தலையங்கம்

சூரிய மின்சக்தி: முன்னிலை வகிக்கும் இந்தியா!

செய்திப்பிரிவு

இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு அதிகரித்திருப்பதும் புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றல் ஆதாரத்தைப் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிப்பதும் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன. காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமடைவது அதிகரித்து, உலகம் முழுவதும் பல்வேறு இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இந்த முன்னகர்வு, சுற்றுச்சூழல் மீதான இந்தியாவின் அக்கறையைப் பறைசாற்றுகிறது.

காலநிலை மாற்றத்துக்கான முக்கியக் காரணியாகப் புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடு இருப்பதால், அவற்றுக்குப் பதிலாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களைப் பயன்படுத்தும் திட்டம் காலநிலை உச்சி மாநாடுகளில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த விஷயத்தில், இந்தியா கடந்த சில ஆண்டுகளாக முழுமூச்சுடன் ஈடுபட்டுவருவதுடன் 2070க்குள் கார்பன் உமிழ்வை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துவதை இலக்காகவும் நிர்ணயித்திருக்கிறது. சூரிய மின்சக்தியின் மூலம் 2030க்குள் 500 கிகாவாட் மின் உற்பத்தியை எட்டும் நோக்கத்துடன் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.

2023 நிலவரப்படி, சூரிய மின்சக்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களை மையப்படுத்திய மின் உற்பத்தி, நாட்டின் மொத்த உற்பத்தியில் 30% பங்கு வகித்த சூரிய மின்சக்தி உற்பத்தித்திறன் 2014இல் 2.812 கிகாவாட்டாக இருந்த நிலையில், 2025இல் 100 கிகாவாட்டாகப் பெரும் எழுச்சி கண்டுள்ளதாக மத்திய அரசின் புதிய - புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024இல் சூரிய மின் உற்பத்தி மையங்கள் இரண்டு மடங்கு அதிகமாக நிறுவப்பட்டுள்ளன. ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மொத்த சூரிய மின் உற்பத்தியில் 71% பங்கு வகிக்கின்றன.

ஜனவரி 2025 நிலவரப்படி, புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றல் ஆதாரங்களின் அடிப்படையிலான இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 217.62 கிகாவாட்டாக உயர்ந்திருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகள், நிதிப் பங்களிப்பு, பசுமை ஹைட்ரஜன் முன்னெடுப்புகள், சூரிய மின்சக்தி மையங்கள் - காற்றாலைகளின் உற்பத்தி அதிகரிப்பு போன்றவற்றின் மூலம் இந்தச் சாதனையை நிகழ்த்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் மத்திய - மாநில அரசுகளுக்கு நிகராகத் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் இருக்கிறது. மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் மத்திய அரசு கூடுதலாக நிதியுதவியும் மானியமும் வழங்குவதன் மூலம் சூரிய மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்.

பிரதமரின் ‘சூர்ய கர்: முஃப்தி பிஜிலி யோஜனா’ திட்டம், வீட்டுக்கூரைகளில் சூரிய மின்தகடுகளைப் பதிக்க நிதியுதவி வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி வீடுகளை ஒளிரச் செய்வதை இலக்காக அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இதுவரை 7 லட்சம் வீடுகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் சூரிய மின்சக்தித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்பதை மத்திய அரசு தற்போது நிரூபித்துவருகிறது. இந்தத் திட்டம் மேலும் விரிவாக்கப்பட வேண்டும். வீடுகளிலும், அரசு - தனியார் நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் சூரிய மின்தகடுகளை அமைப்பது குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் களைய வேண்டும்.

அனைத்துவிதமான மின் கருவிகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்படுத்த முடியும் என்கிற நிலை ஏற்பட்டால்தான் மக்களின் பங்களிப்பு அதிகரிக்கும். அரசு இதையும் கவனத்தில்கொண்டு மக்களுக்கும் சூழலுக்கும் உகந்த வகையில் இந்த மின் உற்பத்தித் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT