தமிழ்நாடு பட்ஜெட் 2023 எதிர்பார்ப்புகள் | நிதிநிலை அறிக்கை: இலக்குகளும் பயணமும்

By வெ.சந்திரமோகன்

‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’ எனும் ஆவணத்தை 2012இல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதன்படி 2023ஆம் ஆண்டுவாக்கில் உள்கட்டமைப்புத் துறைகளில் ரூ.15 லட்சம் கோடி மொத்த முதலீடு எனும் இலக்கை எட்டுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

தனிநபர் வருமானத்தை அதிகரிப்பது, 2 கோடிப் பேருக்கு வேலை என்றும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. அடுத்தடுத்து நிகழ்ந்த முன்னேற்றங்கள், பின்னடைவுகள், ஆட்சி மாற்றம் ஆகியவற்றினூடே 2023ஆம் ஆண்டுக்கு வந்துவிட்டோம்.

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட தலைசிறந்த பொருளாதார அறிஞர்களின் ஆலோசனைகளின்படி இயங்கிவரும் திமுக அரசு, இன்று தனது மூன்றாவது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி குறித்தும், செய்யப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் விவாதிப்பது அவசியம்.

வரி வருவாய்: பிப்ரவரி 1இல் வெளியிடப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமளித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். புதிய திட்டங்கள் உருவாக்கப்படுவதான அறிவிப்புகள் இருந்தாலும், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார்.

2017-2022 காலகட்டத்தில் கணிசமான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்ற ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என ரிசர்வ் வங்கி மேற்கொண்ட ஆய்வு குறிப்பிடுகிறது. அந்த ஆய்வறிக்கையின்படி தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.40,000 கோடி. எனினும், வரி வருவாயில் அது 10%க்கும் குறைவு என்பதுதான் தமிழ்நாடு அரசு முன்வைக்கும் விமர்சனம்.

கடந்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 4.69%இலிருந்து 3.80% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த அம்சங்களை அலசி ஆராய்ந்து, வரி வருவாயைப் பெருக்கும் வகையிலான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் துறை எதிர்பார்ப்புகள்: நாட்டிலேயே அதிகத் தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் என்பது மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளில் அதிகத் தொழிலாளர்களைக் கொண்ட மாநிலம் என்பதும் தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு. இந்நிலையில், தொழில் துறை மேம்பாட்டுக்கான முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தடையின்றி நடந்த மின்விநியோகத்தால் மின் நுகர்வு உச்சத்தை எட்டியிருப்பதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார். உற்பத்தி, வேளாண்மை, சேவை உள்ளிட்ட துறைகளில் மின் நுகர்வால் ஏற்பட்டிருக்கும் பலன்கள் என்னென்ன என இந்த நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கலாம்.

நலிவுற்ற தொழில் முனைவோரை மீட்டெடுப்பதில் அரசிடம் முனைப்பு இல்லை எனும் விமர்சனம் சிறு குறு தொழில் முனைவோர் மத்தியில் நிலவுகிறது. பெருந்தொற்றுக் காலப் பின்னடைவுகளிலிருந்து இன்னும் மீண்டுவராத பல நிறுவனங்கள் அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

கடந்த நிதிநிலை அறிக்கையில் புத்தொழில் (Start up) தொடங்க கொள்கை உருவாக்கப்பட்டது. அதன் முன்னேற்றங்கள், எதிர்காலத் திட்டங்கள் வெளியிடப்பட வேண்டும். குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஐடி துறை: இந்தியாவிலேயே முன்மாதிரியாகத் தகவல் தொழில்நுட்ப (ஐடி) கொள்கையை வகுத்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். இன்றைக்கு ஐடி துறை எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு மத்தியில் அதன் மேம்பாட்டுக்கு உதவும் எண்ணம் மு.க.ஸ்டாலின் அரசிடம் தெரிகிறது.

மார்ச் 23-25 தேதிகளில் சென்னையில் ஐடி தொழில் துறை மேம்பாட்டுக்கான ‘யுமாஜின்’ (Umagine Chennai 2023) மாநாடு நடத்தப்படுவது ஓர் உதாரணம். கல்வித் துறையில்தான் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், இரண்டு துறைகளுக்கும் பொருத்தமான அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் பெறலாம். கூடவே, வேளாண்மை, சுகாதாரத் துறைகளை டிஜிட்டல்மயப்படுத்துவது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம்.

