ஓய்வு விழாக்களுக்கு ஓய்வளிப்போம்

உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா நேற்று ஓய்வு பெற்றார். வழியனுப்பு விழாவையும், விருந்து உபசாரங்களையும் மறுத்துவிட்டார். அவர் திருச்சி வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற தொடர் புறக்கணிப்பு கட்டப்பஞ்சாயத்துக்களுக்கே வழிவகுக்கும் என்றும் சில வாரங்களுக்கு முன் எச்சரித்திருந்தார்.

கடமையைச் செய்து விட்டுப் போவதற்கு விழா, வைபவங்கள் தேவை இல்லை என்று கூறிவிட்டு 1929-ல் தாயகத்துக்கு கப்பல் ஏறியவர் நீதிபதி ஜாக்சன்.

உச்சநீதி மன்றம் உருவானபோது வழியனுப்பு விழாக்களை நடத்த அட்டர்னி ஜெனரல் எம்.சி.செதல்வாட் மறுத்தார்.அத்துடன் அவ்விழாக்களின் செயற்கைத் தன்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார். பதவி முடிந்து செல்பவர் பற்றிய புகழுரைகள், வார்த்தை ஜாலங்களே அவற்றில் உண்மை இருக்காது என்றார். மாற்று மரபுகளுக்கு வழிகோலுவோருக்கு நன்றி.

ஓய்வு பெறும் முன் தலைமை நீதிபதி அகர்வாலுக்கு நான் எழுதிய கடிதத்தில் செதல்வாட் தெரிவித்த கருத்துகளை நினைவூட்டி விழா வைபவங்களை ஏற்க மறுத்துவிட்டேன். அவற்றால் ஏற்படும் மனித ஆற்றல் இழப்புகள் பற்றிக் குறிப்பிட்டதுடன் , அரசுக்கு உண்டாகும் அதீத செலவினங்களை தவிர்க்கும்படியும் வேண்டியிருந்தேன். கடிதம் எழுதி எட்டு மாதங்களாகியும் எவ்வித விளைவுகளும் ஏற்படவில்லை.

உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு வயது பற்றிய சர்ச்சைகள் தற்போது கிளம்பியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு மாநிலங்களவையின் நியமன உறுப்பினரான சட்ட மேதை நாரிமன், அரசியல் சட்டமைப்பு திருத்த தனி நபர் மசோதாவை முன்மொழிந்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு 62, உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு 65 என்று ஓய்வு வயது இருப்பது பாரபட்சமானது; உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வயதை உயர்த்திவிட்டால் பலர் தங்களது உச்ச நீதிமன்ற பதவிக்கான எதிர்பார்ப்பை நிறுத்திவிட்டு அதே உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெறவே விரும்புவர். அதனால் உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பானவர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்புண்டு என்றார்.

தனி நபர் மசோதாவை திரும்பப்பெற அவருக்கு அன்றைய அரசு அறிவுறுத்தியது. இது நடந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அப்படி ஒரு மசோதா இன்னும் சட்டம் ஆக்கப்படவில்லை. தற்போதைய சட்ட அமைச்சரும் இக்கருத்தையே வெளியிட்டுள்ளார். இதற்குள் உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் வயதை உயர்த்த கோரிய பொது நல மனுக்கள் தள்ளுபடியாகின.

நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்து கொள்வோம் என்ற 1993-ம் ஆண்டு தீர்ப்புக்கு இன்று பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. நீதிபதி ஓய்வு பெறும் தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே அவரது பதவியில் புதிய நபரை நியமனம் செய்ய பரிந்துரைக்கலாம் என்று நடைமுறைகள் இருப்பினும் இன்று நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 264 பதவிகள் காலியாக உள்ளன. மொத்த பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு இவை!

இன்னொருப்பக்கம் வெளி மாநிலத் தலைமை நீதிபதி நியமனக் கொள்கையால் விபரீதமான விளைவுகளே ஏற்பட்டுள்ளன. தலைமை ஏற்கும் புதிய நீதிபதிக்கு உள்ளூர் நிலைமை புரியவே ஆண்டுக்கணக்கில் ஆகும். அதன் பின்னர் உரிய நபர்களை கண்டெடுத்து நீதிபதிக் குழு மூலம் பரிந்துரை செய்வதிலும் மாநில, மத்திய அரசுகளுடன் கலந்தாலோசனைகள் செய்வதிலுமே ஏக கால தாமதமும் தேக்க நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.

இதுபோன்ற சவால்களை முறியடிக்க, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தவும், காலி இடங்களை தாமதமின்றி நிரப்பவும், புதிய நியமன நடைமுறைகளைக் கொண்டுவரவும் அரசியலமைப்புச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திருத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

தொழில்நுட்பம்

47 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்