சென்னைக்குத் தேவை: புதிய வடிகால் திட்டம்

By மு.இராமனாதன்

கடந்த திங்கட்கிழமை (22.11.21) தலைநகரில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதல் சம்பவம்: தியாகராய நகரில் மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் பெய்தது. ஜி.என்.செட்டி, பசுல்லா, பிரகாசம், உஸ்மான், பர்கிட் முதலான நகரின் புகழ்பெற்ற சாலைகளில் நாள் முழுதும் தண்ணீர் தேங்கி நின்றது. இயந்திரங்கள் நீரை இறைத்தன. இரண்டாவது சம்பவம்: மாநகராட்சி, நகரின் பல மண்டலங்களின் மழைநீர் வடிகால் வரைபடங்களை இணையத்தில் ஏற்றிவைத்தது. முதல் சம்பவம் கவலை அளிக்கிறது. இரண்டாவது சம்பவம் நம்பிக்கை அளிக்கிறது. எப்படி என்று பார்ப்போம்.

சமீபத்தில்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தியாகராய நகர் சாலைகளின் மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டன. ஆனால், அவற்றில் நீர் வடியவில்லை. சிலர் அவை குப்பைக்கூளங்களால் அடைபட்டுக் கிடக்கின்றன என்றார்கள். சிலர் அவற்றின் அகலமும் ஆழமும் வாட்டமும் போதுமானவையாக இல்லை என்றார்கள். சிலர் அவற்றின் தரம் தாழ்வானது என்றார்கள். இந்தக் காரணங்களை வல்லுநர்கள் ஆராய வேண்டும். இது தியாகராய நகருக்கு மட்டுமல்ல, சென்னை நகர் முழுமைக்கும் பொருந்தும். மாநகராட்சி இணையத்தில் வெளியிட்டிருக்கிற வடிகால் வரைபடங்கள் இந்த ஆய்வுக்கு உதவும்.

2015 வெள்ளத்துக்கான காரணங்களாகப் பலரும் சொன்னதில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை விழுங்கி நிற்கும் ஆக்கிரமிப்புகளும், வடிகால்களைக் குப்பைக்கூளங்களால் அடைத்துவிடும் நகரவாசிகளின் பொறுப்பின்மையும் இடம்பெற்றன. இந்த முறை மழைநீர் வடிகால்களின் போதாமையும் சேர்ந்துகொண்டது. இதற்குக் காரணம், இரண்டு வெள்ளங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் கணிசமான பொருட்செலவில் உருவான வடிகால்களால் மழைநீரைக் கடத்த முடியவில்லை என்கிற கசப்பான உண்மை.

இந்தச் சூழலில்தான் மாநகராட்சி வடிகால் வரைபடங்களைப் பொது வெளியில் வைக்கிறது. நகரின் வடிகால்கள் குறைபாடு உடையவை என்பது தெரிந்தும் அரசு இதைச் செய்ய முன்வந்திருக்கிறது. இது அரசின் வெளிப்படைத்தன்மையையும் வடிகால்களைச் சீரமைப்பதில் அதற்கு உள்ள அக்கறையையும் காட்டுகிறது.

இந்த வரைபடங்களைப் பார்வையிட்டபோது, பொதுவான சில குறைகள் கண்ணில்பட்டன. முதலாவதாக, 2,057 கிமீ நீளத்துக்கான மழைநீர் வடிகால்களைப் பராமரிப்பதாகச் சொல்கிறது மாநகராட்சி. நகரில் சாலைகளின் நீளம் 5,750 கிமீ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதன்படி சுமார் 60% சாலைகளில் வடிகால்கள் இல்லை. ஆனால், இந்த வரைபடங்களைப் பார்த்தால் அந்த விகிதம் அதிகமாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

மேலும், பல சாலைகளில் ஒரு புறம்தான் வடிகால் இருக்கிறது. அப்படியானால், நீர் வழிந்தோட ஏதுவாக இந்தச் சாலைகள் அனைத்தும் ஒரு புறம் உயரமாகவும் மறுபுறம் தாழ்வாகவும் இருக்க வேண்டும். அடுத்து, இந்த வடிகால்களின் இடையிடையே ஆள்-துளைகள் (manholes) இருக்கும். அடுத்தடுத்த ஆள்-துளைகளின் அடிமட்டம் கீழ் நோக்கிப் போக வேண்டும். அப்போதுதான் வெள்ளம் பாயும். ஆனால், கணிசமான இடங்களில் அப்படி இல்லை. எடுத்துக்காட்டாக, அபிராமபுரம் 3-ம் தெருவில் (மண்டலம் 9, வார்டு 123 ) ஆள்-துளை A17-லிருந்து A16-க்கு நீர் செல்ல வேண்டும். ஆனால் A16-ன் அடிமட்டம் A17-ஐவிட இரண்டடி மேலே இருக்கிறது. இதனால், வடிகாலுக்குள் நீர் தேங்கும். பெருமழையில் எதிர்த் திசையில் பாயும். இது பிழையான வடிவமைப்பு.

