சுதந்திரச் சுடர்கள் | திரையுலகம்: இந்திய சினிமாவின் வரலாற்றை வரைந்தவர்

By செய்திப்பிரிவு

சர்வதேச சினிமா வரலாறு தொடங்கிய சில பத்தாண்டுகளுக்குள் இந்திய சினிமாக் கலையின் வரலாறு தொடங்கிவிட்டது. ஆனால், சுதந்திரத்துக்கு முன்பு நாடகத்துக்கு மாற்றாக இருந்த சினிமாக் கலை பற்றிய மதிப்பீடு எதுவும் உருவாகியிருக்கவில்லை. அதனால் இந்திய சினிமா வரலாற்றைச் சர்வதேச அரங்கில் எடுத்துக்காட்ட நம்மிடம் ஆவணங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை.

எல்லாத் துறைகளிலும் ஆவணப்படுத்துதலில் நாம் பின்தங்கி இருந்தோம். இதற்காகத் தன் வாழ்நாளைச் செலவிட்டவர் பி.கே.நாயர். திருவனந்தபுரத்தில் பிறந்து சினிமா இயக்கும் ஆசையுடன் பம்பாய்க்குப் போன இவரின் வாழ்க்கை, இந்திய சினிமாவின் முதன்மை ஆவண ஆய்வாளராக அவரை மாற்றிவிட்டது. ‘மதர் இந்தியா’ இயக்குநர் மெஹ்பூப் கான், ‘தேவதாஸ்’ இயக்குநர் விமல் ராய் ஆகியோரிடம் அவர் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தனக்கு சினிமா இயக்கம் ஒத்துவராது என்பதை அவர் உணர்ந்துகொண்டார். இது அந்தத் தலைமுறையின் அபூர்வமான பண்பு.

ஆய்வுத் துறையில் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனால் புனே இந்தியத் திரைப்படக் கல்லூரியில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இந்திய சினிமாவின் வரலாற்றை உரத்துச் சொல்வதற்கான சான்றுகளைத் தேடிய, அவரது ஆய்வுப் பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது. தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்தின் நிறுவனரான அவர், அரசு நிதி வாங்கிக்கொண்டு அலுவலகத்திலேயே இருக்கவில்லை.

இந்தியாவின் மூலை முடுக்குக்கெல்லாம் பயணம் செய்தார். நாசிக் அருகில் ஒரு கிராமத்தில் தாதாசாகேப் பால்கேயின் ‘காளிய மர்தன்’ படச்சுருள் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும், போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலகட்டத்தில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டிருக்கிறார். ஒருமுறை படகோட்டி இல்லாமல் ஆற்றைக் கடந்திருக்கிறார். கல்கத்தாவில் வைக்கோலுக்கும் சாணி வரட்டிகளுக்கும் இடையில் ஈரத்தில் கிடந்த சில படச்சுருள்களை ஆவணப்படுத்தியிருக்கிறார். பழைய படங்களைத் தேடி சினிமாக் கொட்டகை, கொட்டகையாக அலைந்திருக்கிறார். இந்தத் தேடல் இந்தியாவைத் தாண்டியும் விரிந்திருக்கிறது.

தாய்லாந்தில் ஒரு பழைய திரையரங்கிலிருந்து ‘சதீஷ், சுகன்யா’ என்னும் படத்தையும் வங்கதேசத்திலிருந்து ‘தேவதாஸ்’ படத்தையும் இந்தியாவுக்குக் கொண்டுவந்து ஆவணப்படுத்தியிருக்கிறார்.

சுதந்திரத்துக்குப் பிறகு உருவான புதிய தலைமுறை சினிமாக் கலைஞர்களுக்கு பி.கே.நாயர் ஆவணப்படுத்திய படங்கள் இந்தியத் திரைப்பட வரலாற்றைக் கற்பித்தன. இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவைத் திரும்ப உயிர்பித்ததும் இந்திய சினிமாவின் பிறப்பைக் கண்டறிந்ததும் பி.கே.நாயர் என்ற தனிமனிதன் செய்த மகத்தான சாதனை.

- விபின்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

37 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்