சிம்மக் குரலும் திரைத் தமிழும்

தமிழ் வாழ்வின் பண்பாட்டு அசைவுகளைப் பேசும் அரங்கமாகவும், தமிழ் கலை இலக்கியச் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விழாவாகவும் ‘இந்து தமிழ்’ நாளிதழ் முன்னெடுக்கும், ‘யாதும் தமிழே’ கொண்டாட்டத்தின் பிற்பகல் அமர்வில் சமகாலக் கலை, இலக்கியத் தளங்களில் இயங்கிவரும் ஆளுமைகள் பங்கேற்றுக் கலந்துரையாடினர். ‘சிம்மக் குரலும் திரைத் தமிழும்’ என்ற தலைப்பில்  ‘சிம்மக் குரலோன் – 90’ சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘சி(ரி)த்ராலயா’ தொடரின் புத்தக வெளியீடு, அமர்வின் தொடக்க நிகழ்ச்சியாக அமைந்தது. நூலாசிரியர் டி.ஏ.நரசிம்மனின் முன்னிலையில் நடிகர் சிவகுமார் புத்தகத்தை வெளியிட, சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கணேசன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். சிவாஜி எனும் நடிப்பாளுமை குறித்து முதலில் சிவகுமார் பேசினார். தொடர்ந்து ‘ஐ.ஏ.பி’ ஒளிப்பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ஜெயகுமார், தனக்கும் சிவாஜிக்குமான நட்புறவு குறித்துப் பேசியிருந்த காணொலியும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சிவாஜியை எவ்வாறு கொண்டாடிவந்துள்ளது என்பதை விளக்கும் ஆவணப்படமும் திரையிடப்பட்டன.

தமிழ் வாழும் வரை சிவாஜியும் வாழ்வார்!

சிவகுமார், நடிகர்.

மிகச் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் சிவாஜி. தந்தை சுதந்திரப் போராட்டத் தியாகி. அடிக்கடி சிறைக்குச் சென்றுவிடுவார். குழந்தைகளை வளர்ப்பதற்காக இரண்டு பசுக்களை வாங்கி பால் கறந்து விற்றுவந்தார் அவரது அம்மா.  கணேசனுக்கு ‘சிவாஜி’ எனும் பெயர் பெற்றுக்கொடுத்தது அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகம். அவரை சிறுவயதில் நாடகத்துக்கு இழுத்துக் கொண்டுவந்ததோ ‘கட்டபொம்மன்’ நாடகம். அதை ஏழு வயதில் பார்த்த சிவாஜிக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அத்தனை சிறிய வயதில் நாடக வாழ்க்கையைத் தொடங்கிய சிவாஜிதான், தமிழ் சினிமாவை உலகறியச்செய்த முதல் கலைஞன்.

அவர் நடித்த ‘வணங்காமுடி’யைப் பார்த்துவிட்டு சிவாஜியைப் பார்த்தால் போதும் என்று நினைத்துதான், சென்னைக்கு வந்தேன். அவரது சிபாரிசில்தான்  ‘மோகன் ஆர்ட்ஸ்’ என்ற பேனர் கம்பெனியில் வரையத் தொடங்கினேன். அதன் பின்னர் அவரோடு 16 படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. தமிழ் இருக்கும்வரை, சிவாஜி வாழ்ந்துகொண்டே இருப்பார்.

பிம்பம் பற்றி கவலைப்படாத சிவாஜி!

சித்ராலயா கோபு, இயக்குநர்.

