பள்ளி நூலகங்களுக்குப் புத்துயிர் கொடுப்போம்!

By ராணிதிலக்

பள்ளி மாணவர்களிடம் பாடநூல்களுக்கு வெளியே மற்ற நூல்களையும் வாசிக்கும் வழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காகப் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் எடுத்துவரும் நடவடிக்கைகள் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் ஒரு புதிய உற்சாகத்தைத் தோற்றுவித்திருக்கின்றன.

பள்ளி நூலகங்களுக்கான தனி அறை ஒதுக்கீடு, அருகிலுள்ள நூலகங்களுடன் இணைந்த செயல்பாடு, இளம் வாசகர்கள் வட்டம், புத்தகங்களை நன்கொடையாகப் பெறுவது, நூலக நூல்களை வீட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதிப்பது, வாசிப்பு சார்ந்த படைப்பாக்கங்களை ஊக்குவித்தல், வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள், நூலகப் பயணம், வாசிப்பு சார்ந்த உண்டு உறைவிடப் பயிற்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வெளிநாடுகளுக்கும் தேசிய அளவிலும் அறிவுப் பயணம் செல்லும் வாய்ப்பு என்று ஆணையரின் சுற்றறிக்கை பள்ளிகளுக்கு வெளியில் பொது வாசகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் இலக்கியப் படைப்பாளியுமான எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. பொது முடக்கத்துக்குப் பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறந்தபோது, வாசிப்புப் பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவிப்பதற்காக நான் பணியாற்றும் கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப் பள்ளியில் சில முயற்சிகளை எடுத்தோம். காரணம், பாடம் நடக்கும்போது மாணவர்கள் வாசிக்கவும் எழுதவும் கொஞ்சம் சிரமப்படுவதை ஆசிரியர்கள் உணர்ந்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் இடைவெளியில் வாசிப்பு என்பதே அவர்களிடம் இல்லாமல்போனதுதான் காரணம். அப்போது எங்களுக்குத் தோன்றிய யோசனைகளில் ஒன்றுதான், மாணவர்களை நூலகத்துக்கு அழைத்துச் செல்லுதல்.

வாரம் ஒரு புத்தகம்

எங்கள் பள்ளிக்கு அருகில் இருக்கும் அரசுப் பொது நூலகத்துக்கு மாணவர்களை அழைத்துச்சென்று காட்டி, அவர்களை உறுப்பினர்களாக்கி, புத்தகங்களை ஆர்வமுடன் வாசிக்கத் தொடர் முயற்சிகளை எடுத்தோம். இந்தத் தொடர் செயல்பாடுகள் வழியாக, அவர்களது வாசிப்பில் சிறிது முன்னேற்றம் ஏற்படுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. கூடவே, ‘வாரம் ஒரு புத்தகம்’ என்று ஒரு தனி ஏடு உருவாக்கப்பட்டு, அதில் வாரந்தோறும் மாணவர்கள் வாசிக்கும் புத்தகத்தைப் பற்றிய அவர்களுடைய கருத்தும், அவர்களுக்குப் பிடித்த பக்கமும் எழுதப்பட்டுவருகின்றன.

என்னுடைய பாடவேளைகளில் ஒன்றைப் புத்தக வாசிப்புக்காக ஒதுக்கிவிட்டேன். வாரத்துக்கு ஒரு முறை, மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகத்தைப் பற்றி வகுப்பறையில் அறிமுகம் செய்வதும் நிகழ்ந்தது. சிறந்த அறிமுகப் பக்கத்தை வகுப்பு மற்றும் ஆசிரியர் குழுவிலும் பகிர்ந்துகொண்டேன்.

இதைப் பற்றிய செய்தியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெளியிட்ட பிறகு, மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் உற்சாகம் கூடிவிட்டது. இதுவரை எங்கள் பள்ளியில் அனைத்து வகுப்புகளையும் சேர்த்து, இவ்வாறு 400-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மாணவர்களால் வாசிக்கப்பட்டுள்ளன. இது ஒரே ஒரு அரசுப் பள்ளியில் நிகழ்ந்த ஒன்று. பள்ளிக் கல்வித் துறை ஆணையரின் முன்முயற்சியால் இந்தப் புத்தக வாசிப்பு இயக்கம் தற்போது அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெறவிருக்கிறது.