சுகாதாரம், கல்வி: சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, புதிய மருத்துவக் கல்லூரி - மருத்துவமனைகளைத் தொடங்குவதைவிடவும், மருத்துவமனைகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கல்வித் துறையில் ‘இல்லம் தேடிக் கல்வி’ தொடங்கி ‘காலைச் சிற்றுண்டி’ வரையிலான திட்டங்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதேசமயம், பள்ளிக் கட்டிடங்கள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குக் கவனம் செலுத்துவதைவிடவும் புதிய திட்டங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனும் விமர்சனம் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. கூடவே, பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.

டெல்லி ஆம் ஆத்மி அரசு நாளை தாக்கல் செய்யவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் தலைநகர் டெல்லியின் உள்கட்டமைப்பு மேம்பாடு, தலைநகரை அழகுபடுத்துதல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் முறையான திட்டமிடல் இல்லாத நகர வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் கண்கூடு.

புயல் உள்ளிட்ட பேரிடர்க் காலங்களில் மட்டுமல்லாமல், பருவமழைக் காலங்களிலும் வெள்ள பாதிப்பு, சாலைகளில் தண்ணீர் தேங்குதல் போன்ற பிரச்சினைகளைச் சென்னை மக்கள் எதிர்கொள்கின்றனர். கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி காலநிலை மாற்றத்துக்குத் தனி நிதியம் அமைக்கப்பட்டுவிட்டது, ரூ.1,000 கோடி திரட்ட இந்நிதியம் திட்டமிடுகிறது. நாட்டிலேயே முன்மாதிரியாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் முன்னேற்றங்கள் பட்டியலிடப்பட வேண்டும்.

பொதுவான எதிர்பார்ப்புகள்: நகர்ப்புற வேலைவாய்ப்பு, பகுதிநேர வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். கனிமவளம் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் குறைவாகவும், தனியாருக்குச் செல்லும் வருவாய் அதிகமாகவும் இருப்பது ஒரு பிரச்சினையாகவே தொடர்கிறது.

இதைத் தீர்க்கத் திட்டங்கள் வேண்டும். தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. கூடவே, இலவசத் திட்டங்களால் அரசுக்கு நிதிச் சுமை அதிகரிக்கிறதா எனும் விவாதம் நீடிக்கும் சூழலில் இதுகுறித்து முறையான விளக்கத்தையும் அரசு அளிக்க வேண்டும்.

வேளாண் துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை மூன்றாவது ஆண்டாக வெளியிடப்படுவது பாராட்டுக்குரியது. எனினும், நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் மழையில் நனைந்து வீணாகும் அவலம் தொடரவே செய்கிறது. கொள்முதல் நிலையங்களை அதிகரித்தல், விரிவாக்கம் செய்தல் என்பன உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நீர் வளத்தை மேம்படுத்தவும், நீர்வழி சரக்குப் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றைத் தொடங்கவும் திட்டங்கள் வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும் திட்டங்கள் அவசியம்.

நிதிநிலை கடினமாக இருந்தாலும் மானியம், உதவித்தொகை போன்றவற்றுக்கு நிதி ஒதுக்குவது ஒரு நல்ல அரசின் கடமை. செலவுகளைக் குறைப்பது, புதிய நிதி ஆதாரங்களைக் கண்டறிந்து அவற்றைப் பெருக்குவது என நிதிநிலையை மேம்படுத்த அரசிடம் உறுதியான திட்டங்கள் தேவை.

வருடாந்திரத் திட்டங்களை முன்வைக்கும் சம்பிரதாயமான நடைமுறையாக மட்டுமல்லாமல், தொலைநோக்குத் திட்டங்களை முன்வைப்பதாக நிதிநிலை அறிக்கை மாற வேண்டும். தொழில்மயமாக்கலுக்கும் சமூகநலத் திட்டங்களுக்கும் வருவாயைச் சமமாகப் பிரிப்பது மு.கருணாநிதியின் பாணி.

அதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாமல் பார்த்துக்கொண்டதாக இன்றும் அவர் பாராட்டப்படுகிறார். தனது தந்தையின் சாதனைகளைப் பெருமிதத்துடன் முன்வைக்கத் தவறாத மு.க.ஸ்டாலினின் அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் என்னென்ன திட்டங்களை முன்னெடுக்கப்போகிறது எனப் பார்ப்போம்!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

To Read in English: TN Budget Expectations: Goals and the journey to achieve them

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்