மோடி 365° - கோஷங்களை வைத்தே வண்டியை ஓட்டிவிட முடியாது!

By சித்தார்த் பாட்டியா

மோடியை இடறிவிட்டிருக்கக் கூடிய எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தன. அவரது இடத்தில் மற்றவர்கள் இருந்திருந்தால் நிச்சயம் இடறிவீழ்ந்திருப்பார்கள். அவற்றையெல்லாம் வெற்றிகொண்டுதான் மோடி மேலே வந்திருக்கிறார். அவர் அப்போதுதான் குஜராத் முதல்வராகப் பதவியேற்றிருந்தார். அந்த நிலையில் 2002 கலவரத்தால் ஏற்பட்ட கறை அவரது அரசியல் வாழ்க்கைக்கே முடிவுகட்டியிருக்கக் கூடியது. அப்போது அப்படித்தான் தோன்றியது. ஆனால், அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுதூரம் வந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், அந்தக் கலவரம்குறித்து யாருக்கும் எந்த விரிவான விளக்கமோ வருத்தமோ தெரிவிக்காமல் அவர்பாட்டுக்கும் இந்த இடத்தை நோக்கி நடைபோட்டிருந்திருக்கிறார். மிகவும் தீர்மானகரமானவராகவும் செயலூக்கம் மிக்கவராகவும்தான் மோடியை மக்கள் இப்போது கருதுகிறார்களே தவிர, பலவீனமானவராகவோ விமர்சனத்தைக் கண்டு ஒதுங்கிச்செல்பவராகவோ அவரைக் கருதுவதில்லை. இப்படிப்பட்ட மோடி அவரது பிரதான மசோதாக்கள் சிலவற்றை நிறைவேற்ற முடியாமல் சிக்கித் தவிப்பதுதான் ஆச்சரியம் ஏற்படுத்துகிறது. தனது வாக்குறுதிகளை அவரால் நிறைவேற்ற முடியாததோடு, அவரால் தம்பட்டமடிக்கப்பட்ட ‘நல்ல கால’மும் கண்ணுக்கு எட்டியவரை எங்கும் காணோம்.

மோடி அரசு ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுதான் நிறைவடைந்திருக்கிறது. நீண்ட காலப் பலன்களை அதற்குள் பார்ப்பதும் முடியாது (இந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் உருவாக்கியது அவர்தான் என்றாலும்). எனினும், ஆபத்தான சமிக்ஞையெல்லாம் தென்படுகின்றன - பொருளாதாரம் வேகம் பெற மறுக்கிறது, பங்குச்சந்தை வேகமாகச் சரிந்துகொண்டிருக்கிறது, ரூபாயின் மதிப்பும் அதலபாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது; அவர் கொடுத்த வாக்குறுதிகளெல்லாம் உள்ளீடற்றவையாகத் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. அவரது தீவிர ஆதரவாளர்களான பெருந்தொழிலதிபர்களே ‘நல்ல காலம்’ வருமோ என்னவோ என்று சந்தேகத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் பிம்பத்தைப் பெரிதாகக் காட்டுவதற்காகவும் மிகவும் அவசியமான முதலீட்டை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காகவும் உலகம் சுற்றுகிறார் மோடி. அந்த முதலீடுகளெல்லாம் வந்தால் அதன் மூலம் வேலைகளும் செழிப்புரும். மக்கள் மோடியைப் புகழ்வார்கள். இல்லாவிட்டால், இந்தப் பயணங்களெல்லாம் வெற்றுப் பெருமையைக் கட்டியெழுப்புவதற்கான பயணங்களாகவே ஆகிவிடும்.

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இன்னும் கூடுதலாக அரசியல் கருத்தொற்றுமையைத் திரட்ட மோடியால் முடியாததுதான் பெரும் பிரச்சினை. ஆட்சியைத் தாங்கிப்பிடிக்கத் தேவையான அளவு பெரும்பான்மையையும், கூடவே சில கூட்டணிக் கட்சிகளையும் கொண்டிருக்கும் அவருக்கு மக்களவையில் இதற்கு மேலும் ஆதரவு தேவையில்லை. ஆனால், மாநிலங்களவையில் போதுமான பலம் இல்லாததால் அஇஅதிமுக, திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவு அவருக்குத் தேவைப்படுகிறது. அந்தக் கட்சிகளும் தங்கள் ஆதரவை மோடிக்குத் தரப்போவதாக இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தேஜகூவில் உள்ள அகாலி தளம் சிவசேனை போன்ற கட்சிகளும்கூடச் சரியாக ஒத்துழைப்பு தருவதுபோல் தெரியவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மோடியைப் பற்றியும் பாஜகவைப் பற்றியும் கிண்டலடிக்க சிவசேனை தவறுவதில்லை. இதற்கு முன்பு கூட்டணி ஆட்சி என்ற பழக்கமில்லாத மோடி, கூட்டணிக் கட்சிகளைச் சுமூகமாக வைத்திருக்கும் கலையில் நிபுணத்துவம் பெற்றிருக்கவில்லை. அதேபோல் எதிர்க் கட்சிகளையும் அவர் சகஜமாக எடுத்துக்கொள்ளவில்லை.

டெல்லி தேர்தலுக்குப் பிறகு மோடி எல்லாவற்றையும் ஜாக்கிரதையாகவே அணுக ஆரம்பித்தார். விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் போன்றோரைக் கோபப்படுத்தும்

எந்த அதிரடி முடிவையும் எடுக்க அவர் விரும்பவில்லை. மோடி ஒரு கூர்மையான அரசியல்வாதியாக இருந்தும் நாட்டின் 67% குடிமக்களை (விவசாயிகள்) பாதிக்கக்கூடிய ஒரு சட்டத்தை ஏன் கொண்டுவரத் துடிக்கிறார் என்று நாடாளுமன்றத்தில் ராகுல் கேள்வி எழுப்பியதை இங்கே வைத்துப் பார்க்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்துகொண்டிருந்தாலும் அவர்களிடம் மோடியால் சென்றடைய முடியவில்லை; அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதுகுறித்து அவர்களுக்கு உறுதியளிக்க முடியவில்லை.

இதற்கிடையே, சமூக நலத் திட்டங்களுக்கான நிதியை மோடி அரசு குறைத்துக்கொண்டிருப்பதையும் ஐமுகூவின் திட்டங்களுக்கெல்லாம் புதிய பெயர் சூட்டிக்கொண்டிருப்பதையும் யாரும் கவனிக்காமல் இல்லை. கலாச்சார நிறுவனங்களுக்கெல்லாம் ஆர்எஸ்எஸ் சார்புடையவர்களை நியமித்துக்கொண்டிருப்பதும் கடும் அதிருப்தியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒட்டுமொத்த மக்களின் அக்கறையும் நிர்வாகம் நடக்க வேண்டும் என்பதன் மீதுதான். வேலைவாய்ப்புகளைத் தருவதற்கும், கல்வி, சமூகப் பாதுகாப்பு போன்றவற்றுக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம் என்றாலும் நிர்வாகம் என்பது அது மட்டுமல்ல; அமைதியான, பாதுகாப்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை ஏற்படுத்தித்தருவதையும் நிர்வாகம் உள்ளடக்கும். நோக்கங்களை மட்டுமல்ல அவற்றின் விளைவுகளையும் மக்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். வெறும் கோஷங்களால் அவர்களை ஈர்த்துவிட முடியாது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பலன்கள் மட்டும்தான்!

- சித்தார்த் பாட்டியா, ‘thewire.in’ இணைய இதழின் நிறுவனர்-ஆசிரியர்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

கருத்துப் பேழை

32 mins ago

விளையாட்டு

36 mins ago

இந்தியா

40 mins ago

உலகம்

47 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்