அரிய நூல்களின் புதையல்

எங்களுடைய பள்ளி நூலகத்தை ஒழுங்குபடுத்தியபோது, எதிர்பாராத விதமாக க.நா.சுப்ரமண்யம் மொழிபெயர்ப்பில் வந்த சார்லஸ் டிக்கன்ஸின், ‘நல்லவர்கள்’ என்ற புதினம் கிடைத்தது. இதுவரை இந்தப் புத்தகத்தைப் பற்றி எனக்குத் தெரிந்தவரையில், யாரும் பேசியோ பரிந்துரைத்தோ நான் கேட்டதில்லை. உடனே, அந்த விவரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவில் க.நா.சு.வின் பட்டியலில் பதிவிட்டேன்.

என் தலைமையாசிரியர் பரிந்துரையில், எங்கள் பள்ளியைப் போல் மிகப் பழமையான பாணாதுறை அரசு நிதி உதவிப் பள்ளியின் நூலகத்தையும் பார்த்தேன். அங்கு, க.நா.சுவின் ‘இரண்டு பெண்கள்’ என்ற நாவல் கிடைத்தது. அவரின் பிரபலமான ‘ஆட்கொல்லி’, ‘அசுரகணம்’ ஆகிய நூல்களின் முதல் பதிப்பும் கிடைத்தன. சமீபத்தியப் பதிப்புகளில் நிறைய விடுபடல்கள் இருக்கின்றன என்பதையும் காண முடிந்தது.

எங்கள் பள்ளியைப் போல் மிகப் பழமையான பள்ளிகள் தமிழ்நாட்டில் நிறைய உண்டு. 50 முதல் 100 ஆண்டுகள் வரையான பழமை வாய்ந்த பள்ளிகளில் இன்றும் நூலகங்கள் உள்ளன. நூலகத்தில் உள்ள புத்தகப் பட்டியலைப் பார்த்தாலே, அங்கு அரிய புத்தகங்கள் இருக்கின்றன என்பது புரிந்துவிடும். இந்தப் புத்தகப் பட்டியல்களை ஒருங்கிணைத்து, அரிய நூல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் மின்னூல்களைத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்னூலகத்தில் பதிவேற்ற வேண்டும். இதன் மூலமாகக் கால வெள்ளத்தில் காணாமல் போன பல புத்தகங்களுக்குப் புத்துயிர் அளிக்க முடியும்.

இன்னும் நிறைய ஆசை

மாணவர்களுக்குக் கட்டுரை ஏடு இருப்பதைப் போல, அவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த, வாசிப்பு ஏடு ஒன்றையும் மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். பள்ளி ஆசிரியர்களும்கூட வாரம் ஒரு முறை அல்லது மாதம் இரு முறை தாம் வாசித்த புத்தகத்தைப் பற்றித் தன் வாசிப்பு ஏட்டில் எழுதி, தலைமையாசிரியரிடம் ஒப்பம் பெற வேண்டும். பாடக் குறிப்பேட்டில், அந்த வாரம், தான் வாசிக்கும் நூலைப் பற்றிய ஒரு அறிமுகத்தை எழுதியிருக்க வேண்டும். பாடநூலுக்கு வெளியே புத்தகங்களைப் படிப்பதும் பள்ளிக் கல்வியின் ஒரு பகுதிதான் என்பதை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த ஏடுகள் நினைவூட்டிக்கொண்டிருக்கும்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்ட சிறார் நூல்களை மறுபதிப்பு செய்யலாம். சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெற்ற சிறார் நூல்களைப் பள்ளிக்கு வழங்கலாம். வருடத்துக்கு ஒரு முறை, ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகளைக் கொண்டு, ஓர் ஆண்டு மலரைக் கொண்டுவரலாம்.

ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கும் பிரத்தியேகமாக ஒரு தனி வலைப்பூவைத் தொடங்கி, அதில் வாரம்தோறும்/ மாதந்தோறும் மாணவர்களின் படைப்புகளையும் ஆசிரியர்களின் படைப்புகளையும் பதிவிடச் செய்யலாம். சிறிய இதழாக மின்னணு வடிவிலும் கொண்டுவரலாம். ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு பருவத்தின் முடிவில், ‘வாசிப்புத் திருவிழா’ ஒன்றை ஏற்பாடு செய்யலாம். பள்ளி மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை அறிமுகப்படுத்திவிட்டாலே போதும். ஒட்டுமொத்த சமூகத்தின் பண்பாடும் பலப்பட்டுவிடும். அறிவை வளர்ப்பதற்கான முதற்படி வாசிப்பு மட்டுமே.

- ராணிதிலக், கவிஞர், பள்ளி ஆசிரியர்.

தொடர்புக்கு: raanithilak@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE