சுதந்திரச் சுடர்கள் | ஒப்பிலாத் தீரன் ஒண்டிவீரன்

By செய்திப்பிரிவு

இந்திய விடுதலையின் அமுதப் பெருவிழா கொண்டாடும் நேரத்தில், விடுதலைப் போரில் பங்கேற்ற மாவீரர்களை நினைவு கூர்வது நம் கடமை. முதல் விடுதலைப் போராக அறியப்படும் 1857 இல் நடந்த ‘சிப்பாய் கலக’த்திற்கு 102 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட பாளையத் தலைவன் ஒண்டிவீரன் எனும் போராளியின் வீரமரணத்தின் 250 ஆவது ஆண்டை நினைவுகூர்கிறோம். அதனை கொண்டாடும்விதமாக, மத்திய அரசு ஆகஸ்ட் 20 அன்று தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

நெற்கட்டான் செவ்வயல் பாளையம்

திருநெல்வேலிக்கு அருகில், சங்கரன்கோவிலி லிருந்து வடமேற்கில் பத்து கிலோமீட்டர் தொலை விலும், வாசுதேவநல்லூரிலிருந்து கிழக்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள, நல்ல விளைச்சல் நிலங்களை மிகுதியாகக் கொண்ட செழிப்பான ஜமீன் நெற்கட்டும் செவ்வயல்.

அந்த ஜமீன் பரம்பரையில் பொ.ஆ. (கி.பி.) 1710 ஆம் ஆண்டு பெத்த வீரன், வீரம்மா எனும் தம்பதியினருக்கு பிறந்தவர் ஒண்டிவீரன். இவர் சிறு வயதிலேயே வாள் வீசவும், கம்பு சுத்தவும், குதிரை சவாரி செய்யவும், பறையடிக்கவும், பாட்டுப் பாடவும், ஒயிலாடவும் மற்றும் தோல் வேலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

இந்நிலையில் வீரனது தந்தை இறந்ததால், ஜமீன் பொறுப்பை வீரன் ஏற்றுக்கொண்டார். தமது நண்பரான பூலித்தேவனோடு சேர்ந்து ஆண்டுவந்தார். இந்த இருவரில் ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரின் வரலாற்றைத் தனித்துச் பேச முடியாது.

ஜமீன்முறை மாறிப் பாளையமாக மாற்றம் பெற்றபோது, சமூக அரசியல் சூழல் காரணமாக பாளையப் பொறுப்பை பூலித்தேவன் ஏற்றுக்கொண்டார். இருப்பினும், இருவரும் இணைந்தே பாளையத்தை ஆண்டு வந்தனர். ஒண்டிவீரன் படைத்தளபதியாக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டு, பகைவருக்கெதிரான போரை தலைமையேற்று நடத்திவந்தார்.

கிழக்கு இந்திய கம்பெனியர் இந்தியாவில் வணிகம் செய்ய நுழைந்து, மெதுவாக அரசியல் சதுராட்டம் ஆடத்தொடங்கிய காலகட்டம் அது. ஆங்கிலேயர் ஆற்காடு நவாப்பிற்கு ராணுவ உதவி செய்து, அதன் மூலம் பாளையங்களில் வரி வசூலிக்கும் பொறுப்பை ஏற்றனர். 1755 ஆம் ஆண்டு பூலித்தேவனும் ஒண்டிவீரனும், ஆங்கிலேயருக்கு ஏன் வரி கொடுக்கவேண்டும் என்று எதிர்த்தனர். நெல்லை கப்பமாக கட்ட மறுத்தனர். எனவேதான், நெற்கட்டும் செவ்வயல், “நெற்கட்டான் செவ்வயல்” என அழைக்கப்படலாயிற்று.

முதல் விடுதலைப் போர்

ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வயல் பாயைத்தின் மீது போர் தொடுத்தனர். ஆற்காடு நவாபின் சகோதரர் மாபூஸ்கான் மற்றும் லார்ட் இன்னிங்ஸ் தலைமையிலான படையை நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தின் எல்லையிலேயே 1755 மே 22ஆம் நாள் தோற்கடித்தனர் ஒண்டிவீரனும் பூலித்தேவனும்.

மீண்டும் அதே ஆண்டு மாபூஸ்கான் மற்றும் ஆங்கிலேயப் படைத்தளபதி அலெக்சாண்டர் ஹெரான் தலைமையில் நெல்லை நோக்கி பெரும்படை புறப்பட்டது. வழியில் மணப்பாறையில் லட்சுமண நாயக்கர் அடிபணிந்தார்.

மதுரையும் ராமநாதபுரமும்கூட பணிந்தது. வீரபாண்டிய கட்டபொம்மனின் பாட்டனாரான பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் (கெட்டி பொம்மு) கர்னல் ஹெரானிடம் கப்பம் கட்டிப் பணிந்துபோனார். தொடர்ந்து ஆங்கிலேயப் படை தென்மலையில் முகாமிட்டனர். ஆனால், அவர்களின் 2000 வீரர்களுடன் கூடிய பெரும்படையை மீண்டும் வென்று வெற்றிவாகை சூடினார் ஒண்டிவீரன்.

இதுவே ஆங்கிலேயருக்கு எதிரான நடந்த முதல் சுதந்திரப் போராகும், காலத்தால் மட்டும் அல்ல; பண்பாலும்! ‘சிப்பாய் கலக’த்திற்கான காரணங்களாக கருதப்படுபவை: நிலங்களை இழந்துவிடக் கூடாது என்ற சிற்றரசர்களின் தூண்டுதல், வங்காளப் படையில் நிலவிய சாதியத்தால் ஏற்பட்ட அயல்நாட்டிற்குச் சென்று போரிட விரும்பாத மனநிலை மற்றும் “என்ஃபீல்ட் ரைஃபிள்” துப்பாக்கி குண்டுகளால் உண்டான மத அடிப்படைவாதம் போன்றவையே! எனவே அக்கலகம் ஆங்கிலேயரை வெளியேற்றவேண்டும் என்ற நோக்கில் எழுப்பப்படவில்லை.

அக்கலகத் திற்கு யாரும் நேரடியாக தலைமை ஏற்கவும் இல்லை; கொள்கை எதுவும் கிடையாது. மாறாக சுயஉரிமைக்கான தன்னெழுச்சியே அக்கலகம்.

தென்பாண்டிச் சீமையின் சிம்மசொப்பனம்

மீண்டும் 1756 மற்றும் 1757 ஆண்டுகளிலும் போர் தொடுத்த ஆங்கிலேயரை தோற்கடித்தவர் ஒண்டிவீரன். எட்டயபுரம் உள்ளிட்ட சில தெலுங்கு பாளையங்கள் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாயின. அவற்றின் மீது போர்தொடுத்து, ஆங்கிலேயருக்கு எதிராக மற்ற பாளையங்களை அணிசேர்த்தனர் ஒண்டிவீரனும் பூலித்தேவனும். நாயக்கர் காலத்தில் 16 தமிழ் பாளையங்களும், 56 தெலுங்கு பாளையங்களும் இருந்தன. ஆழ்வார்குறிச்சி அழகப்பன் தோற்கடிக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார்.

அழகப்பனுக்கு ஆதரவாக மருதநாயகம் என்ற கான்சாகிப் யூசுப்கான் களமிறங்கினார். 1759 ஜுலை 2 ஆம் நாள் அவர் ஊத்துமலை, சுரண்டை பாளையங்களைக் கைப்பற்றினார். நவம்பர் 6-ஆம் நாள் ஒண்டிவீரன் அவற்றை மீட்டெடுத்தார். கோபம் கொண்ட மருதநாயகம், தொண்டமான் படையுடன் இணைந்து வாசுதேவ நல்லூரைத் தாக்கினார்.

இருபது நாள் நடந்த போரில் பூலித்தேவனும் ஒண்டிவீரனும் இரு படை களாகப் பிரிந்து போரிட்டு வென்றனர். மீண்டும் கான்சாகிப் 1760 டிசம்பர் 20 அன்று நெற்கட்டான் செவ்வயலைத் தாக்கினார். அப்போரில் ஒண்டிவீரனின் துணை தளபதி வெண்ணிக்காலாடி வீரமரணம் அடைந்தார். இவர் தேவேந்திரர் குலத்தைச் சார்ந்தவர். ஆனாலும் இப்போரிலும் கான்சாகிப் தோல்வியையே தழுவினார்.

இறுதிப்போர்கள்

1767 மே 13 அன்று ஆங்கிலேயப் படைத் தளபதி டொனால்ட் காம்பெல் தலைமையில் நெற்கட்டான் செவ்வயலின் இராணுவ தளமாக இருந்த வாசுதேவநல்லூர் கோட்டை தாக்கப்பட்டது. வீரம் செறிந்த தமிழ் மறவர்கள் பூலித்தேவன், ஒண்டிவீரன் தலைமையில் மிகக் கடுமையாக போரிட்டனர்.

