கலைப் படங்கள் என்கிற வகைமையை நாட்டுக்கு முதலில் வழங்கியது வங்க மொழி சினிமா. ‘பதேர் பாஞ்சாலி’ (1955) என்கிற நியோ-ரியலிச பாணிப் படத்தின் வழியாக இந்தியக் கலைப் படங்களின் ‘பிதாமகர்’ என்கிற பெருமையைப் பெற்றவர் சத்யஜித் ராய்.
ஆனால், ‘பதேர் பாஞ்சாலி’ வெளியாவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 1952இல் ‘நாகரிக்’ (Nagorik) என்கிற கலைப் படத்தை எடுத்து முடித்தவர் ரித்விக் கட்டக் (1925 - 1976). அதற்குப் பிறகு கலைத்துவம் குன்றாத 8 படங்களைக் கொடுத்து, தன்னுடைய 51ஆவது வயதில் திடீரென மறைந்தார். அதன் பிறகு, அவரது கலையாளுமைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 25 ஆண்டுகள் கழித்தே (1977இல்) ‘நாகரிக்’ வெளியிடப்பட்டது.
நாடக ஆர்வம்: ஐம்பதுகளில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம், நாடகத்தையும் திரைப்படத்தையும் பிரச்சார ஊடகமாகக் கையிலெடுத்து வெற்றிகண்டது. அதே காலக்கட்டத்தில் கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கலைப் பிரிவாக இந்திய மக்கள் நாடகச் சங்கத்தை (IPTA) வளர்த்தெடுத்தனர்.
ரித்விக் கட்டக் தன்னுடைய பள்ளி நாள்களில் நாடகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், 1948இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்ற காலத்தில், இந்திய மக்கள் நாடகச் சங்கத்தில் இணைந்தார். அங்கே ஐந்து நாடகங்களை எழுதி, இயக்கி, நடிக்கவும் செய்த அவர் வெற்றிகரமான நாடக ஆளுமையாகவும் உயர்ந்தார்.
அவரது முதல் நாடகம் ‘காலா சயர்’ (இருண்ட ஏரி). 1942இன் வங்கப் பஞ்சம் இயற்கையானது அல்ல; ஆங்கிலேயக் காலனி ஆட்சியின் திட்டமிட்ட மூலதனக் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட பெருந்துயரம் என்பதைத் துணிவுடன் அது சித்தரித்தது. கொல்கத்தா நகரில் மக்கள் உணவு கிடைக்காமல் பசி, பட்டினியால் வாடிய கொடிய நிலையையும், அதனால் மனிதநேயம் எந்த எல்லைக்குக் கீழிறங்கியது என்பதையும் கலாபூர்வ விமர்சனமாக முன்வைத்திருந்தது.
சமரசமற்ற கலைஞர்: கட்டக்கின் அப்பா சுரேஷ் சந்திரா, மாவட்ட நீதிபதி; கவிஞர். அப்பாவின் வழியில், ரித்விக் கட்டக்கின் அண்ணன் மணீஷ் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என இயங்கி, பழமையை உதறியெழுந்த ‘கலோல்’ (ஓயாத அலைகள்) என்கிற வங்காளச் சிற்றிதழ் முன்னெடுத்த இலக்கிய இயக்கத்தின் (இங்கே 1930களில் புகழ்பெற்ற ‘மணிக்கொடி’ இயக்கம்போல்) குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். சிலி நாட்டின் மார்க்சிய மகாகவி பாப்லோ நெருடாவின் கவிதைகளை வங்காளத்தில் முதன்முதலில் மொழிபெயர்த்தவர் மணீஷ். இவருடைய மகள்தான் வங்காள நவீன இலக்கியத்துக்குப் பெரும் பங்களித்த மகேஸ்வேதா தேவி.
அப்பா - அண்ணன் ஆகியோரிடமிருந்து ரித்விக் கட்டக் படைப்பூக்கத்தைப் பெற்றிருந்தாலும், ‘வங்கப் பிரிவினை’யும் அதற்கு வங்காளிகள் கொடுத்த விலையும், அதனால் விளைந்த வலியும் இழப்புகளும்தான் அவரைச் சமரசமற்ற பிடிவாதமான கலைஞராக மாற்றின. பிரிட்டிஷ் இந்தியாவில் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த வங்கத்தின் கிழக்குப் பகுதியில் (இப்போது வங்கதேசம்) உள்ள ராஜ்ஷாஹியில், தன் பெற்றோருக்குப் பதினோராவது குழந்தையாகப் பிறந்தார் ரித்விக் கட்டக்.