எனது திரையுலக அனுபவங்களை என்னிடம் கேட்டு, எனது மகன் டி.ஏ.நரசிம்மன் எழுதிய ‘சி(ரி)த்ராலயா’ தொடருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவேயில்லை. வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் தொடரைப் பாராட்டினார்கள். ‘கலாட்டா கல்யாணம்’ தொடங்கி பல திரைப்படங்களில் அவருடன் பணிபுரிந்தேன். சிவாஜியின் பெருந்தன்மை எந்த நடிகருக்கும் கிடையாது. முன்னணிக் கதாநாயகனாக புகழ்பெற்றுவிட்ட காலகட்டத்தில் தனது நாயக பிம்பம்பற்றிக் கவலைப்படாமல் நடித்தவர் அவர். ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் தனது காதலியின் சகோதரிகளுக்கு மாப்பிள்ளை தேடும் தரகர்போலவும், வில்லனிடம் அடிவாங்கிக்கொண்டு திருப்பி அடிக்க முடியாதவராகவும் நடித்தார். (காணொலி வழியாக)

ஒன்பது நொடிகளில் ஒன்பது படம்!

எம்.ஜெயகுமார், ஐ.ஏ.பி. நிர்வாக இயக்குநர்.

1998-ல் நாட்டிலேயே முதன்முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் போட்டோ ஸ்டுடியோவை கோயமுத்தூரில் நாங்கள் தொடங்கியபோது சிவாஜிதான் அதைத் திறந்துவைத்தார். சிவாஜியின் குடும்பப் புகைப்படங்களை டிஜிட்டலில் எடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது. அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டபோது, அந்த விருதின் பதக்கத்தை அவருக்கு அணிவித்து புகைப்படம் எடுத்தோம். முழுவதும் மோட்டாரில் இயங்கும், ‘ஹசல்பிளாட் 120’ என்ற முழுவதும் மோட்டாரில் இயங்கும் கேமராவில் அதைப் படம்பிடித்தோம். ஒன்பது நொடிகளில் ஒன்பது படங்களை எடுக்கும் தொழில்நுட்பம் அது. அதைக் கூறியதும் ஒன்பது நொடிகளுக்கும் ஒன்பது விதமான முகபாவனைகளைக் கொண்டுவந்தார். ஒரு பிறவிக் கலைஞனுக்கு மட்டுமே அது சாத்தியம்!

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்யும் சேவை

ராம்குமார் கணேசன், சிவாஜியின் மகன்

நான் பணியாற்றிய முதல் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் பாட்டு எழுதிக்கொடுத்து என்னைப் படிக்கச் சொன்னார்.. நான்கு வரியைப் படிக்க இருபது நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டேன். “நானும் உன் தந்தையும் தமிழை வளர்க்கப் பாடுபட்டுவருகிறோம். நீ இவ்வளவு சிரமப்படுகிறாயே” என்றார் கவிஞர். அதன் பின்னர் உறுதியாக நின்று, தமிழைக் கற்றுக்கொண்டேன். இன்றைய இளைய தலைமுறையினர் தமிழை மறந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழின் பெருமைகளை ‘இந்து தமிழ்’ நாளிதழ் எடுத்துச் சொல்கிறது. இந்த சேவை தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்யும் சேவை. இந்து நாளிதழ் என்றாலே கௌரவம். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தமிழ் குறித்து எடுத்துரைப்பதோடு, நடிகர் திலகம், சிவகுமார் போன்றவர்கள் நடித்த காட்சிகளைத் திரையிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.  ‘இந்து தமிழின் இந்த சேவைக்கு நன்றி. இது தொடரட்டும்!

அக்பருக்கு பீர்பால் போல் சிவாஜிக்கு ‘சித்ராலயா’ கோபு

டி.ஏ.நரசிம்மன், சி(ரி)த்ராலயா நூலாசிரியர்.

சிவாஜி கணேசனின் சிம்மக் குரல் இல்லையென்றால், இன்று தமிழில் பல சொற்கள் காணாமல் போயிருக்கும். இன்றைய தலைமுறையினருக்குத் தமிழ் தடுமாறுகிறது. சிவாஜி போல் ஒருவர் இல்லாதது குறை. திரைப்படத் துறையைத் தாண்டி, எனது தந்தைக்குத் தனியொரு இடத்தை சிவாஜி வழங்கியுள்ளார். கிருஷ்ண தேவராயருக்கு தெனாலி ராமன் போல், அக்பருக்கு பீர்பால் போல், சிவாஜிக்கு சித்ராலயா கோபு திகழ்ந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE