சிறப்புக் கட்டுரைகள்

நீதித்துறைப் பற்றிய புள்ளி விவரங்கள்

செய்திப்பிரிவு

தேசிய நீதித்துறை தரவு வலையமைப்பு (National Judicial Data Grid) என்பது, இந்திய உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களைப் பற்றிய தகவல்களின் முழுமையான களஞ்சியம் ஆகும். இது முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டது. இந்த வலையமைப்பு பக்கத்தின் உதவியுடன், இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தவிர, நீதிபதி பதவியிடங்களின் காலியிடங்கள் குறித்த புள்ளிவிவரங்களையும் அறிந்து கொள்ளலாம். இந்த வலையமைப்பு, நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை நாட்டின் பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவுகிறது.

முக்கியமாக நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு, இந்தத் தரவுத்தளம் மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன. இந்த வலையமைப்புப் பக்கத்தில் கிடைக்கும் தரவுகள், நீதித்துறை செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த உதவுகின்றன. இந்த தகவல்கள் தினந்தோறும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

எனினும், இந்தத் தகவல்களைப் புதுப்பிப்பதில் அவ்வப்போது சிக்கல்கள் எழவும் செய்கின்றன. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இருந்து விரிவான மற்றும் துல்லியமான தரவுகளை பகிரும்போதுதான், அந்தத் தகவல்களை ஒருங்கிணைப்பு செய்து, அதன்மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், திறன் மிகுந்த நீதித்துறை செயல்பாடுகளுக்கான கொள்கைகளை வகுக்க முடியும். ஆகவே, அனைத்து நீதிமன்றங்களும் இந்தத் தரவுகளை தவறாமல் பகிர வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

SCROLL FOR NEXT