1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில், தேசப் பிரிவினை நிகழ்ந்தது. அதன் ஒரு பகுதியாக வங்கப் பிரிவினை என்கிற பேரழிவு வரலாற்றைத் தன் இளமைக் காலத்தில் நேரடியாக ரித்விக் கட்டக் எதிர்கொண்டார். அதன் வெளிப்பாடாக, அவருடைய நாடகங்களும் 8 திரைப்படங்களும் சொந்த மண்ணைப் பிரிந்த கட்டாயப் புலம்பெயர்வால் அடையாளச் சிக்கலுக்கு ஆளாகி, நசுக்கப்பட்ட எளிய மக்களின், குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்களின் இருத்தலியல் பிரச்சினைகளைப் பேசின. கூடவே, கலைஞர்களின் வலிகளை, சிதறுண்ட ஒரு சமூகத்தில் மேலும் உள்ஒடுக்குதலுக்கு ஆளாகும் பெண்களின் விடுதலைக் குரலைப் பேசின.
ஆவணப்பட யதார்த்தம்: விமல் ராய் திரைக்கதை எழுதி, மனோஜ் பட்டாச்சார்யா இயக்கிய ‘தாதபி’யில் (Thathapi - 1950) உதவி இயக்குநர், உதவித் திரைக்கதை எழுத்தாளராகவும் நடிகராகவும் திரைக்கு அறிமுகமானார். தொடர்ந்து அதே ஆண்டில், நிமாய் கோஷ் ஒளிப்பதிவு செய்து இயக்கிய, இந்தியாவின் முதல் நியோ ரியலிசப் படம் என அடையாளப்படுத்தப்படும் ‘சின்னமூல்’ (Chinnamul 1950) படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதுடன் அதில் நடிக்கவும் செய்தார். நிமாய் கோஷ் தமிழ்நாட்டுக்கு வந்து ‘பாதை தெரியுது பார்’ இயக்கிய காலத்தில் ரித்விக்கும் தமிழ் சினிமாவுக்கு வந்து பங்களிக்கும் வாய்ப்பைக் காலம் உருவாக்கவில்லை. மாறாக, தன் தாய்மொழியின் சினிமா உலகத்துக்கு மறக்க முடியாத எட்டுப் படைப்புகளையும் பல ஆவணப்படங்களையும் கொடுத்துச்சென்றார்.
அவருடைய எல்லாப் படங்களும் பிரிவினையின் வலிகளைச் சித்தரித்தாலும் ‘மேக தக்க தாரா’ (Meghe Dhaka Tara - 1960) - ‘கோமல் காந்தார்’ (Komal Gandhar -1961) - ‘சுவர்ணரேகா’ (Subarnarekha -1965) ஆகிய மூன்று படங்களும் பிரிவினை உருவாக்கிய அகதி வாழ்வின் அவலங்களைக் கவித்துவம் குன்றாமல் சித்தரிக்கும் படைப்புப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக (Partition Trilogy) விளங்குகின்றன.
கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் ‘கோமல் காந்தார்’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் தனது கலைக்குழுவினரிடம் பேசும் போது ‘கலை என்பது கலைக்காக அல்ல; அது வாழ்க்கைக்காக...’ என்று கூறும் வசனம் ரித்விக் கட்டக்கின் கலைக்கோட்பாட்டை அடையாளம் காட்டும். நதி, ரயில், கார், நாய் என இயற்கையும் இயந்திரங்களும் ஐந்தறிவு உயிர்களும் மனிதர்களுடன் கொண்டிருக்கும் பிணைப்பை கட்டக்கின் திரைமொழி உயிரோட்டமாகச் சித்தரித்துள்ளது.
கச்சாவான மண்ணின் இசை, பாடல்கள், ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு ஆகியவற்றைக் கதை சொல்லும் கருவிகளாகத் திறம்படப் பயன்படுத்திய அவர், வங்க சினிமாவின் தனிப்பெரும் சுயாதீனப் படைப்பாளி. மெலோடிராமாவும் ஆவணப்பட யதார்த்தமும் இணையும் உணர்ச்சிமிகுந்த கவித்துவப் பாணியைக் கையாண்ட ரித்விக் கட்டக், அரசியலையும் கலையையும் திரைமொழியில் இணைத்ததில் இந்தியாவின் புடோவ்கின் எனலாம்.
நவம்பர் 4: ரித்விக் கட்டக் நூற்றாண்டு நிறைவு
- தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in