திகைத்துப்போன காம்பெல் இது குறித்து கிழக்கிந்திய கம்பெனிக்கு 1767 மே 28 அன்று எழுதிய கடிதம் இன்றும் எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. இருப்பினும், அவர்களின் பலம் வாய்ந்த பீரங்கிகள், துப்பாக்கிகள் முன் நம்மவர்களின் வாட்கள், வேட்கள் தோற்றுப்போயின.

அப்போது, சங்கரன்கோவில் ஆவுடை நாச்சியார் கோவிலுக்குள் சென்ற பூலித்தேவன் மீண்டும் திரும்பவில்லை. எனவே, ஒண்டிவீரன் மீண்டும் பாளையப் பொறுப்பை ஏற்று, பூலித்தேவனின் மூன்று பிள்ளைகளையும் நான்கு ஆண்டுகள் காத்துவந்தார். மீண்டும் களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிபுத்தூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் ஆங்கிலேயரை எதிர்த்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. இறுதியாக, 1771 ஆகஸ்ட் 20 ந்தேதி நடைபெற்ற தென்மலைப்போரில் மாவீரன் ஒண்டிவீரன் வீரமரணமடைந்தார்.

வரலாற்று மீட்டுருவாக்கம்

மேற்கண்ட ஒண்டிவீரன் வரலாறு கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற வழக்கமான வரலாற்று ஆவணங்களில் பதிவு செய்யப்படவில்லை என்பதில் வியப்பேதும் இல்லை. ஏனெனில் ஒண்டிவீரன் இன்று தாழ்த்தப்பட்டவராக வகைப்படுத்தப்பட்டுள்ள அருந்ததியர் குலத்தில் பகடை எனும் பிரிவைச் சார்ந்தவர்.

வாய்மொழி வழக்காறுகளிலிருந்துதான் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யவேண்டி இருக்கிறது. காஞ்ச அய்லையா, “மாதிகா (அருந்ததியர்) மக்களின் வாழ்வு வாய்மொழி வரலாறாகவே இருக்கிறது; அது எழுதப்பட்ட இலக்கியங்களில் இல்லை” என்கிறார்.

லூயிஸ் அல்தூசர், “வரலாற்றில் மறைக்கப்பட்டவை எவையும், எறிந்தால் திரும்ப வராமல் இருக்க, தூக்கி எறியப்பட்ட பழைய செருப்புகள் அல்ல. அந்த வரலாறுகள் வெளிக் கசிந்துகொண்டே இருக்கும். வெடிப்புற வெளிப்படவும் செய்யும்.” என்கிறார். “சமூகத்தில் எவையெல்லாம் தவறாக தீர்மானிக்கப்பட்டதோ, அவையெல்லாம் ஒருபோதும் முற்ற முடிவாக தீர்மானிக்கப்பட்டவை அல்ல. மாறாக, அவையெல்லாம் மீண்டும் மறுசீரமைக்கப்பட வேண் டும்.” என்கிறார் பி.ஆர். அம்பேத்கர்.

எனவே, ஒண்டிவீரன் வரலாற்றைக் கட்டமைக்க ‘ஒண்டிவீரன் கதைப்பாடல்’, ‘ஒண்டிவீரன் வில்லுப்பாட்டு’ மற்றும் ‘ஒண்டிவீரன் நாடகம்’ போன்ற வாய்மொழி இலக்கியங்களே சான்றாதாரங்கள் ஆகின்றன. ‘பூலித்தேவன் சிந்து’, ‘பூலித்தேவன் கும்மி’ போன்ற நாட்டார் பாடல்களில் ஒண்டிவீரன் வரலாறு கிளைக்கதைகளாக சொல்லப் படுகிறது.

இவ்விரண்டு மூலங்களும் நுணுக்கமாக முரண்படுவதும் நாம் அறிந்ததே! ந. இராசையா, எழில். இளங்கோவன் மற்றும் ச. சீனிவாசன் போன்றோரின் காத்திரமான ஆய்வுகள் ஒப்பிலாவீரன் ஒண்டிவீரன் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்திருக்கின்றன.

(சி. பேசில் சேவியர், பிளாசபி ஆஃப் மார்ஜின்ஸ் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு basilxavier@gmail.com)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

ஓடிடி களம்

42 mins ago

இந்தியா

2 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்