்தொடங்கப்படவில்லை என ஆளுநர் வெளிநடப்பு செய்ததும் இரு முறை நடந்தது.
இத்தகைய மோதல்களில் உயர் கல்வி பயிலும் மாணவர்களும் பாதிக்கப்படுவதுதான் இன்னும் கவலை அளிக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக ஆளுநர்பொறுப்பு வகிக்கிறார். ஆனால், தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகங்களின் வேந்தராகச் சில ஆலோசனைகளைச் செயல்படுத்த அழுத்தம் கொடுப்பதும் அதற்குத் தமிழக அரசு உடன்படாமல் இருப்பதும் தொடர்கதையாக நீள்கிறது.
துணைவேந்தரைத் தேர்வு செய்யும்போது, தேர்வுக் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் ஒருவரையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என ஆளுநர் வலியுறுத்துகிறார். இதைத் தமிழக அரசு ஏற்காத நிலையில், சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிக்கப்படுவது பல மாதங்களுக்குத் தள்ளிப்போகிறது. சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட எட்டு நிறுவனங்களில் துணைவேந்தர் பதவி காலியாகவே உள்ளது.
மோதலின் உச்சமாக, மாநில முதலமைச்சரையே வேந்தராக அறிவிக்கும் ஒரு சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் 2024இல் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இதே நோக்கத்துடன் கொண்டுவந்த மசோதாவைப் போலவே இதுவும் ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் சட்டத்திருத்தம்-2025’, துணை வேந்தருக்கான தேடுதல் குழுவில் ஆளுநர், பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகம் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதி இருக்க வேண்டும் என்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 2025 ஜனவரி 9இல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்க்கட்சியான அதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
துணைவேந்தர் இல்லாத பட்டியலில் தமிழ்நாடு உடற்கல்வியியல் - விளையாட்டுப் பல்கலைக்கழகமும் அண்மையில் இணைந்திருக்கிறது. பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லாததால், கல்விக்கட்டணம் மூலமான வருவாயில் இப்பல்கலைக்கழகம் பின்தங்கியே இருக்கிறது.
துணைவேந்தர் பொறுப்பு வகித்த எம்.சுந்தர் ஓய்வுபெற்ற நிலையில், அடுத்து ஒருவரை நியமிப்பதற்கான தமிழக அரசின் ஆலோசனைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்வுக் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் இல்லை என்பதே இங்கும் அவரது மறுப்புக்குக் காரணமாகியுள்ளது.
மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதைப் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. மசோதாக்களை நிலுவையில் வைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதற்கு உரிய காரணம் கூற வேண்டும் என அண்மையில்கூட உச்ச நீதிமன்றம் கூறியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர், தனது கொள்கை சார்ந்து யோசனைகளைத் தெரிவிக்க முடியும். எனினும், அரசு நிர்வாகத்தைக் கட்டுப்படுத்த முயல்வது கூட்டாட்சிக்கான கட்டமைப்புக்கு முரணாகவே அமையும்.
அதேவேளையில், ஏற்கெனவே மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை மறைத்து திசைதிருப்புவதற்குக் காரணங்களைத் தமிழக அரசு தேடிவருவதையும் மறுக்க முடியாது. ஆளுநரும் அதற்குப் புதுப்புது சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்துவிடக் கூடாது. உறுதியான, நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவது என்ற போக்கை ஆளுநர் கைக்கொள்வதுதான் இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். தங்கள் மோதலால் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு இரு தரப்புக்கும் உள்ளது.