360: செல்போன் ஆக்கிரமித்த உலகு

பாஜக நடவடிக்கைக்கு காங்கிரஸ் காட்டிய பச்சைக்கொடி

கர்நாடக மாநில கட்டிடம், இதர கட்டுமானப் பிரிவு தொழிலாளர் நலத் துறைச் செயலராக இருந்த ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ், செயலர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டது ஒரு வாரத்துக்குப் பின்பும் உலுக்கிக்கொண்டிருக்கும் செய்தியாக இருக்கிறது. மாநிலத்தின் அனைத்து தனியார், அரசு கட்டுமானங்களின்போதும் செலவில் 1% கூடுதல் வரி விதிக்கப்பட்டு, எட்டு ஆண்டுகளில் மொத்தம் ரூ.8,000 கோடி திரட்டப்பட்டது. அதை நிர்வகிக்கும் பொறுப்பு, செயலர் என்ற முறையில் சிந்தூரிக்கு உண்டு. மாநில அரசு அத்தொகையைச் சரியாகப் பயன்படுத்தாமல், வெறும் ரூ.800 கோடி மட்டுமே செலவிட்டது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு இதிலிருந்து ரூ.4,000 கோடி எடுத்துக்கொள்ளப்பட்டது. தொழிலாளர் நலனுக்கான நிதியை வேறு விஷயத்துக்குத் திருப்புவது சரியல்ல என்று ஆட்சேபித்திருக்கிறார் சிந்தூரி. செயலர் பதவியிலிருந்து அவரை தலைமைச் செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர் விடுவித்துவிட்டார். இதற்கும் முன்னர் இருந்த காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசின்போதும் அவருக்கும் அமைச்சர்கள் ஏ.மஞ்சு, எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கும் மோதல்கள் ஏற்பட்டுள்ள வரலாறு உண்டு. “சிந்தூரி மாற்றப்பட்டது நியாயம்தான், வரவேற்கிறோம்” என்று கூறும் மாநில காங்கிரஸ் கட்சித் தொழிலாளர் பிரிவுத் தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம், “கட்டிட வேலை கிடைக்காததால் வேறு வேலைக்குச் சென்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் தன்னிச்சையாக உறுப்பினர் பட்டியலிலிருந்து நீக்கினார், கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கான கல்வி உதவித் தொகையையும் நிறுத்திவைத்தார்” என்கிறார். நேர்மையாக இருந்ததற்காக மாற்றப்பட்டாரா, ஆட்சியாளர்களின் விருப்பப்படி செயல்படவில்லை என்பதற்காக மாற்றப்பட்டாரா? தெரியவில்லை!

செல்போன் ஆக்கிரமித்த உலகு

செல்போன் கையில் இல்லாத மனிதர்களைப் பார்ப்பதே அரிது என்றாகிவிட்டது. வீட்டில், தெருவில், அலுவலகத்தில், உணவகத்தில், தியேட்டரில், கடற்கரையில், படுக்கையறையில் என எங்கு இருந்தாலும் செல்போனை வெறித்துக்கொண்டிருப்போர் ஏராளம். அந்த செல்போன் இல்லாவிட்டால், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அமெரிக்க புகைப்படக்காரர் எரிக் பிக்கர்ஸ்கில் கற்பனை செய்துபார்த்திருக்கிறார். செல்போன் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது அவர்களிடமிருந்து அதைப் பிடுங்கிவிட்டு, அந்தக் கணத்தைத் தன் கேமராவில் உறையச்செய்திருக்கிறார் அவர். ஒரு கருவிக்கு மனிதர்கள் அடிமையானதைச் சொல்லும் இந்தப் புகைப்படங்கள், மிகப் பெரும் வெறுமையை நமக்கு உணர்த்துகின்றன. ‘ரிமூவ்ட்’ என்ற தளத்தில் ஒரு தொடராக வெளியிடத் திட்டமிட்டிருக்கும் எரிக், அமெரிக்காவையும் வியட்நாம், மியான்மர், சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற ஆசியவாசிகளையும் புகைப்படம் எடுத்திருக்கிறார். அடுத்தது இந்தியாதான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE