சிறப்புக் கட்டுரைகள்

இரட்டைப் பருவமழையும் விவசாயிகளின் வேதனையும்

வெ.ஜீவகுமார்

வடகிழக்குப் பருவமழையைத் தென்மேற்குப் பருவமழை அபூர்வமாக வரவேற்று அண்மையில் விடைபெற்றுள்ளது. இரண்டு பருவமழைகள் ஒரே தருணத்தில் சந்திக்கும்போது உழவர்கள் வாழ்க்கையில் விபரீதம் வராமல் தடுப்பது மிக அவசியம்.

ஆனால், என்ன நடக்கிறது? போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், வயல்கள், களங்கள், தார்ச்சாலைகளில் ஏறக்குறைய 4 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன. அவை முளைத்தும் நிறம் மங்கியும் அழிகின்றன. இந்நிலையில் வடமேற்குப் பருவமழை காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கரில் வயல்களில் தேங்கிய தண்ணீரால் பயிர்கள் அழுகுகின்றன.

சோதனையும் சாதனையும்: “நாங்கள் மழைக்கு முன்பே இரண்டு மூன்று மாதகாலமாக முன்னெச்​சரிக்கை நடவடிக்கை எடுத்​துள்ளோம். தொடர்ந்து எடுத்​துக்கொண்டிருக்​கிறோம்” என்று அதிகாரி​களுடனான ஒரு காணொளிக் கூட்டத்தில் 19.10.25 தமிழக முதல்வர் மு.க.ஸ்​டாலின் கூறினார்.

கடந்த 08.06.2025 அன்று தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு முதல்​வரிடம் அறிக்கை சமர்ப்​பித்தது. வேளாண் பணியி​லிருந்து ஆண், பெண் தொழிலா​ளர்கள் வேறு துறைகளுக்கு மாறுகிறார்கள் என்றும் வேளாண்மை சதவீதம் சரிந்து​வரு​வ​தாகவும் அந்த அறிக்கை குறிப்​பிட்டது.

முன்பும் இப்படியான நெருக்​கடிகளைத் தமிழகம் சந்தித்​துள்ளது. 1836-38களில் காவிரிப்​படுகை விவசாயம் வீழ்ந்தது. அப்போது கவலையுற்ற ஆங்கில அதிகாரி ஆர்தர் காட்டன் களம் இறங்கி​னார். கரைபுரண்டு ஓடும் பல இந்திய ஆறுகளை எல்லாம் முந்தி 1902-03இல் மகசூலில் காவிரி முதலிடம் பிடித்தது. தற்போதைய நெருக்​கடிகளுக்கு இடையிலும் தமிழக உழவர்கள் சாதித்துள்ளனர்.

கடந்த குறுவை​யில். 3.5 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி இப்போது 6.31 லட்சம் ஏக்கர் என உயர்ந்துள்ளது. கடந்த குறுவையில் அக்டோபர் 13 வரை 3.03 லட்சம் டன் ஆக இருந்த கொள்முதல் இந்த ஆண்டு அதே காலத்தில் 9,02,468 டன் வரை கொள்முதலாகி உள்ளது. மேலும் கொள்முதல் நெல் மீதம் உள்ளது.

வரலாற்றுத் தொடர்ச்சி: கறாராகச் சொன்னால் இதுவும் வரலாற்றுத் தொடர்ச்சி​தான். வேலி நிலம் ஆயிரம் கலம் விளைந்தது பற்றி ‘பொருந​ராற்றுப்படை’ பேசுகிறது. சொட்டுநீரும் வீணாகாத தொழில்​நுட்பக் காலம், அது. இருப்​பைக்​குடிக் கிழவன் என்கிற சிற்றரசர் ஏரிநூலிட்டு ஏறுவித்தல் என்கிற அணை கட்டும் தொழில்​நுட்​பத்தைக் கையாண்​டார்.

நீர் அறுவடை எனப்படும் தொழில்​நுட்​பத்தின் தந்தை இவர். 1679ஆம் ஆண்டில் அணைக்​கரைப்​பாளை​யத்தில் வேளாண்​மைக்காக மூன்று மாதத்தில் அணை கட்டப்​பட்டதை ஒரு போர்த்​துக்​கீசிய ஆவணம் குறிப்​பிடு​கிறது. உழவனால் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர் தங்கத்தால் செய்யப்பட்ட கதிருக்குச் சமம் என கம்பர் எழுதி​னார்.

பெருமை பொருந்திய வரப்பு​களைக் கொண்ட வயல்வெளி​களில் பிறை வடிவாக உள்ள அரிவாளால் அறுவடை செய்யப்பட்ட நெற்க​திர்கள் வரப்பிலிருந்து களத்துக்குச் சென்று சேராவிடில் வேதங்கள் கூறும் நல்லொழுக்கம் உலகில் நடைபெறாது என்றும் கம்பர் கூறுவார். பொலி தூற்றும் கூடை என நெல்லை ஏந்துபவைகூடப் பெருமைப்​படுத்​தப்​பட்டன.

வேந்தர்​களுக்குப் பெண் கொடுக்க உழவர்கள் மறுத்தனர் என இலக்கி​யங்கள் மொழிகின்றன. 145 இடங்களில் சங்க இலக்கி​யங்​களில் வெவ்வேறு பெயர்​களால் நெல் அழைக்​கப்​படு​கிறது. நெல்லும் மலரும் பூசனைப் பொருள்களாக இருந்தன.

புயல், சூறாவளி, பேய்க்​காற்று, நடுநிசி​யில், வெட்ட​வெளி​யில், மின்னல், இடி, பாம்புக்கடி, நச்சுப்​பூச்சிகளுக்கு நடுவில் தம்மைப் பணயம் வைத்து உணவு தானியங்களை ஈன்ற உழவர்​களின் உற்பத்தி இப்போது எதைச் சந்திக்​கிறது? இப்போது சேற்றிலும் சகதியிலும் சாலைகளிலும் கொட்டப்​பட்டுச் செருப்புக் கால்களிலும் கார் சக்கரங்​களிலும் மிதிபட்டு நெல் அரைபடு​கிறது.

அரசின் அலட்சியம்: ‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்’ என்கிற குறள்போல் நிலை உருவாகி​யுள்ளது. உற்பத்​தியான நெல் மழையின் ஈரத்தைச் சுமக்​கிறது. உலர்த்த வசதி இல்லை. களங்கள் இல்லை. உலர்த்தும் இயந்திரம் இல்லை. அவற்றைச் சுமை ஏற்ற வாகனம் இல்லை. சேமிக்கக் கிடங்கு இல்லை. இருந்த திறந்​தவெளிக் கிடங்குகளை மூடிய அரசு, மேற்கூரையோடு போதிய கிடங்குகளை அமைக்க​வில்லை.

உற்பத்தி மிகுந்தபோது 1,000 ஆண்டு​களுக்கு முன் தஞ்சையில் தற்போது தமிழ்ப் பல்கலைக்​கழகம் உள்ள இடத்தி​லும், திருப்​பாணத்​துறை​யிலும், கோயில்​களிலும் களஞ்சி​யங்கள் உருவாக்​கப்​பட்டு, சேமிக்​கப்​பட்டன என்பது வரலாறு.

அரசு இயந்திரம் முன்கூட்டியே இயங்கி இருந்தால் அரவை ஆலைகள், கிடங்குகள், வேறு மாவட்​டங்கள், மாநிலங்​களுக்கு நெல்லைக் கொண்டு​சென்​றிருக்​கலாம். போதிய பணியாளர்களை அமர்த்தி இருக்​கலாம். மழை வருவதற்கு முன்பே குடை வாங்கு​வதுதான் திறமையான நிர்வாகமாக இருக்க முடியும்.

அரசுகளின் கவனத்​துக்​கு... ஒருபுறம் மண் இல்லாமலேயே சாகுபடி செய்யும் ‘ஹைட்​ரோ​போனிக்ஸ்’ வேளாண் முறையும் விண்வெளி விவசாயம் குறித்த ஆய்வு​களும் பிரமிப்பு தரும் வகையில் வளர்கின்றன. ஆனால் இங்கே சாக்கு, படுதா, தார்ப்பாய் எல்லா​வற்றுக்கும் திண்டாட்​டம்​தான். மேலும் 66 லட்சம் சாக்குகள் வர வேண்டி​யுள்ளதாக 22.10.2025 அன்று அமைச்சர் சக்கரபாணி கூறியிருப்பதை இங்கு குறிப்பிட வேண்டி​யிருக்​கிறது. இதில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உண்டு.

ஈரப்பதத் தளர்வு கேட்பதில் தமிழகம் காலம் தாமதித்து அக்டோபர் 19 அன்றுதான் கேட்டது. இதில் முடிவெடுக்கும் அதிகாரத்தைக்கூட மாநில அரசுக்கு வழங்காமல் மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. கடந்த காலங்​களிலும் ஈரப்பதத் தளர்வில் மத்திய அரசு தமிழகத்தை அலட்சியம் செய்துள்ளது.

அதேவேளை நெல் கொள்முதல் நிலையங்​களில் அடிப்​படைக் கட்டமைப்பு வசதிகளைக் காலகாலத்​துக்கும் செய்யாமல் செறிவூட்​டப்பட்ட அரிசி பிரச்சினையைத் தமிழக அரசு எழுப்ப இது தருணமல்ல. வரலாற்றில் அரிசி என்பது தமிழர்​களின் கொடையாகும். அலெக்​சாண்​டரும் அரிஸ்​டாட்​டிலும் அரிசி பற்றிய அறிவை ஐரோப்​பாவுக்குக் கொண்டு​சென்​றனர்.

தற்போது, இந்தியா​விடம் வேளாண் பொருள்களை ரஷ்யா இறக்குமதி செய்து​கொள்​ளப்​போவதாக அந்நாட்​டின் அதிபர் புதின் கூறியுள்ள தருணத்​தில், தமிழக உழவுத் தொழிலின் விளைச்சலை மத்திய அரசு பயன்படுத்​திக்​கொள்ள முன்வர வேண்டும்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவில் 44 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கிய தமிழக அரசு வேளாண் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். நலிந்து​வரும் உழவர்​களின் வாழ்வை வளப்படுத்த வேண்டும்.

எல்லா​வற்​றையும் இழந்து நிற்கும் உழவர்​களுக்கு இழப்பீடு உள்ளிட்ட நிவாரணங்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும். மத்திய அரசின் உதவியைப் பெற திமுக கூட்ட​ணியின் நாடாளுமன்ற உறுப்​பினர்கள் மூலமாகத் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்!

- தொடர்புக்கு: vjeeva63@gmail.com

SCROLL FOR NEXT