மூன்றாவதாக, வடிகால்களின் அகலமும் ஆழமும் அந்த வடிகால்களுக்கு வரக்கூடிய நீரின் அளவை வைத்துக் கணக்கிடப்பட வேண்டும். பிரதான வாய்க்காலை நோக்கிப் போகுந்தோறும் வடிகாலின் கொள்ளளவு கூடிக்கொண்டே போக வேண்டும். ஆனால், பல இடங்களில் அப்படி அமையவில்லை. எடுத்துக்காட்டாக, சைதாப்பேட்டை அப்துல் ரசாக் சாலையில் (மண்டலம்-10, வார்டு-142) அமைந்துள்ள ஆள்-துளைகள் A4, A3, A2 வழியாக நீர் A1-ல் சேர்ந்து அடையாற்றில் கலக்கிறது. ஆகவே ஆள்-துளைகள் A4, A3, A2-வைவிட A1-இன் கொள்ளளவு பெரியதாக இருக்க வேண்டும். ஆனால் ஆள்-துளை A2-இன் அகலம் 2', ஆழம் 2-1/4'. ஆனால் A1 அதைவிடச் சிறியது-அகலம் 2', ஆழம் 11".

நான்காவதாக, பல இடங்களில் வடிகால்கள் பிரதான வாய்க்காலோடு அல்லது ஆற்றோடு எப்படி இணைகின்றன என்பது தெரியவில்லை. வரைபடத்தில் அவை இடைநின்றுபோயுள்ளன.(எ-டு. மண்டலம் -5 ராயபுரம், வார்டு-52).

பொதுவாக, வடிகால்கள் சாலையின் நடைபாதைகளுக்குக் கீழ் அமைக்கப்படுகின்றன. ஆதலால், இவற்றின் அகலத்தை நடைபாதையின் அகலம் தீர்மானிக்கிறது. கடைசி ஆள்-துளை, அருகாமை வாய்க்காலோடு இணைக்கப்படுவதால், அதன் ஆழம் அதற்கு இசைவாகவும், அதற்குப் பின்னால் இருக்கும் ஆள்-துளைகளின் ஆழம் அதை அனுசரித்தும் நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். அதாவது, இந்த வடிகால்கள் மழை வரத்தை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படவில்லை. ஆக, வடிகால்கள் போதுமானவை அல்ல. அவற்றின் கொள்ளளவு குறைவானது. பல இடங்களில் வாட்டம் பிழையானது.

சென்னையில் அமைக்கப்பட்டிருப்பவை பாரம்பரியமான செவ்வக வடிவிலான வடிகால்கள், ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டு இயங்குபவை (gravitational). சென்னையின் நிலமட்டம் கடலின் நீர்மட்டத்தைவிட அதிக உயரத்தில் இல்லை. ஆகவே, வடிகாலின் அடிமட்டத்தைக் கடலின் நீர்மட்டத்துக்கு மேலே அமைத்துக்கொள்வதால், வடிகால்களுக்குப் போதிய ஆழம் கிடைப்பதில்லை. ஆகவே, நவீன வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆழ்குழாய்கள், நீரேற்று இயந்திரங்கள், சுரங்கப் பாதைகள் போன்ற புதிய திட்டங்களை ஆலோசிக்க வேண்டும்.

வங்காள விரிகுடா அலைகள் மிகுந்தது. ஒரே நாளில் அலைகள் உயர்வதும் தாழ்வதுமாக இருக்கும். உயரமான அலைகளின்போது ஆற்று நீர் கடலில் கலப்பதில் தாமதம் ஏற்படும். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அலைகள் பத்தடி வரைகூட உயரும். அப்போதெல்லாம் வெள்ளம் வடியாமல் ஆற்றிலும் கால்வாயிலும் சாலையிலும் தேங்கி நிற்கும். ஆகவே, கடைப் பகுதிகளில் சுரங்கங்களை அமைத்து வெள்ளத்தை நேரடியாக ஆழ்கடலில் கடத்திவிட முடியுமா என்று ஆலோசிக்கலாம்.

தமிழ்நாடு அரசு வடிகால் வரைபடங்களைப் பொது வெளியில் வைத்திருப்பது நல்ல முன்னெடுப்பு. அடுத்து, அரசு ஒரு புதிய வடிகால் நிறுவனத்தை அமைக்கலாம். இந்த நிறுவனம் துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளையும் பெறலாம். சென்னை நகரின் மழையளவு குறித்து விரிவாக ஆராய்ந்து நாம் கடத்த வேண்டிய மழை அளவைத் தீர்மானிக்க வேண்டும். இப்போதைய வடிகால்களின் கொள்ளளவு பரிசோதிக்கப்பட்டு, இயன்ற இடங்களில் அவை மேம்படுத்தப்பட வேண்டும். பல இடங்களில் புதிய வடிகால்களும் ஆழ்குழாய்களும் தேவைப்படலாம். சுரங்கப் பாதைகளையும் பரிசீலிக்கலாம். என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்து, ஒவ்வொரு பணிக்குமான கால அளவையும் நிர்ணயித்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்