தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) சட்டமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். வேளாண்மைத் துறைக்கான நிதிநிலை அறிக்கையை உழவர் நலன் - வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், திமுக அரசு அளித்திருக்கும் இந்த நிதிநிலை அறிக்கைகளில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இல்லை; நிதானம் கடைப்பிடிக்கப்பட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது.
பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு, ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கு 18 வயது வரைக்கும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கவிருப்பது ஆகியவை மெச்சத்தகுந்த அறிவிப்புகள். 1,721 முதுநிலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைக்கும். பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் அசையாச் சொத்துகளுக்குப் பதிவுக்கட்டணம் 1% குறைக்கப்படும் என்கிற அறிவிப்பு, பெண்களுக்கான சொத்துரிமையைப் பரவலாக்க வேண்டும் என்கிற முனைப்பைக் காட்டுகிறது.
திருநர்களுக்கு ‘ஹோம் கார்டு’ வேலை அளிப்பது, உள்ளாட்சி நிர்வாகங்களில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது, அவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்குச் சம்பளத்தில் ரூ.2,000 மானியம் ஆகியவை பாராட்டுக்குரியவை. ஓசூர் டைடல் பூங்கா, ஓசூர் அறிவு நடைபாதை ஆகிய திட்டங்கள், தொழில் மண்டலமாக உள்ள அப்பகுதிக்கு இன்னும் வலுசேர்க்கும். மதுரை மேலூரிலும், கடலூரிலும் காலணி உற்பத்திப் பூங்காக்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
சென்னையின் போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. சென்னைக்கு வெளியே அமையவுள்ள ‘உலகளாவிய நகரம்’ என்னும் திட்டம், நீண்ட கால முறையீடாக உள்ள இடநெருக்கடிக்குத் தீர்வாக அமையக்கூடும். மதுரையில் வரவுள்ள ‘அகரம் - மொழிகளின் அருங்காட்சியகம்’, கடலுக்கடியில் அகழாய்வுகள் செய்ய இருப்பது ஆகியவை வரலாற்றுத் தேடலில் புதிய முன்னெடுப்புகள். காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ள ‘தமிழ்நாடு அரசு பேரிடர் நிர்வாக நிறுவனம்’ குறித்த அறிவிப்பு ஆக்கபூர்வமானது.
வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை, வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்காக மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் நிதி உருவாக்குவது, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.50 கோடி மதிப்பில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது, ஒன்பது ஒழுங்குமுறைக்கூடங்களில் தலா 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் சேமிப்புக்கிடங்குகள் உருவாக்குவது போன்றவை கவனம் ஈர்க்கின்றன.
நிதிநிலை அறிக்கை குறித்த அனைத்து அறிவிப்புகளிலும் ரூபாய் என்பதைத் தமிழ் எழுத்திலேயே தமிழக அரசு குறிப்பிட்டிருக்கிறது. மழலையர் பிரிவிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியைச் சீராக, முழுமையாகக் குழந்தைகளுக்கு அளிக்கும் நோக்கமுள்ள சமக்ர சிக் ஷா திட்டத்துக்காக மத்திய அரசு நிதி வழங்காததால், அதை ஈடுசெய்ய மாநில அரசே ரூ.2,152 கோடியை அளிக்க இருப்பதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்தப் பரஸ்பர மோதலில் தமிழக மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க மத்திய – மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
2025-26ஆம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ரூ.1,06,963 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஊதியம், செயலாக்கம், பராமரிப்பு, மானியம் போன்றவற்றை உள்ளடக்கிய வருவாய்ச் செலவினம் எதிர்பார்த்ததைவிட ரூ.3,73,203 கோடி அதிகம் எனவும் நிதிநிலை அறிக்கை கூறுகிறது. மாநில அரசின் கடன் வரம்புக்கு உள்பட்டே கடன் இருப்பதாகத் தமிழக நிதித் துறைச் செயலாளர் த.உதயசந்திரன் கூறியிருந்தாலும், பற்றாக்குறை அதிகரிப்பதை அரசு மறந்துவிடக் கூடாது.
நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகள் சம்பிரதாயமானவை என்றில்லாமல், உண்மையாகவே மக்களுக்கான திட்டங்கள் சென்றுசேர வேண்டும் என்றால், கடன் வரம்பு, பற்றாக்குறை போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை அவசியம்!