நாட்டில் அவசர நிலை காலகட்டம் முடிவுக்கு வந்த பின்னர், 1970களில் இந்திய உச்ச நீதிமன்றம் எளிய மக்கள் நல்வாழ்வுக்கான பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியது. குறிப்பாக, ‘பொது நல வழக்காடுதல்’ என்னும் சட்டவியல் தத்துவத்தை நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து நீதிபதி பி.என். பகவதி, பொது நல வழக்குகளில் ஏராளமான முக்கியத் தீர்ப்புகளை வழங்கினார்.
பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே நீதிமன்றத்தை அணுக முடியும் என்னும் சட்ட வழக்கத்தை மாற்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக யார் வேண்டுமானாலும் பொது நல வழக்கு தாக்கல் செய்யலாம் என்னும் சட்ட வகையை நீதிபதி பகவதி உருவாக்கினார்.
இப்படியாக, ஊடகச் செய்திகள் அடிப்படையில் வழக்கறிஞர் ஹிங்கோராணி தாக்கல் செய்த பொது நல வழக்கில், நாடெங்கும் எவ்வித நீதிமன்ற விசாரணையும் இன்றி பல வருடங்கள் விசாரணை கைதியாகவே சிறையில் வாடியிருந்த ஆயிரக்கணக்கான நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அதேபோல சுனில் பத்ரா என்னும் சிறைவாசி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் சிறைக்குள் நடக்கும் சித்திரவதைகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகளை Judicial Activism என்று சட்ட அறிஞர்கள் சிலர் அடையாளப்படுத்தினர். மனித உரிமை தளத்தில் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு என பல துறைகளில் உச்ச நீதிமன்றமும், மாநில உயர் நீதிமன்றங்களும் தொடர்ச்சியாக பல தீர்ப்புகளை வழங்கின.
குறிப்பாக, டி.கே.பாசு என்பவர் பதிவு செய்த வழக்கில், காவல் துறையினர் ஒரு நபரை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை நீதிமன்றம் வழங்கியது. பின்னாட்களில் இந்த நெறிமுறைகள் சட்டமாகவே இயற்றப்பட்டது. அதேபோல, விசாகா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான், பொது இடங்களிலும், பணி செய்யும் இடங்களிலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் வகையிலும் விசாகா கமிட்டிகளை உருவாக்குவது உள்ளிட்ட சட்டப்பூர்வ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் நீதிமன்றங்கள் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கி, சூழலியல் பாதுகாப்பில் பங்காற்றியுள்ளன. குறிப்பாக எம்.சி.மேத்தா என்னும் வழக்கறிஞர் தொடுத்த பொது நல வழக்கில், காற்று மாசுவை தடுப்பதற்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதேபோல, தாஜ்மஹாலை பாதுகாக்கும் நோக்கில், சுற்றிலும் உள்ள பல நச்சு ஆலைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றமும் பொது நல வழக்குளில் ஏராளமான முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது. குறிப்பாக கிருஷ்ணன் என்பவர் பதிவு செய்த பொது நல வழக்கில், நீர்நிலைகளைப் பாதுகாக்க சிறப்பு சட்ட விதிகளை உருவாக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைப் பின்பற்றி 2006-ஆம் ஆண்டு நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான சிறப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியது.
இது மட்டுமன்றி, பல சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் ஏராளமான பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தாமிரபரணி ஆறு பாதுகாப்பு உள்ளிட்ட சில பொது நல வழக்குகளை தாக்கல் செய்து, வெற்றியும் பெற்றார்.
சமூக மாற்றத்தை உருவாக்குவதில், பொது நல வழக்குகள் மூலம் கிடைத்த பல உத்தரவுகளும், தீர்ப்புகளும் பெரும் பங்காற்றியுள்ளன. இதற்கிடையே, தற்போது பொது நல வழக்குகளின் நோக்கத்தையே சிதறடிக்கும் வகையிலான பல வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருவது மிகவும் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.
காழ்ப்புணர்ச்சி காரணமாக பொது நல வழக்குகளை பதிவு செய்யும் அவலம் தற்போது நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாகவே, பொது நல வழக்குகளை தாக்கல் செய்வதற்கான பல விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. அதேபோல, வி.ஆர். கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி போன்று பொது நல வழக்குகளை சமூக அக்கறையோடு அணுகிய நீதிபதிகளின் எண்ணிக்கையும் அரிதாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- m.vetriselvan@gmail.com