எந்த ஒரு கட்சி நிர்வாகியும் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் அனைத்து மக்களின் பிரதிநிதியாக மாறிவிடுகின்றனர். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசின் மாண்பையும், மரியாதையையும் தலைநிமிரச் செய்வதாகவே இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் காலத்தில் இந்த மரபு காக்கப்பட்டுவந்தது. மீறப்பட்ட தருணங்களில் உரிய வகையில் கண்டிக்கப்பட்டதும் நடந்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களின் பேச்சுகள் பல நேரம் நகைப்புக்கு உரியதாகவும் கட்சியின் கருத்துக்கு முரண்பட்டவையாகவும் இருந்ததால், மக்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, மக்கள் பிரதிநிதிகள் பொதுவெளியில் மாண்பைக் காப்பாற்றக் கூடியவர்களாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஆனால், எதார்த்தம் வேறாக இருக்கிறது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, சில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் சிறு நடவடிக்கைகள்கூட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி, அரசுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தின. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், அரசு அதிகாரி ஒருவரை ஏளனமாகப் பேசிய விவகாரம் தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வரை சென்றது; தொடர்ச்சியாக அவரது அமைச்சகமும் மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, மனு கொடுக்க வந்த பெண்ணை அதே மனுவால் தலையில் அடித்தது, பழங்குடியினப் பிரதிநிதியை நிற்கவைத்துப் பேசியது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில் அமைச்சர் பொன்முடி அரசின் இலவசத் திட்டப் பயனாளிகளை ஏளனமாகப் பேசியது கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
பொன்முடி குறிப்பிட்ட ‘ஓசி பயணம்’ என்பது திமுகவின் தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்த வாக்குறுதிகளில் ஒன்று. ஆனால், வெற்றிபெறுவதற்கு அடித்தளமிட்ட அதுவே இன்றைக்கு ஏளனச் சொல்லாக மாறிவிட்டது. அவரது உடல்மொழியும் முகத்தில் வெளிப்பட்ட நக்கல் தொனியும் வாக்காளர்களான மக்களைப் பற்றி எப்படிப்பட்ட சிந்தனையை அவர் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்திவிட்டன. இலவசங்கள் ஏற்றத்தாழ்வைப் போக்கும் கருவி என மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மேடைதோறும் பதிவுசெய்துவரும் நிலையில், மக்களின் ஏழ்மை நிலையைக் காரணம் காட்டி, அவர்களின் சுயமரியாதையைச் சீண்டுவது கண்ணியமா என்பதை ‘முனைவர்’ பொன்முடி சிந்திக்க வேண்டும். கருணாநிதியைப் போல் ஸ்டாலினும் அமைச்சர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளார். அதற்கு மதிப்பு சேர்க்கும்வகையில் மூத்த அமைச்சர்கள் கவனத்துடன் பொதுவெளியில் நடந்துகொள்வதே அழகு. இல்லையெனில் அண்ணா, கருணாநிதி வழியில் நடப்பதாகக் கூறும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதை, உடன்பிறப்புக்கள் மட்டுமல்ல... முதல்வர் ஸ்டாலினும் விரும்ப மாட்டார் என்பதே நிதர்சனம்! - ந.முருகவேல், தொடர்புக்கு: murugavel.n@hindutamil.co.in