சிறப்புக் கட்டுரைகள்

சட்டப்பிரிவு 497 நீக்கம்: சரியான திசையை நோக்கிய முடிவு!

செய்திப்பிரிவு

செப்டம்பர் மாதத்தில், மிக முக்கியமான தீர்ப்புகளைத் தொடர்ச்சியாக வழங்கிய உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 27-ல் குறிப்பிடத்தக்க இன்னொரு தீர்ப்பையும் வழங்கியது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று கூறியிருப்பதன் மூலம், திருமணத்தை மீறிய உறவு குற்றமல்ல என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

திருமணத்தை மீறிய உறவைக் குற்றமாகக் கருதும் மிகச் சில நாடுகளில் ஒன்றாக இதுவரை இந்தியா இருந்துவந்தது. திருமணமான பெண் என்பதை அறிந்த ஓர் ஆண் – அதாவது ‘வெளியாள்’ - அப்பெண்ணுடன், திருமணத்தை மீறிய உறவுகொண்டிருக்கிறார் என்றால், அந்த ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார்; தவறிழைக்கும் வாழ்க்கைத் துணை தண்டிக்கப்பட மாட்டார் என்பதே இந்தக் குற்றம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது.

இந்த உறவுக்கு அப்பெண்ணின் கணவர் சம்மதிக்காதபட்சத்தில், இது ஒரு குற்றமாகக் கருதப்பட்டது – அதாவது, மனைவி என்பவள் கணவரின் சொத்து என்றே கருதப்பட்டாள். எனவே, திருமணத்தை மீறிய உறவில் கணவர் ‘பாதிக்கப்பட்டவ’ராகக் கருதப்பட்டார். இது தொடர்பாக, கணவர் புகாரளிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த வாய்ப்பு, மனைவிக்கு அளிக்கப்படவில்லை – அதாவது, திருமணத்தை மீறிய உறவுகொண்டிருக்கும் கணவர் மீது புகாரளிக்கும் வாய்ப்பு பெண்ணுக்கு வழங்கப்படவில்லை.

எந்த ஒரு செயலும் குற்றமாகக் கருதப்பட வேண்டும் எனில், அது மிகப் பெரிய அளவில் சமூகத்துக்கு எதிரான செயலாக இருக்க வேண்டும். இந்தச் சட்டப் பிரிவு நீடிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் முன்வைத்த முக்கியமான வாதங்கள்: ‘திருமண பந்தத்தை மீறுகின்ற வெளியாள் தண்டிக்கப்பட வேண்டும்; ஒழுக்கக் கேடான இந்தச் செயலுக்குத் தண்டனை வழங்கப்படுவதைச் சட்டம் உறுதிசெய்ய வேண்டும்’ என்பவையாகும். இந்த மீறலானது, திருமணம் எனும் நிறுவனத்துக்கு எதிரான குற்றம். எனவே, இது சமூகத்தின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எதிரான மீறல் என்றே பார்க்கப்பட்டது.

நல்லவேளையாக, இந்த வாதம் உச்ச நீதிமன்ற அமர்வால் ஒருமனதாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கைத் துணைகளுக்கு இடையிலான திருமணத்தை மீறிய உறவு என்பது ஒரு தனிப்பட்ட விஷயம் என்றும், சிவில் சட்டத்தின்படி இதைக் காரணம் காட்டி விவாகரத்து கோரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டிருக்கும் எந்தத் தரப்புக்கு எதிராகவும் குற்ற நடவடிக்கையைப் பிரயோகிக்க வேண்டியதில்லை என்று கூறியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அந்நியோன்யமான, தனிப்பட்ட அளவிலான தேர்வை மேற்கொள்பவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்குவதை அரசால் நியாயப்படுத்திவிட முடியாது என்றும் கூறியிருக்கிறது.

மேலும், திருமணத்தை மீறிய உறவு விஷயத்தில் இரு பாலினத்தவர்களுக்கும் தண்டனை வழங்குவது தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும் உச்ச நீதிமன்றம், இந்த விஷயம் தனிப்பட்டரீதியிலானது என்றும், அதில் தலையிடுவது தனிநபர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகும் என்றும் கூறியிருக்கிறது.

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், இதுவரை இருந்த சட்டத்தின்படி, இந்தக் குற்றத்தில் – கணவர் மட்டுமே பாதிக்கப்பட்டவராகவும், அவரது சொத்து (அதாவது அவரது மனைவி) பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் கருதப்பட்டது. பெண் என்பவள் தனது கணவரின் தனிப்பட்ட சொத்து எனும் இந்தப் பிற்போக்கான, ஆணாதிக்கரீதியான கருத்தை நீக்கியிருக்கும் உச்ச நீதிமன்றம்,

497-வது சட்டப் பிரிவானது – பெண்களின் பாலியல் தேர்வையும், உறவுகள் தொடர்பான அவர்களது உரிமையையும் மறுத்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், இந்த சுய அதிகார இழப்பு என்பது அவர்களது அந்தரங்க உரிமையையும், கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் மீறுவதாகும் – இதன் மூலம் அரசியல் சட்டக்கூறு

21-ன்படி வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்பதை விளக்க, கே.எஸ்.புட்டாஸ்வாமி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அத்துடன், அரசியல் சட்டக்கூறு 14-ன் கீழ் உத்தரவாதம் வழங்கப்பட்ட சம உரிமையையும் 497-வது சட்டப் பிரிவு மீறியது; பெண் என்பவள் செயலற்ற நிறுவனமாகவும், கணவரின் உடைமையாகவும் நடத்தப்பட்டாள் என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. 497-வது சட்டப் பிரிவானது, திருமண உறவில் சமமான பங்குதாரர் எனும் உரிமையுள்ள ஒரு தனிநபர் எனும் மனைவியின் அடையாளத்தைச் சிதைத்து, கணவருக்குச் சாதகமான நிலையை உருவாக்கவே வழிவகுத்தது.

“ஒரு அரசியல் சட்ட ஆட்சியில், திருமணம் என்பது, வாழ்க்கைத் துணைகளுக்கு இடையிலான சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியல் சட்டத்தின் மூன்றாவது பாகம் உறுதியளிக்கும் சுதந்திரத்தைப் பெறுவதில் இருவருக்கும் சம உரிமை உண்டு” என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. திருமண உறவில் சமமான உரிமைகளையும் வாய்ப்புகளையும் இரு தரப்புக்கும் வழங்காமல் இருப்பது என்பது பாரபட்சமானது மட்டுமல்ல, அவர்களது சம உரிமையை மீறுவதும் ஆகும்.

497-வது சட்டப் பிரிவின்கீழ், சட்ட நடவடிக்கையிலிருந்து பெண்களுக்கு விலக்கு அளிப்பது என்பது அவர்களைப் ‘பாதுகாக்கிறது’ என்றும், பெண்கள், குழந்தைகள் நலன் தொடர்பான சட்டங்களை அரசு உருவாக்க வழிவகுத்த 15(3)-வது

சட்டக்கூறுக்கு ஒத்திசைவானது என்றும் முன்பு வாதங்கள் வைக்கப்பட்டன. இரு தாரத் திருமணம் அதிகமாக இருந்த காலகட்டத்தில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. கணவர் பலரைத் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மனைவியைத் தண்டிப்பது நியாயமல்ல என்று இந்திய தண்டனைச் சட்டத்தை உருவாக்கிய மெக்காலே பிரபு கருதினார்.

எனினும், இந்த தர்க்கத்தில் இருந்த பிழையைச் சுட்டிக்காட்டியிருக்கும் உச்ச நீதிமன்றம், “தனது மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருக்கும் வேறொரு ஆணுக்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை ஆணுக்கு இருந்துவந்த நிலையில், அதேபோல் வழக்கு தொடர்வதற்கான உரிமையைப் பெண்களுக்கு மறுக்கும் இந்தச் சட்டம் நன்மை பயக்கக்கூடியது என்று கருதிவிட முடியாது; சொல்லப்போனால், இச்சட்டம் பாரபட்சமானது” என்றும் கூறியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இம்முடிவுக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துவருவது ஆச்சரியமளிக்கிறது. பல நாடுகள் இதுபோன்ற சட்டங்களை எப்போதோ கைவிட்டுவிட்டன. சமத்துவத்துக்கான போராட்டங்கள் பல்வேறு தளங்களில் இன்றைக்கும் தொடர்ந்துவரும் நிலையில், வழக்கொழிந்த இந்தச் சட்டத்தை நீக்கும் முடிவு, நிச்சயம் சரியான திசையை நோக்கிய முன்னெடுப்பாகும்!

- ஷோனோத்ரா குமார், சட்ட ஆய்வாளர்.

‘தி இந்து’ ஆங்கிலம்,

தமிழில்: வெ.சந்திரமோகன்

SCROLL FOR NEXT